வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லுர் பகுதியில், பொங்கல் விழாவை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால், வேதனையில் விவசாயிகள் உள்ளனர். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தித்திக்கும் பொங்கல் திருநாளை இனிப்பான பொங்கலுடன் துவங்குவது தமிழர்களின் மரபாகும்.
இந்த இனிப்பான பொங்கலுக்கு சுவையுட்டுவது கரும்பு வெல்லமென்றால் மிகையாகாது.
இந்நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் தைப் பொங்கலுக்காக சுவையான கரும்பு வெல்லத்தை கரும்பு விவசாயிகள் தீவிரமாக தயாரித்து வருகின்றனர்.  இயந்திரத்தில் பிழிந்த கரும்பு சாரை பெரிய வட்ட கொப்பரையில் கொதிக்கவைத்து, அதிலுள்ள மாசுக்களை நீக்கிய பிறகு, அதனை மரத்தொட்டியில் வடிக்கின்றனர். பாகு உலர்ந்த பின் மண்டைவெல்லமாக உருண்டை பிடிக்கப்பட்டு, 10கிலோ, 30 கிலோ கொண்ட மூடைகளாக  தரம் பிரிக்கப்படுகிறது. இப்பகுதியில், தயாரிக்கப்படும் மண்டவெல்லம் சென்னை, துத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பபடுகிறது. இருப்பினும், தற்போது 30கிலோ எடையுள்ள மூடை 1200 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதால், உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக கரும்பு விவசாயிகள் வேதனை தொரிவித்துள்ளனர். மேலும்,  தொழிலாளர் ஊதியம், உற்பத்தி செலவு
அதிகரித்து விட்டதால், தமிழக அரசு 30 கிலோ கொண்ட மூடைக்கு ரூ.1700 என நிரந்தரமாக விலை நிர்ணயித்தால், கரும்பு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

scroll to top