10 ரூபாய் நாணயங்களை அவசியம் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்

நாட்டில் பல பகுதிகளில் ரூ.10 நாணயம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.  இவை போலியானவை என்ற கருத்து பரவலாக உள்ளது.  இது குறித்து மாநிலங்களவையில் ”இவ்வாறு ரூ.10 நாணயங்கள் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகின்றன?  இது போல ஏற்றுக் கொள்ளாதது குறித்து வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா?” என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அ:ளித்த பதிலில், “ரூ.10 நாணயம் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு மக்களுடைய பழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் சட்ட பூர்வமாக நடைபெறக்கூடிய ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு பத்து ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்தலாம்.  அவ்வப்போது 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்குவதற்கும் தவறான எண்ணங்களை போக்கவும் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அடிக்கடி ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறது. மேலும்,  எனவே நாட்டு மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமுமின்றி உபயோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

scroll to top