கோவை நவ இந்தியாவில் செயல்பட்டு வரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், ‘36-வது ஆண்டு விழா’ கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், கல்லூரியின் கடந்த ஆண்டின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர் மன்றத் தலைவர் மாணவி பி.எம். தாருணிகா வரவேற்றார்.
கோவை வருமானவரித் துறை தலைமை ஆணையர் எம்.பூபால் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
“கல்லூரி கோவில் போன்றது. இதில் குரு ஆசிரியர்கள். சத்சங்கம் பாடம் நடத்துவதாகும். சீடர்கள் மாணவர்களாகிய நீங்கள் தான். எப்படி நாம் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்றால், மன அமைதி, நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை ஏற்படுகிறதோ? அத்தகைய நற்சிந்தனைகள் கல்லூரியில் தோன்றும்.
இங்கு படிக்கும் நீங்கள் உங்களுடைய இலக்கு என்ன என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய முதல் லட்சியம், உங்களை உயர்த்திக் கொள்வதாக இருக்க வேண்டும். அதற்கான தீப்பொறி உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. மாணவர்களில் கல்வியில் சிறந்தவர்கள், விளையாட்டில் சிறந்தவர்கள் என பலதரப்பினர் உள்ளனர். அதற்கான தகுதி உங்களிடம் உள்ளது. அதை வெளிப்படுத்துவது கவனிக்கத்தக்கதாகும். நமக்கான திறமை என்ன என்பதை உணர்ந்து விட்டால், அதை ஆசிரியர்கள் மெருகேற்றி விடுவார்கள். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே உங்களை வாழ்க்கையில் வெற்றி பெறச் செய்யும். ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டே இருங்கள், வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கல்லூரியில் படித்து முடித்துச் செல்லும் சிறந்த மாணவர்களில், இளநிலைப் பட்டப்படிப்பில், இயற்பியல் துறை மாணவி ஆர்.பத்மபிரியா, முதுநிலைப் பட்டப்படிப்பில் எம்.பி.ஏ. மாணவர் எம்.தினேஷ்குமார் மற்றும் செமஸ்டர் தேர்வுகளில் ‘ரேங்க்’ பெற்றவர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள், மாணவத் தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு மன்றங்களில் சாதித்த மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முடிவில் மாணவர் மன்றத் துணைத் தலைவர் எம்.சிபி சரண் நன்றி கூறினார்.