THE KOVAI HERALD
தோற்றவர்கள் சோகமாக இருப்பதில் கூட நியாயம் இருக்கிறது. வென்றவர்கள் சோகமாக இருப்பதுதான் தற்போதைய அரசியல் ட்ரெண்ட். குறிப்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றியடைந்த ஆளுங்கட்சி திமுகவினர் சோகமாக இருப்பதுதான் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரிய பேச்சாக இருக்கிறது.
கோவை மாநகராட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணியும், 4 வார்டுகளை அதிமுகவும் கைப்பற்றியது. கோவையில் 2006 முதலே சட்டமன்றத் தேர்தலில் தொடர் தோல்விகளை திமுக சந்தித்து வருவதால் கட்சிக்குள் தனி மனித கோலோச்சுதலை தடுக்க முடிவு செய்தது அறிவாலயத் தலைமை.
பொதுவாக கோவையில் மாநகரம், மாவட்டம் என்று இரண்டே இரண்டு கட்சி நிர்வாகக்குழு இருந்தது. அதில் மாநகராட்சியில் சி.டி. தண்டபாணி, அவருக்கு பின்னர் வீரகோபால் போன்றவர்களின்கையே ஓங்கி இருந்தது. மாவட்டத்தைப் பொறுத்த வரை முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிதான் முடிசூடா சக்ரவர்த்தி போல் செயல்பட்டு வந்தார்.
2006 ஆட்சியைப் பிடித்தபோதும் கோவையில் 14-க்கு 4 தொகுதிகளை மட்டுமேயும், 2011ல் 10-க்கு ஒன்று கூட இல்லாமலும், 2016-ல் 10- க்கு ஒன்று மட்டுமேயும் திமுக கூட்டணி வெல்ல இந்த தனி மனித ஆதிக்கமும், அவர்களின் கோஷ்டி அரசியலுமே காரணம் என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை பேசப்பட்டது. அதன் நிமித்தம் கோவை மாவட்டத்தை கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு என்று 4 கட்சி மாவட்டங்களாக பிரித்து அதற்கு செயலாளர்களை நியமித்ததது தலைமை.
இதன் மூலம் கட்சியின் மூத்த முன்னோடியாக இருந்த பொங்கலூர் பழனிசாமி மாநிலப் பொறுப்புக்கு நிய மிக்கப்பட்டார். வீரகோபால் போன்ற முக்கியஸ்தர்கள் ஒதுக்கப்பட்டு புதியவர் களுக்கு செயலாளர் பொறுப் புகள் வழங்கப்பட்டன. அப்படியிருந்தும் கூட 2021 தேர்தலில் திமுக 10-க்கு 10 தொகுதி தோல்வியைத் தழுவ, இதற்கும் கட்சிக்குள் நிலவும் உள்ளடி பாலிடிக்ஸ்தான் காரணம் என்று பேசப்பட, மறுபடியும் கட்சிக்குள் புனரமைப்பு செய்யப்பட்டு கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு , கோவை மாநகர் மேற்கு கட்சி மாவட்டங்கள் 5 ஆக மாற்றப்பட்டது.
புதிதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சி.ஆர்.இராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நா.கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை திமுக பெற்றிருக்கிறது.
கோவையில் ஆளுங்கட்சி சார்பாக ஒரு எம்.எல்.ஏவும் இல்லை. அதனால் அமைச்சரும் இல்லை. பொறுப்பு அமைச்சராக முதலில் போடப்பட்டவர்கள் மீதும் கடும் அதிருப்தி வர, அவர்கள் திரும்ப அவரவர் ஊருக்கே பொறுப்புக்கு அனுப்பப்பட்டு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவர் தான் இந்த பெருவெற்றியை பெற வைத்திருக்கிறார். அதனால் அவர் இமேஜ் அறிவாலயத் தலை மையிடம் கூடிப் போயிக்கிறது. கோவையில் அவர் கரத்தை வலுப்படுத்தும்படியும்,
வரப்போகும் 2024 பாராளுமன்றத் தேர்தலுக் கும் அவரேதான் பொறுப்பாளர், அவர்தான் பெருவெற்றியை ஈட்டிக் கொடுப்பார் என்று தலைமை உள்ளூர் தலைகளுக்கு எழுதப்படாத உத்திரவை இட்டுக் கொண்டிருக்கிறது. ‘எப்படிப் பார்த்தாலும் செந்தில்பாலாஜி கரூரைச் சேர்ந்தவர். கோவை மாநகராட்சித் தேர்தல் முடிந்த பிறகு திமுக மேயர் பதவியேற்றால் பெரும்பாலும் கோவையில் இருக்க மாட்டார். கரூரிலேயே இருப்பார். அரசு நிகழ்வுகளுக்கு மட்டும் வந்து போவார். மற்றபடி கட்சியையும், கீழ்மட்ட அதிகாரிகளையும் வழிநடத்த மேயரும், துணைமேயருமே மறைமுகமாக அமர்த்தப் படுவார்கள்.
எனவே அமைச்சருக்கு நிகரான ஆளுமைகளைத் தான் மேயர், துணைமேயர் பொறுப்புகளில் போடுவார்கள் என்று கட்சி மூத்த நிர்வாகிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக இந்த மாவட்ட செயலாளர்களில் ஐவரில் மூவருக்கு இந்த எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்தியின் மனைவி லக்குமி இளஞ்செல்வி, .97-வது வார்டில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதி, மற்றும் 46 வது வார்டில் போட்டியிட்ட மீனா லோகு ஆகிய மூவரில் ஒருவர் தான் மேயராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக கல்பனா மேயர் ஆகி விட்டார். வெற்றிச் செல்வன் துணைமேயர் ஆகிவிட்டார்.
இதேபோல் இன்னபிற பதவிகளுக்கும் கூட இதுவரை கட்சியில் பெரிதாக பேசப்படாத கவுன்சிலர்களையே நியிமக்க திமுக தலைமை உத்தேசித்துள்ளதாக பேச்சு நிலவுகிறது. இதில்தான் கட்சியில் பதவிக் கனா கண்ட உள்ளூர் நிர்வாகிகள் பலரும் சோகத்திலும், வருத்தத்திலும் உள்ள தாக தெரிகிறது. இப்படியிருந்தால் கட்சி எப்படி வளரும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஒருவரிடம் பேசும்போது, ‘‘தற்போது கட்சித் தலைமை அதிமுக பாலிஸியைத் தேர்ந்தெடுத்துள்ளது. மந்திரி என்றால் ஒரே ஆட்கள் இருந்த காலம் போய் தான் நியமிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று உத்திரவு போட்டு புதுசு புதுசாக வந்த எம்.எல்.ஏக்கள் பலரை அமைச்சராக்கி விவிஐபி ஆக்கியது. அது போல தலைமை யார் கை காட்டினாலும் அவர்கள் பின்னால் மூத்தவர்கள் செல்ல வேண்டும் என்பது போல் இப்போது செயல்படுகிறது.
இது வெளியே உள்ளவர்களுக்கும், சாதா ரண தொண்டர்களுக்கும் வேண்டுமானால் இனிப்பாக இருக்கலாம். இத்தனை கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்க பாடாய் பட்டு உழைத்த கட்சி நிர்வாகிகள் யாரும் சந்தோஷமாயில்லை. நம் பணம் வேண்டும், நம் உழைப்பு தேவை. ஆனால் அரசாங்கப்பதவிகள் மட்டும் புதியவர்களுக்கு என்பது இப்போது கட்சி நிர்வாகிகளுக்குள் யாருக்கும் உவப்பாக இல்லை. அதிமுகவில் ஜெயலலிதா இதைச் செய்தார் என்றால் அந்த கட்சியின் தன்மையே வேறு. எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் அந்தக் காலத்திலிருந்தே மாஸ் லீடர் (சினிமா கவர்ச்சியின் மூலம் தானாக கூட்டம் வரும்) என்றே சொல்லுவார்கள். ஆனால் திமுக தலைவர் கலைஞரை கலெக்டிங் லீடர் என்றுதான் சொல்லுவார்கள். என்ன காரணம் என்றால் அவர் சேர்த்த கூட்டம் எல்லாம் கவர்ச்சி மாயையில் அல்ல. தன் பேச்சால், தன் அனுபவ ஆற்றலால், தன் அரசியல் சாதுர்யத்தால் சாதி வாரியாக, இனவாரியாக, மொழி வாரியாக, தொழில்வாரியாக அதன் தலைவர்களிடம் பேசிப்பேசி மாநாடுகள் நடத்தச் சொல்ல, அவர் களின் கூட்டத்தைப் பார்த்து அவர்களுக்கேற்ற பிரதிநிதித்துவம் கொடுத்துக் கொடுத்து கட்சியை வளர்த்தவர்.
அப்படி சிறுகச் சிறுக சேர்த்து மாஸ் காட்டிய வர்தான் கலைஞர். அதே நிலையில்தான் ஸ்டாலினும் உள்ளார். திமுகவிற்கு ஓட்டுப் போடும் யாரும் கவர்ச்சியில் மயங்கக்கூடியவர்கள் அல்லர். எனவேதான் அண்ணா மறைவுக்குப் பிறகும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இரட்டை இலை என்ற கவர்ச்சிகளை மீறி, எவ்வளவோ தோல்விக்கிடையிலும் கட்சி காலம் கடந்தும் வாழ்கிறது. எம்ஜிஆர் கட்சிக்கு ஓட்டுக்களை வாங்கிட தலைமைப் பதவியில் உள்ள ஒரே ஒரு நட்சத்திரம் போதும். ஆனால் திமுகவில் அப்படியல்ல. மாவட்டந்தோறும், வட்டங்கள் தோறும், மண்டலங்கள் தோறும் கட்சியை வளர்த்தெடுக்க நல்ல நிர்வாகிகள், நட்சத்திரங்களாக ஜொலி க்கும் நிர்வாகிகள் தேவை. அப்படியில்லாமல் போனால் கட்சி எதிர் காலத்தில் சிக்கலுக் குள்ளாகி விடும். அதை மனதில் வைத்து ஜெயலலிதா போல சூடு போட்டுக் கொண்டால் அது கட்சிக்கே ஆபத்தாய் போய் விடும். புதியவர்களை உருவாக்குவது பெரிய விஷமில்லை. அவர்களை குறுகின காலத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ளவர்களாக மாற்ற வேண்டியது கட்சித் தலைமையின் கடமை.!’’ என்று தெரிவித்தார்.
……………KAMALA KANNAN.S Contact No: 9244317182