கோவையில் கடந்த 24 மணிநேரங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு கோவையில் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், இன்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் பாஜக பிரமுகர்கள்களான பொன்ராஜ், சிவா ஆகியோரின் கார்கள், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரின் இரண்டு ஆட்டோக்கள் மற்றும் கார் மீது கோடாரியால் கண்ணாடியை உடைத்தும், டீசல் ஊற்றியும் மர்ம நபர்கள் எரிக்க முயற்சி செய்து உள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் மூன்று தனிப்படை அமைத்தும், CCTV கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து, ரத்தினபுரியில் உள்ள மண்டல் தலைவர் மோகன் வெல்டிங் பொருட்களை விற்கும் கடையிலும், மேட்டுப்பாளையத்தில் மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல்களை உடைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.கோவையில் கடந்த 24 மணிநேரங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக போலீசார் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
24 மணிநேரத்தில் 5 இடங்களில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல். கலவர பூமியாகும் கோவை
