விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி பூ விளைச்சல் குறைந்தது

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில், சூரியகாந்தி பயிரிடப்படுவது வழக்கம். மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி நடைபெற்றுவரும். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ரெட்டியாபட்டி, மீசலூர், பந்தல்குடி, வெம்பக்கோட்டை, கல்லமநாயக்கர்பட்டி, செல்லையநாயக்கர்பட்டி, எம்.புதுப்பட்டி, எரிச்சநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் மானாவாரி நிலங்களில், சூரியகாந்தி பயிரிடப்படும். இந்த ஆண்டு சூரியகாந்தி சாகுபடி விவசாயிகளுக்கு போதிய அளவு விதை கிடைக்கவில்லை. இதனால் சூரியகாந்தி குறைந்த அளவில் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அறுவடை காலமாக இருக்கும் நேரத்தில், விளைந்துள்ள சூரியகாந்தி பூக்களை உரிய விலை கொடுத்து வாங்குவதற்கு எண்ணெய் நிறவனங்கள் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. இது குறித்து சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறும்போது, மத்திய அரசு, எண்ணெய் வித்துக்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், உள் நாட்டில் விளையும் எண்ணெய்வித்து பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் உள் நாட்டில், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயம் இல்லாமல் போய்விடும். எனவே மத்திய அரசு உள் நாட்டில் உற்பத்தியாகும் சூரியகாந்தியை கொண்டு, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரியகாந்தி பயிரிடும் விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் வித்துகளை கொள்முதல் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

scroll to top