கோவை கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில் மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட கஞ்சா, கோவை வழியாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க தமிழக கேரள எல்லையான வாளையாறு. வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை வழக்கம் போல் கலால் துறை அதிகாரிகள் வாளையாறு சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
அந்த மூட்டைகளில் இருந்து 200 கிலோ கஞ்சா இருப்பது தெரிவவந்தது. இதனையடுத்து அதிகாரிகள், அதனை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து (27), செல்வம் (38) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.