நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், மரபுசாரா எரிசக்திதுறையில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழகத்தில், அரசு மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தம்புதிதாக அமல்படுத்தினால் உலகளவில் பல முதலீட்டாளர்கள் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய முன்வருவார்கள். இதனால் ஐந்து மாதங்களில் 5 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா எரிசக்தித் துறையில் அதிகரிக்க முடியும் என தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர் சங்கத்தின்(டான்ஸ்பா) பொருளாளர், சாஸ்தா எம் ராஜா கூறியதாவது:
சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட அனைத்து வகையான மரபுசாரா ஆற்றல் உற்பத்தி துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி பிரிவில் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி துறையில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளன.
ஆனால் 2018க்கு பின் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தம் புதிதாக அமல்படுத்தவில்லை. இதனால் கடந்த 2018ல் சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி துறை கட்டமைப்பு 2,500 மெகாவாட் என இருந்தது காற்றாலை மின் உற்பத்தி பிரிவில் 8,500 மெகாவாட் கட்டமைப்பு வசதி இருந்த நிலையில் மூன்று ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி பிரிவில் 500 மெகாவாட்டும் காற்றாலை மின் உற்பத்தி பிரிவில் ஆயிரம் மெகாவாட் மட்டுமே கட்டமைப்பு வசதி அதிகரித்துள்ளது.
ஒருபுறம் தமிழகம் முழுவதும் மின் தேவை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ற மரபுசாரா ஆற்றல் உற்பத்தி துறை வளர்ச்சி பெறாதது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக உள்ளது.இன்று நாடு முழுவதும் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின் பற்றாக்குறை ஏற்படும் என பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என தொழில்துறையினர் அனைவரும் நம்புகிறோம்.இன்றைய சூழலில் தமிழக அரசு மரபுசாரா எரிசக்தி துறை மின்சாரம் கொள்முதலுக்கான ஒப்பந்தம் புதிதாக அறிவிக்க வேண்டும். மேலும் தனியார் பங்களிப்பு(Public Private Partnership) திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இதனால் உலக அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் கட்டுவார்கள். இதனால் ஐந்து மாதங்களில் தமிழகத்தில் மரபுசாரா எரிசக்திதுறை பிரிவின்கீழ் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் செய்வதற்கான புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதது என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள மரபுசாரா எரிசக்தி துறை எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். இதை கருத்தில் கொண்டு இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.