வரும், ஆனா வராது!’’ ரூ. 2500 பொங்கல் பரிசு எதிர்பார்த்து நிற்கும் மக்கள்

THE KOVAI HERALD:

21 பொருட்கள் வாங்கின நிலையிலும் ரேசன் கடைகளில் வழக்கமான பொங்கல் பரிசு வாங்கிச் செல்லும் இல்லத்தரசிகளிடம் இந்த முறை எந்த உற்சாகம் இல்லை. வருமா? வராதா?’, ‘வரும்.. ஆனா வராது!’ என்றெல்லாம் கூட அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் சம்பாஷணை ஒலிக்கிறது. சென்ற வருடம் பொங்கலுக்கு ரூ. 2500 ரொக்கம் அளித்திருந்த எடப்பாடி அரசு, அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ரூ. 5000 குடும்ப அட்டைகளுக்கு வழங்குவோம் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்கள். எது மக்களின் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, அதை இப்போதும் நியாபகம் வைத்துக் கொண்டு மக்கள் பேசுவதைக் காண முடிந்தது. திமுக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்குமா? வழங்காதா என்ற கேள்விக்கு ரேசன் கடைக்காரர்களிடம் மட்டுமல்ல, கட்சிக்காரர்களிடம் கூட பதிலில்லை. இருந்தாலும் மக்களிடம் நப்பாசை ஓயவில்லை. இதைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் மக்கள்? கோவை ஹெரால்டுக்காக சிலரை ரேசன் கடை வாசலிலேயே மறித்துப் பேசினோம். கரும்பு, வெல்லாம், முந்திரி, திராட்சை என கையில் 21 பொருட்கள் வாங்கியிருந்தாலும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் பொங்கல் ரொக்கத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். அவற்றில் சில:
சுதா முரளி
“இங்கே பக்கத்தில் இருக்கிற ரேசன் கடைகளில் எல்லாம் 21 பரிசுப் பொருட்கள் கொடுத்திட்டிருக்காங்க. ஆனா எல்லோர்கிட்டவும் ரூ. 2500 ரொக்கப்பரிசு பற்றியே பேச்சா இருக்கு. போனவருஷம் அந்த ஆட்சியில் ரூ.2500 கொடுத்தாங்க. இந்த பரிசுப் பொருட்களோட ரூ.2500-ம் கொடுப்பாங்கன்னு மக்கள் எதிர்பார்த்துட்டு வந்தாங்க. ஏமாத்தமாகி போறாங்க. தொகை குடுத்திருந்தா இந்த பொங்கல் விழாவை சிறப்பா கொண்டாடியிருப்பாங்க. இன்னெய்க்கு ரேசன் கடையிலிருந்து வர்ற மக்கள்கிட்ட இருக்கிற பேச்சே ரூ. 2500 கொடுக்கலைங்கறதுதான். இதுவே இந்த மக்கள் மத்தியில் பெரிய தாக்கமா இருக்கு. பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கு. அதனால் இந்த விடியல் அரசு தமிழ்நாடு மக்களோட கோரிக்கையா இதனை ஏற்று ரூ. 2500 கொடுத்து சிறப்பா செஞ்சு கொடுக்கணும்…!’’
ஏ.முருகேசன், கணேசபுரம்
“பொங்கல் பரிசு 21 பொருள்கள் வாங்கிட்டேன். எல்லாமும் நல்ல தரத்தோட இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா இந்த வருஷமும் ரூ.2500 பரிசுப் பணம் கிடைக்கும்ன்னு எதிர்பார்த்தேன். ஆசைப்பட்டேன். அது இருந்திருந்தா இந்த வருஷமும் பொங்கலுக்கு உதவிகரமா இருந்திருக்கும். மத்தபடி போன வருஷம் வரை என்னைப் போன்றி சாதாரண மக்களோட தேவை என்னன்னு பார்த்துப் பார்த்து எடப்பாடி அரசாங்கம் பண்ணிட்டிருந்தது. இப்ப வந்திருக்கிற அரசாங்கம் என்ன செய்யப் போகுதுன்னு எதிர்பார்த்து காத்திட்டிருக்கேன். அதுல ரூ. 2500-ம் பொங்கலுக்குள்ளே குடுத்திடுவாங்கன்னு நம்பறேன். அது கிடைச்சா இந்த மாசம் சாப்பாட்டு செலவுக்கு எனக்கு சரியா இருக்கும்…’’
செல்வி, ராமநாதபுரம்
“எனக்குப் பொங்கல் பரிசு கொடுத்தாங்க. அதுல மளிகை சாமான்களா குடுத்து என்ன செய்யறது. போன வருஷம் ரூ. 2500 குடுத்தாங்கள்ல. அது போல இந்த வருஷமும் குடுத்திருக்கலாம். அது குடுக்காததுனால பொங்கல் செலவுக்கு கெடுபிடியா இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியலை. இந்த மளிகை சாமான்கள் குடுக்கறதுக்கு பதில் ரூ. 2000-மோ, ரூ. 2500 -மோ குடுத்திருக்கலாம். இதுல நான் மட்டுமல்ல. நிறைய மக்கள் தவிச்சிட்டு இருக்காங்க. பரிசுப் பொருளும் அதிகம் இல்லை. நாலு நாட்கள் கூட வராது..!’’
ஞானசேகரன், பெயிண்டர், ராமநாதபுரம்
“ரேசன் கடையில் இந்த வருஷம் பொங்கல் பரிசுப் பொருள்கள் மத்த வருஷத்தை விட கூடுதலா கிடைச்சிருக்கு. அதை சிறப்பா நினைக்கிறோம். அதேசமயம் மக்கள் படுகிற கஷ்டத்தை உணர்ந்து நிவாரண நிதியாக ஒரு தொகை தந்திருந்தால் உதவியாக இருந்தி ருக்கும். இந்த ஏரியாவே சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடியிருக்கும்.

scroll to top