1964 ஆம் ஆண்டு திரும்புகிறதா?: கோவையிலும் விஸ்வரூபமெடுக்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்

Pi7_Image_WhatsAppImage2022-10-15at11.44.40.jpeg

THE KOVAI HERALD:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது. அந்தக் குழுவின் துணைத் தலைவரான பர்த்ருஹரி மஹ்தாப், “தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது பிராந்திய மொழி இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம் பெற்றிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, ‘இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். இந்தி, 100 விழுக்காடு பின்பற்றப்பட வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐஐடி., ஐஐஎம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இருக்கும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும்’ என்ற பரிந்துரைகள் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதற்கான முயற்சி இது’ என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள், பண்பாடுகள்கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவருகிறார்கள். இதை எப்படியாவது சிதைத்துவிட்டு ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவ வேண்டும் என்று மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுகிறது. இது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்” என்று விமர்சித்திருக்கிறார். தமிழகத்தில் 1965-ல் நடைபெற்ற இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்திருக்கிறார். “1957-ம் ஆண்டு தி.மு.க முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கான உரிமையையும் பாதுகாப்பையும் வலியுறுத்திக் குரல் கொடுத்தது. அதையடுத்து, இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்கிற உறுதிமொழியை அன்றைய பிரதமர் நேரு வழங்கினார். அந்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தியைத் திணிக்க முயற்சி நடந்தது. அதை எதிர்த்து 1965-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் தமிழைக் காக்கத் தீக்குளித்தும், துப்பாக்கிக்குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயிர்த் தியாகம் செய்த இளைஞர்களின் வரலாற்றை மறந்துவிட வேண்டாம்” என்று ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவாக எழுந்துள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் இந்திக்கு எதிர்ப்பும் வலுத்து போராட்டங்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமீபத்தில் தம் கட்சி சார்பாக கருத்துத் தெரிவித்த அதிமுக சட்டமன்றக் கொறடா எஸ்.பி.வேலுமணி, ‘இந்திமொழிக் கொள்கையில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. அண்ணா கொடுத்த வெளிச்சத்தில்தான் மொழிக்கொள்கையை அதிமுகவும் பின்பற்றி வருகிறது. எந்த சூழலிலும், எந்த நிலையிலும் இந்தி மொழி திணிப்புக்கு அதிமுக துணைபோகாது. திணிப்பு என்று வரும்போது கடுமையான எதிர்ப்பும் போராட்டமும் இங்கிருந்தே கிளம்பும்’ என்று எச்சரித்திருக்கிறார். உலகத் தமிழ் கூட்டியக்கம், கோவை தமிழ்சங்கமும், தமிழ்பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தித் திணிப்புக்கு எதிராக கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக வெள்ளியன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தியிருக்கிறது. இதில் தலைமையேற்ற தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், உலகத்தமிழ் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சி. சுப்பிரமணியம், ‘‘இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. பாராளுமன்றத்தில் 30 எம்பிக்கள் கொண்ட அலுவல் மொழி தொடர்பான பரிந்துரைகளைத் தருவது தொடர்பான அக்குழு, குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிக்கையைக் கொடுத்துள்ளது. அந்த குழுவில் பாஜக மட்டுமல்ல, பிஜூ ஜனதா உள்ளது. ஆம் ஆத்மி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி,. தெலுங்கு தேசம், ஜனதா கட்சி எல்லாம் உள்ளது. இவர்கள் கொடுத்திருக்கும் பரிந்துரையின்படி இனி இந்தியாவை மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள். இந்தி பேசக்கூடிய மாநிலங்களை அடக்கியிருக்கிற தொகுதிகளை ஏ பிரிவு என்றும், அரைகுறை இந்தி பேசுகிற மாநிலங்களை பி பிரிவு என்றும், இந்தி பேசாத தென்னகத்து மாநிலங்களை எல்லாம் சி பிரிவாகவும் வகுத்திருக்கிறார்கள். முதல்கட்டமாக ஏ பிரிவில் உள்ள ஐஏஎம், ஐஐடி, ட்ரிபில் ஐடி, என்ஐடி போன்ற நூற்றி பதின்மூன்று கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடிய அனைத்துத் துறைகளிலும் இந்தி வழியிலேயே உயர்கல்வியை கற்பிக்க வேண்டும் என்ற பரி்நதுரையை செய்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக பி மற்றும் சி பிரிவுக்கும் வரும். ஏ பிரிவில்தானே, இந்திப் பேசுகிற மாநிலங்களிலேதானே இதைச் செய்கிறார்கள் என்று அலட்சியமாக இதை விட முடியாது. ஏனென்றால் அங்கே படிக்கிற மாணவர்கள் எல்லாம் அகில இந்திய அளவிலே தேர்வு செய்யப்பட்டு கல்வி கற்கச் சென்ற மாணவர்கள். அதில் மட்டும் மேற்கு வங்காளத்திற்கு தெற்கே உள்ள தென்னகத்து மாணவர்கள் 60 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளார்கள். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எந்த ஐஐடியிலும் சேர முடியாது. இந்தி தெரியவில்லை என்றால் அங்கே தற்போது இருக்கிற மாணவர்களும் படிக்க முடியாது இப்படி ஒவ்வொன்றிலும் இந்தியைத் திணித்து மீண்டும் மாநில மொழி உரிமையை, தாய்மொழி உரிமையை நசுக்கும் செயலைத்தான் இந்த திட்டம் செயல்படுத்துகிறது!’’ என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக சனியன்று கோவையில் திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடருமேயானால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் கடுமையாகும் என்றும், 1967 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலை ஏற்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கோவையைப் பொறுத்தவரை 1967-க்கு முன்பு மட்டுமல்ல, அதற்குப் பின்பும் கூட இந்திக்கு எதிராக போராட்டத்தில் கொந்தளிப்பு காட்டிய மாவட்டம். 1965 ஜனவரி 26-ம் தேதி இந்தி ஆட்சி மொழி என நேரு அறிவித்து விட்டார். அதை எதிர்த்த அண்ணா 1963 மற்றும் 1964 ஆம் ஆண்டுகளிலேயே முன்னோட்டமான போராட்டங்களை தமிழகமெங்கும் முடுக்கிவிட்டார். அந்தப் போராட்டங்களில் ஒன்றாக இந்தி ஆட்சிமொழி சட்டப் பிரிவு நகலை தீயிட்டுக் கொளுத்த அண்ணாவிடம் பெயர் கொடுத்தார்கள் இளைஞர்கள். அதில் முதல் ஆளாக பெயர் கொடுத்த இளைஞர்களில் முக்கியமானவர் கோவை மு.ராமநாதன். 1964 ஜனவரி தொடக்கத்தில் கட்சியினர் இரண்டாயிரம் பேர் மாலையிட்டு கோவை ஒப்பணக்கார வீதியிலிருந்து அவரைப் போர்க்களத்திற்கு அனுப்பும் போராளி போல வழியனுப்பி வைத்தார்கள். இந்தப் போராளி திமுக கொடியேந்தியபடி செல்கிறார். கோவை நகராட்சி அலுவலகக் கட்டிடம் நிற்கிறார். தோளோடு தோளாக திமுக கொடியை சாற்றிக் கொண்டு தன் கையில் வைத்திருந்த இந்தி ஆட்சி சட்ட(மொழி)ப்பிரிவு காகித நகல்களை தீயிட்டுக் கொளுத்துகிறார். போலீஸார் சூழ்கிறார்கள். அந்த இளைஞரைக் கைதும் செய்கிறார்கள். இது அப்போது திமுக ஊர்தோறும் எடுத்த போராட்ட வடிவம். 3 மாதம் விசாரணைக் கைதி. பிறகு 6 மாதம் தண்டணை அனுபவித்த ராமநாதன் வெளியே வந்து திரும்பப் போராட்டத்தில் கைது செய்யப்படுகிறார். சிறை செல்கிறார். இப்படி ராமநாதன் மட்டுமல்ல, திமுகவில் ஏராளமானோர் கோவையில் மட்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வரலாறு உள்ளது. அப்படி எதிர்ப்புப் போராட்டம் கடுமையாகவே இங்கே கனலை கக்கியிருக்கிறது. தொடர்ந்து நான்கு வருடம் கோவை மொழிப்போர் கலவரத்தால் திமிலோகப்பட்டிருக்கிறது. தீ வைப்பு, கடையடைப்பு என தொடர் போரட்டங்களாக நடந்த காலம் அது. இப்போது திமுக ஆளுங்கட்சி. முதல் எதிர்ப்பு அக்கட்சியிலிருந்தே புறப்பட்டதால் பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்கப் புறப்பட்டுள்ளன. எனவே கோவையில் மத்திய உளவுப் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

KAMALA KANNAN: 92443 17182

scroll to top