கோயமுத்தூரின் கதை : 9. கண்ணகியாக மாறிய கோனிமுத்தா!

78.webp

வே.ரோகிணி

பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது. ஆரண்யக் காடாய் இருந்த தேசத்தில் திரும்பின பக்கமெல்லாம் யானை, குதிரைப் படைகள். படைவீரர்கள் கொட்டகை அடித்துத் தங்கியிருந்தார்கள்.
ஆயிரமாயிரம் கறவை மாடுகள், வண்டி பூட்டப்பட்ட எருதுகள். அவை சுமந்த சுமைகள், வெட்டவெளியில் சமையல் கூடம். பொங்கும் புகை காடேகி நின்றது. இளங்கோசனின் தளபதி ஸ்காந்தபுரத்து தளபதியை சந்தித்து ஆரத்தழுவினார். தன்னிடம் உள்ள படை விவரங்களை எல்லாம் முறைப்படி தெரிவித்தான்.
பதிலுக்கு தன் படை பலத்தையும் அழைத்துச் சென்று காட்டினான் கொங்குவேலனின் தளபதி. இது இரண்டாம் கோப்பெருஞ்சோழனின் ஆணையை நீட்டினான். அதை வாங்கி குழலிலிருந்து உருவி ஓலையை வாசித்தான் கோசன் தளபதி. பதிலுக்கு தன்னிடம் இருந்த ஓலையை நீட்டினான்.
சுவடியில் வரையப்பட்ட ஓர் வரைபடம் அது. சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, இதில் உள்ள பெருவழிகள். கோசன் நாட்டில் எப்படியான வழிகளில் எல்லாம் ஊடுருவி சேரனின் படைகள் சேதத்தை விளைவிக்க வாய்ப்புண்டு என்பதை துல்லியமாகக் காட்டும் வரைபடம்.
கொங்குவேலனின் தளபதியின் கண்களில் மின்னல், உதட்டில் குறுநகை இழையோடியது. ‘இன்றிரவு நீர் எம் அரசரை வந்து சந்திக்கலாம்!’ என்று தாழ்பணிந்து விடைபெற்றான் இவன்.
‘எந்த நேரமும் செங்குட்டுவன் படை திரட்டி வரலாம்!’ என்பதே இவர்களுக்கு செய்தி.
எந்த நேரமும் என்றால் ஒரு வாரத்திலும் நடக்கலாம். மாதங்கள் ஆகலாம். வருடம் கூட ஆகலாம். அதுவரை சிறு, சிறு படைகள், வீரர்கள் ஆங்காங்கே ஊடுருவலாம். ஒற்றர் படைகள் புகுந்து கண்காணிக்கலாம். மக்களிடம் ஏதேதோ சொல்லி குழப்பத்தை விளைவிக்கலாம். முறைப்படியான போர் என்பதற்கு முந்தைய சீர்கேடுகள் சகலமும் நடந்தேறலாம்.
அதற்கு முன் மக்களை அதற்கு தயார்படுத்த வேண்டும். சிந்தித்தான் இளங்கோசன். சேரன் படைதொடுக்க உள்ளது என்றதும் இவனுக்கு மூத்த தளபதிதாதன் கோணிமுத்தாவுக்கு தன் தலை ஈந்தான். அதற்கடுத்தது இயல்பாய் பொறுப்புக்கு வரவேண்டியவன் இவன்.
அரசனாகப்பட்டவன் கோணனாக இருந்தான். அவனுக்கு மூத்தவன் கோவன், அதற்கு மூத்தவன் கோணன். இப்படி மாறி மாறி வரும் தலைமுறையில் கோணனும், கோவனுமாகவே நின்றார்கள். இந்த முறைதான் பெண்ணரசிகள் பட்டத்திற்கு வந்துள்ளார்கள். அவர்கள் ஒன்றும் வாளெடுத்துப் போர் புரிய வரப்போவதில்லை. அரசனின் பொறுப்பு எப்படியோ அப்படித்தான் அரசிக்குமான பொறுப்பு.
அவர்களின் முழுப்பொறுப்பு குடிகளே. அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், வேளாண்மை, விளைச்சல், பங்கீடு, வரி, அண்டை நாட்டு உறவு அவ்வளவே. அதையெல்லாம் தாண்டி நாட்டிற்கு கேடு வரும் சமயம் உயிர்கொடுத்து மண்ணைக் காப்பதுதான் தளபதிகள் வேலை.
ஆக அதிகாரங்கள் எல்லாம் தளபதிகளிடமே இருந்தது. மக்களிடம் மன்னனுக்கு உள்ள செல்வாக்கை விட தளபதிக்கே இருந்தது. அரசனிடம் பயம் இருந்தது. அரசதளபதிகளிடமே பயத்துடன் பக்தியும் இருந்தது. பயபக்தி.
இப்போதைய தளபதியாகப்பட்ட இளங்கோசன் கோணி-முத்தா அரசிகளை சந்தித்தான். ஆசனத்தின் இருமருங்கும் கஜதந்தங்கள் மினு, மினுக்க அமர்ந்திருந்த அரசிகள், தளபதியை எழுந்து நின்று வரவேற்றார்கள். தம் இடப்புறம் உள்ள ஆசனத்தில் அமரச் செய்தார்கள். பிறகே அவர்கள் அமர்ந்தார்கள்.
‘‘சொல்லுங்கள் தளபதி. நல்ல சேதிதானே?’’
‘‘ஆம் தேவிகாள். நம் சோழ சக்கரவர்த்தி நமக்கு பயமேதும் இல்லாதிருக்க பெரும்படையையே அனுப்பியுள்ளார். அவை நம் நாட்டின் முப்புற எல்லைகளிலும் காவல் புரியும். மூல எல்லையான ஸ்காந்தபுரத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். நாம் நிம்மதியாக இருக்கலாம். என் முறைக்கு நம் படைகளை திரட்டி நம் பெருவழியில் காவலிருக்கிறேன். நம் மக்களின் இயல்பு வாழ்க்கை நடக்கட்டும்!’’ என்று உறுதியுடன் சொன்னார். கோணி, முத்தா இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் சமிக்ஞையில் தளபதியிடம் ஏதோ சொல்லத் துடிப்பது தெரிந்தது.
‘‘சொல்லுங்கள் அரசியே!’’ என்றான் இளங்கோசன்.
‘‘இல்லை. எம் மண் விட்டு வந்து ஆண்டு பலவாயிற்று. அங்கே நமக்கான வனதேவதைக்கு ஆண்டுதோறும் வழிபாடு நடத்துவது வழக்கம். அது இங்கே வந்த பிறகு தடைபட்டு நிற்கிறது. வடக்கே அதற்கென கோயிலமைத்து, வனதேவதையும் வைத்து விட்டோம். மக்கள் தங்குவதற்கும், வசிப்பதற்குமான இடமாக இதைத் தேர்வு செய்து மண்கோட்டையையும் எழுப்பி விட்டோம். இது நம் மக்கள் வாழத்தகுதியுள்ள நாடாகவே மாறி விட்டது. இந்த அரண்மனைக்குள் எதிரிகள் சுலபமாக நெருங்க முடியாது என்ற அளவில் அரணும் அமைத்து விட்டோம் இப்படியிருக்க, இங்கிருந்து ஒரு காத தூரத்தில் இருக்கும் நம் வனதேவதைக்கு விழா எடுப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். அதற்குள் இந்த சேரனின் படையெடுப்பு அச்சம் நமக்குள் வந்து விட்டது. அதுதான் தேவதைக்கு விழா எடுப்பதை நடத்தலாமா? வேண்டாமா என்று யோசனை. அதை தளபதியான தங்களின் ஆலோனை கேட்டுவிட்டே செய்யலாம் என்றிருக்கிறோம்!’’ என்றார்கள்.
அதைக் கேட்டு புன்முறுவல் பூத்தான் தளபதி.
‘அரசியரே. இது என்ன கேள்வி. எதிரிநாட்டுப் படையெடுப்புக்காக அரசர்கள், தளபதிகள், ஏன் மக்கள் கூட பசியோடிருக்கலாம். நம் குலதேவதை பசி போடலாமா? கூடவே கூடாது. ஒவ்வொரு யுத்தத்ததின் போதும் தன் சங்கறுத்து தேவிக்கு சுயபலி கொடுக்கும் எங்கள் கூட்டத்திற்கு இது மரபுமன்று. திட்டமிட்டபடி வைபவத்தை நடத்துங்கள். அதற்கு முழு பாதுகாப்பும் நம் படைகள் அளிக்கும்!’’ என்றான்.அரசிகள் முகத்தில் அபரிமித மகிழ்ச்சியின் சுடர். இப்பவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘இந்த விஷயத்தை கொங்குவேலன் தளபதி மாலை தங்களை சந்திக்க வரும்போது அவனிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் அரசே!’’ என்ற வேண்டுகோளுடன் தன் உடைவாளை தோல் உறைக்குள் செருகி பின்னோக்கி நடந்து சென்று திரும்பி கம்பீரமாக சென்றான் தளபதி.கோடை வெப்பம் சுரீரென்று அடித்தது. அந்த வெப்பத்தை தாங்கி நின்றன வானுயர்ந்த மரங்கள். அப்படியும் அதன் இலைகள் சருகாய் துவண்டன. கிளைகள் கருப்பாய் காய்ந்தன. நிறைய உதிர்ந்தன. அவற்றை கோதி விடுவது போல் கோடை மழை இடி, இடித்துப் பெய்தது. கோட்டான்களும், ஆந்தைகளும், மயில்களும், இன்னபிற பறவைகளும் ஓசைகள் எழுப்பி ஓடி ஒளிந்தன. காடுகளில் வசிக்கும் சிறுத்தை, புலி, கரடி, யானை எல்லாம் தங்களுக்கு ஏற்ற பதுங்குமிடங்கள் தேடி அலைந்தன. அந்த அலையிலும் கோணி முத்தா அரசிகளின் கீழ் மக்கள் குதூகலித்தனர். காடேகி வானுயர்ந்த மூங்கில் ஒன்றை வெட்டி நூற்றியொன்பது பேர் புறத்திற்கு ஐம்பத்தியிரண்டு பேர் எதிரும் புதிருமாக நின்று தூக்கி வந்தனர். அதன் நடுவே வந்தவனுக்கு தலையில் பூச்சூடி, மாலையிட்டு மரியாதை செய்திருந்தனர். இரண்டு காத தூரத்தில் வெள்ளிமலையில் முகிழ்த்த மூங்கிலுக்கு வலு அதிகம். உயரமும் அதிகம். அங்கே தேவதைக்கு மூங்கில் எடுத்து வருவதுதான் காலம் காலமாக நடக்கும் ஐதீகம். அதோ, அங்கே ஒரு சப்பரம் தயராகிறது. அதில் எண் கரங்களைக் கொண்ட ஒரு சிற்பம் அமைக்கப்படுகிறது. இலைதழைகள், பூ, பூச்சரங்கள், பட்டாடைகள் கொண்டு அது ஜோடிக்கப்படுகிறது. அதை முன்னிருத்தி நான்கு ஆள் .உயரத்தில் ஒரு பெரும் சப்பரம். அதை எடுக்கும் பல்லக்குத்தூக்கிகள் ஒரு நூறு பேர்.
‘ஒ.. ஓ.. கோணி…!’’
ஓ.. ஓ.. அரசி…!’’
‘‘ஓ.. ஓ.. முத்தா…!’’
‘‘ஓ.. ஓ அரசி…!’’
விநோதமான மொழியில் அவர்களின் ஓங்காரம் புறப்படுகிறது. சப்பரம் தூக்கப்படுகிறது. கொம்பு, குழாலு, தாரை, தப்பட்டை வாத்தியங்கள் முழக்கப்படுகிறது.
‘‘ஓ.. ஓ… ஓ.. மகமாயி… கோணி முத்தா.. கண்ணாத்தா.. பொன்னாத்தா…!’’
மக்கள் ஆயிரமாயிரமாய் சப்பரத்தின் பின்னே திரண்டு நிற்கிறார்கள். அந்தப் பெரும்கூட்டத்தை நோக்கி வெண்ணிறப் புரவிகள் இரண்டு பாய்ந்து வருகிறது. அதன் மீது கம்பீரமாய் இளமை ததும்பும் முகத்துடன் இருவர். சூரியப் பிரகாசத்தில் ஒளிர்கிறார்கள்.அந்தப் புரவியும், அதில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்களும் யார்? என்று கொஞ்ச நேரம்தான் உற்று நோக்கினர் மக்கள். பிறகு தம் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர். புரவிகள் வேகத்தைக் குறைத்தன. அப்படியே நின்றன. அந்தப் புரவி மீது இருந்த இருவரும் அதிசயமாய் அந்த ஊர்வலத்தைப் பார்த்தனர். அந்த ஊர்வலம் இவர்களைக் கடந்து செல்ல ஆரம்பித்தது. இவர்கள் அந்த திருவுருவச் சிலை மீதே வைத்த கண் வாங்காது இருந்தனர். பெண் தெய்வம். எட்டு கரங்கள். ரத்தச்சிவப்பில் உதடுகள். ஆங்காரரூபினியாய் வெளிக்காட்டும் நாக்கு. சுட்டெரிக்கும் கண்கள். ஆங்கார ரூபினியாய் நிற்கும் அவள் காலடியில் கிடக்கும் வாள் தாங்கின அரக்க உருவம். இவள் கையிலோ வேல். வில், சூலம் உடுக்கு, தீச்சட்டி. ‘‘கோணிமுத்தா…!’’ கூட்டம் எழுப்பும் கோஷம் இவர்களுக்குப் புரியவில்லை. மாறாக, ‘‘இது நம் பத்தினித் தெய்வம் கண்ணகியன்றோ?’’ என்று ஒருவன் மற்றொருவனிடம் கேட்டான். அவன் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான். அவ்வளவுதான். ஒன்று சொன்ன மாதிரி குதிரையிலிருந்து குதித்தனர். ‘‘எண்ட கண்ணகி தேவியே சரணம்!’’என்று நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து கும்பிட்டனர். அவர்கள் புதியவர்கள். வேற்று நாட்டவர்கள், வழிப்போக்கர்களாக வந்திருக்கக்கூடும் என்றுதான் மக்கள் நினைத்தனர். அவர்கள் இருவரும் சேரன் செங்குட்டுவன் மகராஜாவின் ஒற்றர்கள் என்பது யாருக்கும் அப்போதைக்கு தெரியவில்லை. —கதைப்போம்

THE KOAVI HERALD KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top