ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31வது மாணவர் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவானது யூடியூப் வழியாக நேரலையாக ஒளிபரப்பானது.
விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது, உலகின் பல்துறை வளர்ச்சியில் பெண்களின் பங்கு பற்றிக் குறிப்பிட்டார். மேலும் மாணவியர் கல்லூரிப் பருவத்தில் தங்களின் திறமைகளையும் தலைமைப்பண்பையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்கள் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார். விழாவில் தலைமை உரையாற்றிய எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி, மனப்பூர்வமான ஈடுபாடே சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்றதோடு சிறப்பாகச் செயல்படுவதை சாதனையாக நிறுத்திக் கொள்ளாமல் வாழ்க்கையின் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
இணையவழியில் நடந்த மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மன்றப் பொறுப்பாளர்களை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி நியமித்தார். தொடர்ந்து மாணவர் மன்றப் பொறுப்பாளர்கள் தங்களைப் பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக வி.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், வருமான வரித்துறை துணை ஆணையர் இணைய வழியில் பங்கேற்றார். அவர் பேசும்போது, மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெற வேண்டும். அதிலும் குறிப்பாகப் பெண்கள் மன வலிமையுடன் இருந்தால் எத்தகைய உயரங்களையும் எட்டிப் பிடிக்க முடியும். நமது சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம் கனவுகளை, இலட்சியங்களை அடைய வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருந்தால் பெண்கள் சாதிப்பதைத் தடுக்கவே முடியாது என்பதற்குச் சில சாதனையாளர்களை எடுத்துக்காட்டாகக் கூறி மாணவியரை உற்சாகப்படுத்தினார். மாணவர் மன்றத் தலைவர் பூஜா நன்றியுரை வழங்கினார்.