THE KOVAI HERALD
ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பது மற்ற தேசங்களுக்கு விதியோ, சதியோ தெரியாது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை சாபம் போல் இருக்கிறது. கோவை வெள்ளலூரில் அமைக்கப்படவிருந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் மதிப்பிலானது. கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு நாற்பது கோடி ரூபாய் பணிகள் முடிந்த நிலையில் அந்தத் ஊற்றி மூடி விட்டு, வேறொரு இடத்தில் அத்திட்டத்தை கட்டமைக்க முயல்கிறது இப்போதைய திமுக அரசு. அது பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த திட்டம் இடம் மாறினால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சவுக்கு சங்கர் முதல் சாதாரண சங்கர் வரை இந்த திட்டத்தை மாற்றியமைப்பதால் நடக்கவிருக்கும் ஊழல்களைத் தனிமனித மற்றும் ஆட்சியாளர்களுக்கான பலன்களை பட்டியலிட்டு வலைத்தளங்களில் சாடிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து இந்த திட்டத்தை இடம் மாற்றியமைக்கும் திட்டமில்லை என்று உயர் அதிகாரிகள் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியென்னதான் நடக்கிறது இந்த விவகாரத்தில்? அது பற்றிய செய்தி தொகுப்பு இது;
இந்திய அரசு, பாரத் மாலா திட்டத்தின் கீழ் ‘பஸ் போர்ட்’ என்கிற ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை வகுத்திருந்தது. அதற்காக தமிழ்நாட்டில் கோவை, சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் கோவை மாவட்டத்தில் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து மூன்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், வெள்ளலூரில் தமிழக அரசு தேர்வு செய்த இடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால் தமிழக அரசே கோவை மாநகராட்சியுடன் இணைந்து வெள்ளலூரில் இந்த பேருந்து நிலையத்தை அமைக்க அடிக்கல் நாட்டியது..
இந்த திட்டப் பணிகள் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றால் வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் சுணக்கமடைந்தன. அதன் பின்னர் ஒரு வருடம் முன்பு திமுக அரசு அமைந்த பிறகு இந்தப் பணிகள் சுத்தமாக நிறுத்தப்பட்டன. புதிய அரசு அமைந்த நேரத்தில் இங்கே வந்து பார்வையிட்ட புதிய அமைச்சர் ஒருவர், ‘புதிய பஸ்நிலையம் இங்கே அமைவது சரியல்ல எனவும், இதை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டதாக இன்றளவும் பேச்சு உள்ளது. ஆகவே கட்டப்பட்ட கட்டடங்கள் இரண்டு அடுக்கு சிமெண்ட் தூண்களுடன் சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில் வாய்பிளந்து காணப்படுகிறது. அங்கே புல் பூண்டுகளும், முட்புதர்களும் முளைத்து விட்டன.
இந்த நிலையில்தான் வெள்ளலூரில் அரைகுறையாய் நிற்கும் இந்த பேருந்து நிலையத்துக்கு பதிலாக வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. அதாவது இந்த வெள்ளலூர் பகுதியில் குப்பைக்கிடங்கு உள்ளது. அதில் தினமும் எழும் புகையால் சுற்றுப்பகுதியில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும்பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த குப்பைக்கிடங்கின் மூலம் பல்வேறு விதமான நோய்கள் பரவுகின்றன. 1996-இல் அமைந்த இந்தக் குப்பைக்கிடங்கை அகற்றும்படி இருபத்தைந்து ஆண்டுகளாக மக்கள் தொடர் போராட்டங்கள் செய்து வந்துள்ளனர். இப்போதுபேருந்து நிலையமும் இங்கே கோவைக்கான பிரதான பேருந்து நிலையமும் அமையுமானால் வெளியூர் பயணிகளும் பாதிப்புக்கு உள்ளாவர். அதன் மூலம் மக்கள் போராட்டம் இன்னமும் பெரிதாகும். தவிர சென்னை, சேலம், திருச்சி என்று வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் இந்த வெள்ளலூர் வந்து செல்வதில் சிரமம் உள்ளது எனவே இந்த நிலை வராது இருப்பதற்காக கோவை நீலம்பூர் எல்அண்ட்டி பைபாஸ் சாலையில் உள்ள நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிடுவதாக செய்திகள் வர ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில்தான் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக இதைப் பற்றி அறிக்கை வெளியிட்டார். சமீபத்தில் கோவை வந்த அவர் இது குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
“முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. விளை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களையும் வளைத்துப் போட்டு வருகிறது. தாங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலத்தின் மதிப்பை உயர்த்த, அரசின் அனைத்துத் துறைகளின் அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றாகத்தான் இந்த பேருந்து நிலையத்தையும் இடம் மாற்றும் வேலையைச் செய்து வருகின்றது. கோவை நகருக்குள் இருந்த நான்கைந்து பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து வெள்ளலூரில் ஏறத்தாழ அறுபது ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூபாய் நூற்றி அறுபத்தி எட்டு கோடியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் முக்கிய புள்ளிகள் தன் குடும்பத்தினரின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்ற நிலையில், அத்திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளனர். அப்படி இது கைவிடப்பட்டால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும்!’’ என்று காட்டமாகத் தெரிவித்த அவர், ‘‘இந்த திட்டம் கைவிடப்பட்டால், வேறு இடத்தில் மாற்றினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அதிமுக சார்பில் இங்கே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!’’ என்றும் அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவிநாசி – திருச்சி புறவழிச் சாலை அருகே ஸ்டாலின் குடும்ப நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அதற்காகவே அந்த இடத்திற்குப் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க இந்த திமுக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுவதாகவும் இங்கே பிரச்சாரமே நடந்து வருகிறது. .
இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 24) கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, “வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக முடிவுகள் கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் தேவையின் அடிப்படையிலும்தான் செயல்படுத்தப்படும். அப்படி உருவாக்கப்படும் அரசின் நலத் திட்டங்களை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள்” என்றார்.
வெள்ளலூர் பேருந்து நிலைய மாற்றம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், `வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளோம். அது தவிர இந்த விவகாரத்தில் தற்போதைக்கு வேறு எதுவும் சொல்ல இயலாது!’’ என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் கோவை மாவட்ட நிர்வாகம் கோவை எல்அண்ட்டி பைபாஸ் சாலை அருகே திட்டமிட்டபடி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் என்று அறிவித்திருக்கிறது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கும், அரைகுறையாய் கட்டப்பட்டு நிற்கும் பேருந்து நிலையமும் எல்அண்ட்டி பைபாஸ் சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. அதே போல் புதிதாக திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படும் நீலம்பூர் பேருந்து நிலையமும் எல்அண்ட்டி பைபாஸிலிருந்து அரைகிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது எல்அண்ட்டி பைபாஸ் சாலை என்பது வடகிழக்கு- தென்மேற்கு திசையில் நீலம்பூர் டூ மதுக்கரை வரை 25 கிலோமீட்டர் தொலைவு நீள்கிறது. அதில் நீலம்பூர் என்பது எல்அண்ட்டி சாலையின் ஆரம்பத்திலேயே உள்ளது. வெள்ளலூர் என்பது நீலம்பூர் எல்அண்ட்டி சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எல்அண்ட்டி பைபாஸ் சாலை அருகேதான் பேருந்து நிலையம் அமைகிறது. அது வெள்ளலூரா, நீலம்பூரா என்பதுதான் மிலியன் டாலர் கேள்வி. நீலம்பூர் அருகே திமுக ரியல் எஸ்டேட் புள்ளிகளும்- வெள்ளலூர் அருகே அதிமுகவிற்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்களும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி போட்டுள்ளதாகவும், அங்கே பஸ் ஸ்டேண்ட் அமைந்தாலே நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் உயரும் என்றும், அதற்காகவே பேருந்து நிலையத்தை மாறி மாறி கயிறு கட்டி இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும்தான் நீலம்பூர், வெள்ளலூரில் பேச்சாக உள்ளது.
பிரபாகரன், கவுன்சிலர், கோவை மாமன்ற அதிமுக குழு தலைவர்:
வெள்ளலூரில் குப்பைப் பிரச்சனையால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு விடிவு தரும்முகமாகவும், இங்கே பஸ் ஸ்டேண்ட் அமைந்தால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்கும் என்பாதாலேயே கடந்த கால ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பார்த்துப் பார்த்து உருவாக்கின திட்டம் இது. அவர்கள் இதில் அக்கறை காட்டினார்கள் என்பதாலேயே இந்த திமுக அரசு பதவியேற்றவுடன் இப்பணியை நிறுத்தியது. இதற்குக் காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிர வேறு இல்லை. தவிர இப்போது இடம் மாற்றம் செய்யப்படுவதாக சொல்லப்படும் நீலம்பூர் பைபாஸ் சாலையில் திமுக குடும்பத்திற்கு பல்லாயிரக்கணக்கான நிலம் வாங்கிப் போட்டுள்ளார்கள். அதற்காகவே இந்த திட்டத்தை அங்கே கொண்டு போகிறார்கள். இது அரசு நிலம் 60 ஏக்கர். ரூ.40 கோடி அரசுப் பணமும் செலவழித்தாகி விட்டது. இப்படியிருக்க நீலம்பூரில் தனியார் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே பஸ்நிலையத்தை அமைக்கிறார்கள் என்றால் அதற்கு அர்த்தம் என்ன? அவர்கள் பலன் பெற வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? எப்படி சென்னையில் கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைவதற்கு முன்பு அது பொட்டல்காடாக இருந்ததோ, பஸ் ஸ்டேண்ட் வந்ததும் டெவலப் ஆனதோ, அதேபோலத்தான் வெள்ளலூரில் பேருந்து நிலையம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதை மாற்றினால் போராட்டங்கள் பல்வேறு வகையில் வெடிக்கும்.
இந்தப் பேருந்து நிலைய விவகாரம் குறித்து மக்கள் என்ன சொல்லுகிறார்கள்?
தாமரை, வெள்ளலூர் இளநீர் கடைக்காரம்மா:
இங்கே பஸ் நிலையம் வரப்போகுதுன்னு சந்தோஷமா இருந்தோம். எங்க வியாபாரம் எல்லாம் செழிக்கும்ன்னு நம்பினோம். அதை நம்பித்தான் முதலீடும் போட்டேன். இப்ப பஸ் ஸ்டேண்ட் இங்கே வராதுங்கறாங்க. எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாயிருக்கு. ஆசை காட்டி மோசம் பண்ணின மாதிரி இருக்கு. எங்க நஷ்டத்தை விடுங்க. அரசாங்க பணம் இத்தனைய இதுல போட்டிருக்காங்களே. இது யார் வீட்டுப் பணம்? இவ்வளவும் செலவு பண்ணீட்டு வேற இடத்துல போய் பஸ் ஸ்டேண்ட் கட்டறேங்கறாங்களே. இவுங்க ஊட்டுப் பணமா இருந்தா இப்படி செய்வாங்களா?
மலர்விழி, வெள்ளலூர்:
இங்கே பஸ் ஸ்டேண்ட் வந்தா இங்கிருந்து 15-20 கிலோமீட்டர் தூரம் நீலம்பூர் வரைக்குமே டெவலப் ஆகும். தீவு மாதிரி இருக்கிற வெள்ளலூர் மக்களுக்கும் பயனாகும். ஏற்கனவே இங்குள்ள குப்பைக்கிடங்குப் புகையால் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு வர்றோம். இங்கே பஸ் ஸ்டேண்ட் வந்தா அதை உத்தேசித்தாவது சுத்தமா வச்சுக்குவாங்க. தீ வைக்க மாட்டாங்க. புகையக்கிளப்ப மாட்டாங்கன்னு நம்பினோம். ஆனா இப்ப திடீர்ன்னு கட்டுன பஸ் ஸ்டேண்ட்டை நிறுத்திப் போட்டாங்க. ஒரு வருஷத்துக்கு மேல இது இப்படியே நிற்கும்போதே சந்தேகமா இருந்துச்சு. இப்ப வேற இடத்துக்கு கொண்டு போறாங்கன்னு தெரிஞ்சதும் மனசுக்கு கஷ்டமாயிருக்கு.
S.KAMALA KANNAN Ph. 9244319559