THE KOVAI HERALD
தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளிம்பு நிலைமக்களான நரிக்குறவர்கள் வசிக்கும் ஒரு காலனிக்கு சென்று திவ்யா என்ற மாணவியின் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் விருந்து சாப்பிட்டார். அது வலைத் தளங்களில் வைரலாகி இருப்பதுடன் எதிர்கட்சியினரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநரின் தேநீர் விருந்து நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள், அரசியல் கட் சித் தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகக் கூறி, தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகி யவை அறிவித்தன. திமுக நிலைப்பாட்டின் அடிப்படையில்முடி வெடுப் போம் என்று காங்கிரஸும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தெரிவித்தன. அதைத்தொடர்ந்து இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசும் புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேநேரம் அதிமுக, பாஜக கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றன.
இந்த நிலையில் சென்னை திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் முதல்வர். அங்கே பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கியவர் அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண் டார். தொரட்ந்து அங் குள்ள திவ்யா என்ற மாணவியின் வீட்டிற்கு சென்றார். ஸ்டாலினுக்கு பாசி மாலை அணிவித்தும், பூக்கொடுத்தும் மாணவி யின் குடும்பத்தார் வரவேற்றனர். மாணவியின் வீட்டில் இட்லி, வடை, கோழிக்குழம்பு சாப்பிட்டதுடன் தேநீர் அருந்தினார். மேலும், மாணவிக்கு இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,
‘‘நகுறவர்கள், பழங்குடி யினர்கள், விளிம்பு நிலை யில் உள்ள மக்களை தேடி வந்து உதவும் அரசாக நமது அரசு உள்ளது. என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி எதேச்சை யாக நடந்த நிகழ்ச்சி அல்ல. சமீபத்தில் சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிகள் ஆர். பிரியா. எஸ்.எஸ் தர்சினி, கே.திவ்யா ஆகியோர் சாதி ரீதியாக தங்களை பிறர் எப்படி ஒதுக்கி வைப்பதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலான நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவிகளை தலைமை செயலகத்திற்கு நேரடியாக அழைத்து பேசினார். அப்போது தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என மாணவிகள் அவரைக் கேட்டுக்கொண்டனர். அவரும் நிச்சயம் வருவதாக உறுதியளித்திருத்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மாணவிகள் முதல்வருடன் வீடியோ காலில் உரையாடினர். அதன் பின்னர்தான் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், மாணவிகளின் இல்லத்திற்கு முதல்வர் விசிட் செய்த காட்சியும் அரங்கேறியிருக்கின்றன.
முதல்வர் இப்போது மட்டுமல்ல, ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் கூட இப்படித்தான் திடீரென்று ஏழை எளிய மக்களைப் பார்த்தால் நின்று விடுகிறார். அவர்களுடன் டீ சாப்பிடுகிறார். அவர்கள் இல்லம் செல்கிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது எடப்பாடியின் சொந்தத் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள தெருவோர டீக்கடையில் வேட்பாளருடன் சேர்ந்து டீ குடித்தார். அதேபோல் முதல்வர் ஆன பின்பு சென்னைப் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த சிறு பெட்டிக் கடையில் டீ சாப்பிட்டார். இப்போது இந்த எளிய மக்களுடன் விருந்து சாப்பிட்டுள்ளார். இது எல்லாம் ஸ்டாலினின் எளிமையான அணுகு முறையையே காட்டுகிறது என சொல்லும் அரசியல் நோக்கர்கள், இதற்கு முன்பு இதே மாதிரி விஷயங்களில் மற்ற தலைவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். எம்ஜிஆர் எங்கே சென்றாலும் வயதான பாட்டியைப் பார்த்தால் கட்டிப் பிடித்துக் கொள்ளுவார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று பாசத்தோடு கேட்பார். குழந்தைகள் கண்டால் தூக்கி அரவணைத்துக் கொள்ளுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களை நெருங்க விடமாட்டார்கள் அதிகாரி கள். அதையும் மீறி சில சமயங்களில் கோட நாடு விசிட்டின் போது மலைமக்களுடன் அவர் ஆடிப்பாடி மகிழ்ந் திருக்கிறார். குழந்தைகளை கொடுத்தால் இயன்றவரை கையில் ஏந்த மாட்டார். அதன் கன்னத்தை தன் கரங்களால் தொட்டு தன் உதட்டில் வைத்து முத்தம் கொஞ்சுவார். அதற்கு அவர் சொன்ன காரணம் பச்சைக் குழந்தை வெளியாட்கள் முத்தம் கொஞ்சினால் எச்சில் பட்டு இன்ஃபெக்ஷன் ஆகி விடும் என்பதாகும். ஏறத்தாழ ஸ்டாலினின் ஸ்டைல் வேறு என்கிறார்கள் திமுகவினர். ‘யார் வீடியோ காலில் பேசினாலும், கடிதம் எழுதினாலும், அதில் உருக்கமோ, நெருக்கமோ உணர்வுப்பூர்வமாக கிடைத் தால் அவர்களை சந்திக்க புறப்பட்டு விடுகிறாராம். அது எல்லாம் அதிகாரிகளிடம் சர்ப்ரைஸாகவே வைக்கப்படுகிறதாம்.
KAMALA KANNAN Ph. 9244319559