நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, உடனடியாகச் சென்று உதவி செய்ய முயன்றுள்ளனர். ஆனால், ஹெலிகாப்டர் கீழே விழுந்த உடனே தீப்பற்றி எரிந்ததால் அவர்களால் , விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. அப்போதும், தீயில் கருகிய இரண்டு, மூன்று பேரை காப்பாற்ற முற்படும் போது, அவர்களின் கைகள், கால்கள் தனியாக வந்து விட்டதாகவும் முதலில் மீட்பு பணிகளில் ஈடுபட முயன்றவர்கள் தெரிவித்தனர். ஒருவேளை, தீவிபத்து ஏற்படாமல் இருந்திருந்ததால், உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், காட்டேரி பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததை வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, பனி மூட்டத்திற்குள் மறைந்த ஹெலிகாப்டர், திடீரென மரங்கள், பாறைகள் மீது மோதியது போன்ற சத்தம் எழுந்தது. இதனை வீடியோ எடுத்த சுற்றுலாப்பயணி, என்னாச்சு, உடஞ்சுருச்சா… எனக் கேட்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.