​தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதுமையான வேளாண் கல்விமுறைகள் – மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

IMG_2903-scaled.jpg

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை உயர்கல்வி திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி அளித்துள்ள ரூ. 24.86 கோடி நிதி மற்றும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ள ரூ. 5 கோடி நிதியுதவி மூலம் மாணவர்கள் கல்வி கற்றல் முறையை மேம்படுத்தி, வேளாண்; வணிகத்தை நிர்வகிப்பதற்கு தலைவர்களை உருவாக்கவும் வேலை தேடும் மாணவர்களை வேலை வழங்கும் தொழில்முனைவோராக மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.​​

இதன் ஒரு பிரிவாக வேளாண்மை–உழவர் நலத்துறை அமைச்சர் ஆ.சு.மு.பன்னீர்செல்வம் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட மெய்நிகர் உண்மை ஆய்வுக்கூடத்தை பார்வையிட்டு அங்கு தயாரிக்கப்பட்ட 15 வேளாண் சார்ந்த பாடத்தொகுதிகள்  பற்றி தெரிந்து கொண்டார். மாணவர்கள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பாடத் தொகுதியை அமைச்சர் அவர்களுக்கு செயல்படுத்தி காட்டினார்கள். பல்கலைக்கழகத்திலுள்ள மொழிகற்றல் பயிற்சி கூடத்தை அமைச்சர் பார்வையிட்டார். இங்கு மாணவர்கள் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியில் கலந்துரையாடியதை அமைச்சர் பாராட்டினார். மேலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேச பயிற்சி எடுத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அமைச்சர் நவீன மின்னனு வேளாண் விரிவாக்க கூடத்தை பார்வையிட்டார்கள். இங்கு மாணவர்கள் மின்னனு குறும்படங்கள் விளம்பர பலகைகள் உருவாக்குவதை பற்றி விளக்கினார்கள். தற்போது வெளிநாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறும் 37 மாணவர்கள் நிகழ்நிலை கூட்டத்தின் மூலம் அமைச்சர் அவர்களுக்கு தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளையும் அதனால் அடையக் கூடிய பலன்களையும் தெரிவித்தனர். துபாய், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளிலிருந்து மாணவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கல்வி முறை மேம்பாட்டிற்கான வசதிகள் மற்றும் புதிய வேளாண் கல்விமுறைகள் பற்றி அமைச்சர் அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

scroll to top