விடுதலை திரைப்படம் சோளகர் தொட்டி நாவலின் உல்டா? – வலைத்தளங்களில் தொடர்ந்து கிளம்பிய சர்ச்சை

viduthalai.jpeg

சினிமாவில் கதைத் திருட்டு, கதைப்புரட்டு என்பதெல்லாம் புதுசில்லை. அதிலும் தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் ஒரு திரைப்படத்தில் எத்தனை சிறுகதைகளை, நாவல்களை உல்டா செய்வார்களோ என்ற அளவுக்கு விஷயம் விபரீதமாக சென்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு நீட்சியாக இப்போது வெற்றிமாறனின் விடுதலைப்படமும் சிக்கியிருக்கிறது. இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் ஜெயமோகன் என்றிருக்கிறது.

ஆனாலும் இந்தப் படத்தின் காட்சியமைப்புகள், கதையின் பல புள்ளிகள் வீரப்பன் காடுகளில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களை விவரிக்கும் சோளகர் தொட்டி நாவலையே காட்டுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகின்றனர். அது வலைத்தளங்களிலும் சரமாரியாக விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. 

இதைப் பற்றி சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர் அந்தியூர் அன்புராஜ். அவர் ஒரு காலத்தில் வீரப்பனுடன் வாழ்ந்தவர், வீரப்பன் வழக்குகளுக்காக 20 ஆண்டுகாலம் கர்நாடக சிறையில் தண்டனையை அனுபவித்தவர். தற்போது அந்தியூரில் பழங்குடி மக்களுக்காக பழங்குடிகள் பவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவர் ‘விடுதலையும், விடுதலை அடையாத இயக்குநர் வெற்றிமாறனின் மனசும்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு பதிவே இந்த சர்ச்கை்கு முதலில் வித்திட்டது. அதில் அவர் கூறியிருந்ததாவது: ….

விடுதலை படம் பார்த்தேன்,  இந்த படம் முழுமையான (வெற்றிமாறன் அவர்கள் ) என் கற்பனைக்கதையே என்பதை அழுத்தி அழுத்தி சொல்கிறார். விடுதலை படம் making நன்றாக உள்ளது. ஆனால் வெற்றிமாறன் மிக பெரிய வரலாற்று பிழையை செய்ததோடல்லாமல் சோளகர் தொட்டி கதையைக் களவாடவும் செய்துள்ளார்.

தோழர் தமிழரசன் (TA) ஐயா புலவர் கலியம் பெருமாள் (படத்தில் வாத்தியார் பெருமாள்) போன்றவர்களின் போராட்ட களம் .அரியலூர், கடலூர்,விழுப்புரம், வட ஆற்காடு மாவட்டம் போன்ற பகுதிகளில் உள்ள முந்திரிக்காடும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளாகத்தான் இருந்தது.

அங்கு வனமோ, பழங்குடிகளோ இல்லை. அவர்களது போராட்ட களம் என்பது சமவெளியை சுற்றியதாக இருந்தது. குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள வாத்தியார் பாத்திரம் தோழர் கலியபெருமாள் அவர்களுடையது.  தோழர் கலியபெருமாள் எந்த இடத்திலும் தன் கையால் யாரையும்  கொலை செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை.

தோழர் தமிழரசன் (TA) தலைமையிலும், தோழர் கலியபெருமாள் தலைமையிலும் நடந்த போராட்டம் என்பது வெறும் mines கம்பெனிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அந்த வரலாற்று   பார்வையை சுருக்கி காட்டும் பெரிய வரலாற்றுப் பிழையை வெற்றிமாறன் அவர்கள் செய்துள்ளார்.

தோழர் தமிழரசன் (TA)மற்றும் புலவர் அவர்களுடைய போராட்டத்திற்கும், வனப்பகுதிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பழங்குடிகளோடு அவர்கள் இணைந்து போராடவில்லை. அப்படி இருக்கும்போது படத்தில் வனப்பகுதியும் பழங்குடிகளும் காட்டப்படுவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை.

சோளகர் தொட்டி நாவலில் இருந்த கதையின் கருவை இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை  உண்மை. புலவர் காலகட்டத்தில் எந்த விதமான சித்திரவதை முகாமோ அல்லது அப்படியான ஒரு அமைப்போ இல்லை. வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு பிறகு தான் இந்த மாதிரியான சித்திரவதை முகாம்கள் உருவாக்கப்பட்டது .

வீரப்பன் வழக்கு விசாரணை சம்பந்தமான ஆட்களுக்கு மட்டுமே தெரிந்த work Shop என்ற சொல் ….. சோளகர் தொட்டி நாவலில் மட்டும்தான்  பயன்படுத்தப்பட்டுள்ளது. நண்பர் சூரி நடித்துள்ள கதாபாத்திரம் கூட சோளகர் தொட்டியில் கர்நாடகா சித்திரவதை முகாமான மாதேஸ்வர மலை முகாமில் இருந்த ஒரு காவலரின் பாத்திரத்தை தழுவித்தான் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த நாவலாசிரியரிடம் (தோழர் பாலமுருகனிடம்)ஒரு வார்த்தை கூட கலந்து கொள்ளாமல், அனுமதி கேட்காமல்  கற்பனைக் கதை என்ற பெயரில் கதைத் திருட்டை தமிழ் சினிமாவில் மட்டும்தான் செய்ய முடியும். எழுத்தாளனை மதிக்காத கலை, கலையாக எப்படி இருக்க முடியும்?’’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இது குறித்து உடனடியாக சோளகர் தொட்டி நாவலின் ஆசிரியரும் வழக்குரைஞருமான ச.பாலமுருகனை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் அப்போது படத்தைப் பார்க்கவில்லை என்றும், நண்பர்கள் பலரும் தன் கதை இந்த விடுதலைப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதற்காகவே அதைப் பார்க்க திட்டமிட்டுள்ளேன்!’’ என்று தெரிவித்தார். பிறகு அவரும் படம் 

‘‘ஆனால் நண்பர்கள் பலரது வற்புறுத்தலின் காரணமாக அப்படத்தை பார்த்தேன். திரைப்படமானது பார்வையாளர்களுக்கு விருவிருப்பான ஒரு வெற்றி படத்திற்கான அனுபவத்தோடு  சில அரசியல் விடயங்களையும், சில குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்வதாகவும் செல்கின்றது. திரைப்படத்தின் மையக் கருவும், கதைக்களமும், பாத்திரங்களும் சோளகர் தொட்டியின் பின் புல நீட்சியாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாகவும் நாவலை வாசித்த பலருக்கும் வருவது போன்ற எண்ணம் எனக்கும் எழுந்தது.

குறிப்பாக இத் திரைப்படத்தின் துவக்க காட்சியான இரயில் வெடிப்பும், இறுதி காட்சியான பெருமாள் என்ற மனிதரை பிடிக்கும் காட்சியையும் எடுத்து விட்டால் கதையின் களம்  மலைப் பகுதி, பழங்குடி கிராமம் மேலும் அது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதி. காவல்துறையின் விசாரனை முகாமான “ஒர்க் ஷாப்” வதை முகாம் .திரைப்படத்தின் வதை முகாம் காட்சிகள் கை நகங்களை வெட்டுதலில் தொடங்கி ஒரு பெண்ணிடம் அவளின் மாமனாரின் இருப்பிடம் கேட்டு துன்புறுத்துதல், அப்பெண்ணின் குழந்தையை கொன்று விடுதல், வதை முகாமின் வதைகள் என சோளகர் தொட்டியின் உள்ளடகத்திலிருந்து கையாளப்பட்டுள்ளதாக கருத முடிகின்றது. வீரப்பனுக்கு பதிலாக வாத்தியார் என்ற பாத்திரங்களை கூறினாலும் கதையின் களம் சோளகர் தொட்டியின் தாக்கத்தில் இருக்கின்றன. சோளகர் தொட்டி என்ற நாவலின் காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்த படுத்தியதாலும் நாவலின் ஆன்மா வேறானது. அது நியாயத்தின் குரலாகவும், மனிதநேயத்தின் நியதிகளை கோரிய படைப்பாகவும் இருக்கின்றது.  அது ஒரு தொடர் செயல்பாட்டின்  வெளிப்பாடு. வெகு காலம் அம் மக்களுடன் பயணித்த அனுபவத்தின் படைப்பு வடிவாக்கம்.

ஆனால்  வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் பல இளம் தலை முறை படைப்பாளருக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அவர் ஒரு படைப்பை அனுகும் போது அறிவு நானயத்தோடு அனுகி இருக்க வேண்டும். ஒரு உண்மையை திரித்து கூறுவது, நிகழ்வுகளை தவறான வரலாற்றுடன் இணைப்பது, மற்றவரின் படைப்பை சில மாற்றங்கள் செய்து தனது படைப்பாக காட்டுவது என படைப்பு அறம் சார்ந்த நேர்மையை அவர் இழந்திருக்க வேண்டியதில்லை. !’’ என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து இப்படம் தனது வீரப்பனின் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலை அடியொற்றி இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்து வருகிறார் பத்திரிகையாளரான சிவசுப்பிரமணியம். இது குறித்த சர்ச்சைகளை வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு படக்குழுவினர் சார்பாக இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

scroll to top