விருதுநகரில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: 2 மாதத்தில் 67 பேருக்கு உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 67 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் மாவட்டத்தில் ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. விருதுநகரில் கடந்த அக்டோபர் மாதத்தில் 21 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நவம்பர் மாதத்தில் டெங்கு பாதிப்பானது  41 பேருக்கு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களை தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி ஆகியிருக்கிறது. மொத்தமாக விருதுநகரில் 2 மாதத்தில் 67 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு, மருந்து தெளித்தல், கொசு மருந்து அடித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழக அளவில் டெங்கு பாதிப்பில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2015ம் ஆண்டு 54 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருக்கின்றனர். விருதுநகரில் டெங்கு மீண்டும் பரவுவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

scroll to top