‘‘விருந்துக்கு வருவது போல் ரெய்டுக்கு வருகிறார்கள் அதிகாரிகள்’’:கேலிக்கூத்தாகிறதா ரெய்டு நடவடிக்கை?

Pi7_Image_DSC_8266.jpg

  THE KOVAI HERALD 

கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ரெய்டு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும், அதிமுகவினர் மத்தியில் கேலி, கிண்டல்களையும் தோற்றுவித்தபடி இருக்கிறது.

தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாயன்று சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இந்த சோதனை நடந்திருக்கிறது. ஏற்கனவே இதுபோல ரெய்டு நடந்தபோது கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் குவிந்தனர். மறியல் நடத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள பத்து எம்.எல்.ஏக்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களும் இந்த போராட்டத்தில் குதித்தனர். வேலுமணி வீட்டின் முன்பு கூடி போலீஸார் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஹார்ட் டிஸ்க் உள்பட சில ஆவணங்களை போலீஸார் எடுத்துச் சென்றதாக கூறினாலும், அதை எஸ்.பி.வேலுமணி தரப்பு அவர்கள் எதுவுமே எடுக்கவில்லை என்று மறுத்து வந்தது.

அதேபோல் இந்த  மூன்றாவது முறையும் வேலுமணி வீடு சோதனை என்றதும் வழக்கம்போல் அதிமுக தொண்டர்கள் காலை முதலே சுகுணாபுரம் வீடு முன்பு குவிய ஆரம்பித்தனர். இந்த முறை விதிவிலக்காக இங்கே குழுமிய அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டு அருகாமையில் உள்ள திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டனர்.

அதனால் மாலை வரை நடந்த ரெய்டின் போது எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே உள்ள தெருக்கள் சாலைகள் மினி ஊரடங்குபோல் வெறிச்சோடின. மீறி ஆங்காங்கே அதிமுகவினர் தென்பட்டாலே போதும் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர் போலீஸார்.

சுகுணாபுரம் வீடு மட்டுமல்லாது கோவையில் உள்ள எஸ்பி வேலுமணியின் நண்பரான சந்திரசேகரன் வீடு உள்ளிட்ட  26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மாலை வரை சோதனை நடந்தும் பணமோ, நகையோ, வேறு ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை என்றே போலீஸார் தெரிவித்தனர்.

சோதனை நிறைவு பெற்ற பிறகு நிருபர்களை சந்தித்துப் பேசினார் எஸ்.பி.வேலுமணி. அப்போது  அவர், “காவல்துறையை திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறாத வகையில் பழிவாங்கும் படலம் நடக்கிறது. மின்கட்டண உயர்வை திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்பதால் என்னைக் குறிவைத்து இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. சோதனையில் பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை!’’ எனத் தெரிவித்தார். தவிர ரூ.5000 கோடி இந்த திமுக ஆட்சியில் முதல்வர் குடும்பம் மட்டும் ஊழல் செய்து சம்பாதித்திருப்பதாக குற்றம் சாட்டினார். மீடியாக்கள் அதை வெளியிடுவதில்லை என்றார்.

மற்ற இரண்டு ரெய்டு சம்பவங்களைத் தாண்டி இந்த மூன்றாவது ரெய்டில் நடந்த ஆச்சர்யமான விஷயம் எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவினர் மீது நடந்த கைது நடவடிக்கைதான். அவர்கள் அனைவரும் கைது செய்த பின்பு அந்தப்பகுதியே வெறிச்சோடிக்காணப்பட, ரெய்டு முடிந்த அடுத்த நிமிடத்தில் வேலுமணி வீட்டின் முன்பு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

அதோடு தாரை தப்பட்டை வாத்தியக் கோஷ்டியும் வந்து விட்டது. கொண்டாட்டமும் ஆரம்பித்து விட்டது. வேலுமணியை தூக்கிப் பிடிக்காத குறையாக கூட்டத்தில் கொண்டாடி விட்டனர் தொண்டர்கள். போலீஸார் எல்லோரையும் பிடித்து மண்டபத்தில் வைத்திருப்பதாகக் கூறிக் கொண்டிருக்க, இவ்வளவு பேர் எப்படி எங்கிருந்து வந்தனர், அவர்களுக்கு எப்படி உடனுக்குடனே தகவல் போகிறது என்பது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 

‘‘ரெய்டு நடக்கிறது என்றதுமே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொண்டர்கள் புறப்பட்டு விட்டனர். அப்படி வந்தவர்களில் லேட்டாக வந்தவர்கள்தான் நிறைய பேர். எடுத்த எடுப்பில் வந்தவர்களைத்தான் அவர்களால் கைது செய்ய முடிந்தது. அதனால் அடுத்து வந்தவர்கள் எல்லாம் அங்கங்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் தங்கி இருந்தனர். எப்போது ரெய்டு முடியும் எனக் காத்திருந்தனர். இந்த சோதனை இப்படித்தான் நடக்கும். அதிகாரிகள் வேலுமணி வீட்டிற்கு விருந்துக்கு வருவது போல்தான் வந்து போகிறார்கள். அது அப்படியே பழக்கப்பட்டு விட்டது.

எனவேதான் நாங்கள் தாரை தப்பட்டையுடன் காத்திருந்தோம். எதிர்பார்த்தபடியே நடந்தது. தகவல் வந்ததும் அத்தனை பேரும் வேலுமணி வீட்டின் முன்பு குவிந்து விட்டனர். நானும் கூட இரண்டு கிலோமீட்டர் முன்பு ஒரு நண்பர் வீட்டில்தான் அமர்ந்திருந்தேன். தகவல் கிடைத்ததும் வர முடிந்தது. இவர்கள் எப்பவும் ரெய்டு நடத்துவதே நாங்கள் ஆர்ப்பாட்டமோ, மறியலோ அறிவித்த பின்புதான். ஏற்கனவே ரெண்டு முறை ரெய்டு நடந்தபோதும் கூட விலைவாசி உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தோம். அதற்கு இரண்டு நாள் முன்புதான் இதேபோல் ரெய்டு நடத்தினார்கள்.

இப்போதும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் வைத்திருக்கிறோம். இப்போது ரெய்டு நடந்திருக்கிறது. இது போல இன்னமும் கூட ரெய்டு நடத்துவார்கள். அதிகாரிகளும் விருந்துக்கு வருவது போல் வேலுமணி வீட்டிற்கு வந்து போவார்கள். நாங்களும் இப்படியே வந்து போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். வேலுமணி மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு எப்படியாவது அதிகாரிகள் ஏழெட்டு பேர் மீது ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அது முடியவில்லை. எனவேதான் இப்படி அடுத்தடுத்து ரெய்டு நடத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றார்.

ஸ்டாலின் என்ன கடவுளா?

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு தாலுகா தாசில்தார் அலுவலகம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதேபோல கோவை மாநகர காவல் துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, ‘ஸ்டாலின் என்ன கடவுளா?’ என்று கேட்டதோடு திமுக அரசை கடுமையாகவே சாடினார். அவர் பேசியதாவது

‘‘இது விளம்பர அரசு, விடியா அரசு. அதிமுக ஆட்சியில் எந்த வரியும் ஏற்றவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. இந்த ஆட்சியில் குடிநீர் வரியும் அதிகப்படுத்தி உள்ளனர்.  மின் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 53% ஆக அதிகப்படுத்தி உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஆட்சியை  நாங்கள் காப்பாற்றியதால் ஸ்டாலினுக்கு கோபம். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்தார் அது நடக்கவில்லை. அப்போதே ஸ்டாலின் கோவைக்கு வந்த போது என்னை விட மாட்டேன் என தெரிவித்து சென்றார். திமுக குடும்பம் என்றைக்குமே எங்களுக்கு எதிரி தான். அதில் எந்தவித சமரசமும் இல்லை.

என்மீதுள்ள கோபத்தில் தான் எனது வீட்டிற்கு ரெய்டு மூன்றாவது முறையாக வருகிறது. அவர்களும் எனது வீட்டில் வந்து போட்டு சோபா, சேர் செட்டுகளை எண்ணி தான் செல்கின்றனர். நாங்கள் எங்களது ஆட்சியில் எந்த வசூலும் செய்யவில்லை கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. மிரட்டல்களுக்கு கவலைப்படுவதில்லை. ரெய்டின் போது காவல் துறையினர் எம்.எல் ஏ., க்களை இழுத்து தள்ளி விடுகின்றனர். தொண்டர்கள் உங்கள் சகோதரிகளை சேலையை பிடித்து தள்ளி விடுகின்றனர்.காவல்துறைக்கு எனது கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துகொள்கிறேன்.

இந்த ஆட்சி இதிபோலவே இருக்காது. நிச்சயமாக மண்ணை கவ்வும். அப்போது காவல் துறையின் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன். நீங்கள் காக்கி சட்டை போடவே முடியாது. திருட்டு கொள்ளை கஞ்சாவை தடுக்க போலீசுக்கு நேரம் இல்லை. காவல்துறை எங்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலின் என்ன கடவுளா..? எங்கு பார்த்தாலும் திமுக ஆட்சியில் லஞ்சம். இந்த ஆட்சி மக்களை சுரண்டும் ஆட்சி. 50,000 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியுள்ளது திமுக அரசு. மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் லஞ்சம். நீங்கள் பணத்தை வாங்கி தப்பித்து விடுவீர்களா. நாங்கள் விட்டுவிடுவோமா!’’

scroll to top