விருதுநகர் மாவட்டத்தில், சட்ட விரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க 4 ஆய்வு குழு. ஆட்சியர் நடவடிக்கை.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில், சரவெடிகள் தயாரிப்பதை தடுக்கவும், தடை செய்யப்பட்டுள்ள பேரியம் நைட்ரேட் உபயோகிப்பதை கண்காணித்து தடுப்பதற்காகவும் ஆய்வு குழுக்கள் அமைத்து, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதானமான தொழிலாக பட்டாசு தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பதற்காக, பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளில் பேரியம் நைட்ரேட் உபயோகிக்கக்கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எனவே பட்டாசு ஆலைகளில், பட்டாசு உற்பத்தியின் போது பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கவும், சரவெடிகள் தயாரிப்பதை தடுக்கவும், வீடுகளில் சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பதை தடுப்பதற்காகவும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடங்கிய 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும்வரையில் கண்காணிப்பு குழுவினர், ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

scroll to top