THE KOVAI HERALD
உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து ஆளுங்கட்சி வென்றதால் இனியாவது விடிவு பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கோவை மாநகராட்சிப் பணிகள் முன்னை விட மோசமாக மாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. ‘மொத்தமுள்ள 100 வார்டுகளிலும் குப்பைகள் மலைமலையாய் தேங்குகின்றன. தினம் தினம் அதை அள்ளிக் கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்கள் வாரம் ஒரு முறை, பத்து நாட்களுக்கு ஒரு முறை வந்து அவற்றை அள்ளினாலே பெரிய விஷயம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து கொண்டிருந்த குடிநீர் இப்போதெல்லாம் 10 நாட்கள், 15 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. அன்றாடம் வந்துகொண்டிருந்த போர்வெல் நீர் (உப்புநீர்) நான்கு நாட்களுக்கு ஒருமுறை அதுவும் ஓரிரு மணி நேரமே வருகிறது!’ என்றெல்லாம் அதில் மனப்புழுங்கல்கள். பொதுவாக கோவை மாநகராட்சியில் தினம் தினம் குப்பை லாரிகள் வரும். குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் சேர்க்கும். இது ஒரு நாள் தப்பினாலும் அடுத்தநாள் நிகழ்ந்தே தீரும். ஆனால் இப்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு முறைதான் லாரிகள் வருகின்றன. அவையும் அர்த்தராத்திரியில் இரண்டு மணி மூன்று மணிக்கு குப்பைகளை அள்ளுகின்றன. இதனால் எந்த வீதியில் பார்த்தாலும் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் வரும் போலீஸ் கந்தசாமி வீதியில் கடந்த செவ்வாயன்று இரவு இரண்டு மணிக்கு பத்து நாட்கள் தேங்கிய குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் லாரியில் அள்ளிக்குவித்துக் கொண்டிருந்தனர். ‘துப்புரவுப் பணியாளர்கள் இப்போதெல்லாம் நைட் ஷிப்ட் பார்க்கிறார்களோ?’ என்று வினவியபோது, குமுறாத குறையாக தம் அவலங்களை இப்படி சொன்னார்கள்: ‘‘மாநகராட்சியில் வார்டுக்கு ஒன்று, இரண்டு வீதம் மொத்தம் சுமார் 140 குப்பை லாரிகள் உள்ளன. அவற்றில் பாதிக்கு மேல் பழுதாகி பராமரிப்பு இல்லை. அதை பழுது நீக்கி ஓட்டலாம்; அல்லது புதியது வாங்கலாம் என்றால் அதை அதிகாரிகள் செய்வதில்லை. சிக்கன சீரமைப்பு என்ற பெயரில் செலவுகளை கட்டுப்படுத்தியிருக்கிறா ராம் உயர் அதிகாரி. அதனால் சுகாதாரப்பிரிவு அதிகாரிகளுக்கும், அவருக்கும் முட்டல் மோதல். இந்த சூழ்நிலையில் 40 லாரிகள் ஓடாத கண்டீஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. எனவே குறிப்பிட்ட வார்டுகளுக்கு மற்ற வார்டுகளில் உள்ள லாரிகளையே ஷிப்டு முறையில் பயன்படுத்த சொல்லி உத்திரவிட்டு விட்டார்கள். எனவே லாரி எப்போ கிடைக்குதோ அப்போத்தான் குப்பை அள்ள வேண்டியிருக்கு. இதைப் பற்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், கவுன்சிலர்களிடம் சொன்னால் அவர்களுக்கு இதைப் பற்றி யாரைக் கேட்பது, எப்படி பணிகளை முடுக்கி வேலை வாங்குவது என்று தெரிவதில்லை. கோவைக்கு பொறுப்பாக இருந்து இந்த கவுன்சிலர்களை வெற்றி பெற வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜியும் கட்சிப் பணி, மாவட்ட நிர்வாகப் பணியை மட்டும் கவனித்துக் கொண்டு இதனைக் கண்டுகொள்வதில்லை. அவர் கேட்டால் கூட, ‘எங்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் சொன்னால்தான் எதையும் நாங்கள் செய்ய முடியும்!’ என்று மாநகராட்சி அதிகாரிகள் முகத்தில் அடித்த மாதிரி சொல்லி விடுகிறார்கள். அதுதான் அவரும் மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை!’’ என்றனர். இந்த விவகாரம் குறித்து இப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ஏ.டி.ராஜனிடம் பேசும்போது, ‘‘குப்பை மட்டுமல்ல. இப்பவெல்லாம் மாநகராட்சி பணிகள் எதுவுமே முறையாக நடைபெறுவதில்லை. எல்லாமே சித்தன் போக்கு சிவன் போக்கில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!’’ என்றவர் குடிநீர், மற்றும் உப்பு நீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடுவதை விவரித்தார். ‘‘ராமநாதபுரம், காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் எல்லாம் ஒரு காலத்தில் தினம்தோறும் 24 மணிநேரமும் குடிநீர் வந்து கொண்டிருந்தது. போன அதிமுக ஆட்சியில் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தது. இப்போது அதுவே 10 நாள், 15 நாளுக்கு ஒரு முறைதான் இரண்டு மணி நேரம் மட்டுமே வருகிறது. அதுவும் இரவில் எந்த நேரம் விடுவார்கள், எந்த நேரம் நிறுத்துவார்கள் என்று தெரிவதில்லை. அதிகாரிகளை கேட்டால் பில்லூரிலிருந்து வரும் பவர் பிளேண்ட்டில் பழுது. சரி செய்கிறோம் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். உண்மை அதுவல்ல, சிறுவாணியில் நமக்கு வரும் தண்ணீரின் கேரள அதிகாரிகள் அடைத்து வைத்து விட்டனர். அவர்களிடம் பேசி முறைப்படி தண்ணீரை விட அதிகாரிகளோ அமைச்சரோ ஆவண செய்யாமல் பில்லூர் தண்ணீரை சிறுவாணித் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்த இடங்களுக்கும் மாற்றி விடுகிறார்கள். எனவேதான் இந்த தண்ணீர் பற்றாக்குறை. கோடை காலமானதால் அது இன்னமும் மோசமாகி விட்டது. குடிநீருக்கு மக்கள் அல்லாடுகிறார்கள். அதேநேரம் உப்புநீர் எனப்படும் போர்வெல் வாட்டர் தினமும் வந்து கொண்டிருந்தது. இப் போது நாலு நாளைக்கு ஒரு முறை அதுவும் இரண்டு மணிநேரம்தான் வருகிறது. இந்த தண்ணீர் விடும் பணியை அந்தந்த வார்டுகளில் முன்னாள் அதிமுக கவுன்சிலர்களே எடுத்து செய்து வந்தனர். அது தற்போது ஆட்சி மாறியதால் அந்தந்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கண்ட்ரோலுக்கு வந்து விட்டது. எப்படியென்றால் இந்தப் பணியை எடுத் தவர்தான் இதற்கான குழாய்களை, மோட்டார் களை பழுதுகள் நீக்கி பராமரிக்க வேண்டும்.
அதற்காக ஒரு போர்வெல் லுக்கு வருடம் ஒரு லட்சம் ரூபாய் மாநகராட்சி பில் சேங்ஷன் செய்கிற தென்றால் ஒரு வார்டு க்கு 10 முதல் 20 போர்வெல் கள் பராமரிப்பை கவுன் சிலர்களின் ஆட்கள் செய்கிறார்கள். போன வருஷம் எடுத்த டெண்டர் இன்னமும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் பெயரிலேயே உள்ளது. இப்போது ஆட்சி மாறியதால் அந்த பணியை ஆளுங்கட்சியினர் பறித்துக் கொண்டனர். ‘நான் தண்ணீர் விட்டுக்கறேன். பில் போட்டு பணம் உன் பெயருக்கு வரும்போது அதை எங்களுக்கு மாற்றிக் கொடுத்து விடு. செக் மாற்றித்தருவதற்கு ஐந்து பர்சண்ட் கமிஷன் நீ வாங்கிக்க!’ என இவர்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் அமலாகியிருக்கிறது. எனவே அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் யாவரும் போர்வெல் தண்ணீர் குழாய், மோட்டார்கள் பராமரிப்பு பணியை கண்டுகொள்ளவில்லை. புதிதாக இந்த வேலையை செய்யும் நபர்களுக்கும் இதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அதனால்தான் இந்த வேலை ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இதே நேரத்தில் இங்கே இருப்பது அத்தனையும் அதிமுக கவுன்சிலர்கள். நாம் என்ன கேட்டு என்ன நடக்கப்போகிறது என்று யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படியே அவர்களிடம் போய் சொன்னாலும், ‘அது என் பணியல்ல!’ என்பது போல் நடந்து கொள்கிறார்கள். இந்த பிரச்சனையில் அல்லாடும் மக்களும் போராட்டத்திற்கோ சாலை மறியலுக்கோ வருவதில்லை. காரணம் நாம்தான் ஓட்டுக்கு ஆயிரமாயிரமாய் வாங்கி விட்டோமே. அவர்களுக்கு எதிராய் போய் சாலை மறியல் செய்தால் சுரீர்ன்னு பணம் கொடுத்த ஆளுங்கட்சிக்காரங்க ஏதும் கேட்டு விடுவார்களோ என்ற பயம். சுருக்கமாகச் சொன்னால் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னே கோவை மாநகராட்சி ஸ்தம்பித்துக் கிடக்கிறது!’’ என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் குழு தலைவர் ரத்தினபுரி பிரபாகரனிடம் இது குறித்து கேட்டபோது, ‘‘வார்டுக்கு ஒரு டிப்பர் லாரியும், ஆட்டோவும் கொடுத்திருந்தாங்க எங்க ஆட்சியில். அதைப் பயன்படுத்தித்தான் குப்பை முறையா எடுத்திட்டிருந்தாங்க. இப்ப ஆறேழு மாதங்களாக ஆட்டோவும் வர்றதில்லை. டிப்பர் லாரிகளை நிறைய வார்டுகள் கட் பண்ணீட்டாங்க. அதனால குப்பை தேங்கி ஊரே நாறிட்டு இருக்கு. காலையில 5.45-க்கு வேலைக்கு வந்துடறாங்க துப்புரவுப் பணியாளர்கள். அவங்க மதியம் 2 மணி வரை வேலை செய்யறாங்க. அவங்களையே இரவு வேலையிலும் 2 மணி வரை பயன்படுத்தறாங்க. அவங்களே காலையிலயும் வரணும்ன்னா எப்படியிருக்கும்? குடிதண்ணீர் 10 நாளைக்கொரு தடவை விடறோம்ன்னு சொல்றாங்க. ஆனா 14 நாள் 15 நாள் ஆயிருது. உப்புநீர் பொறுத்தவரை அதிமுககாரங்க கான்ட்ராக்ட்ன்னு சொல்றதுல உண்மையில்லை. உப்பு நீர் -அதாவது போர்வெல் வாட்டர் விடறதுக்கு வார்டு வாரியா ஆட்கள் ஒப்பந்தம் எடுத்திருக்காங்க. அவங்க பல தரப்பட்ட கட்சியிலும் உள்ளார்கள். அவங்களுக்கும் 1 வருஷமா மாநகராட்சி பில் தொகை கொடுக்கலை. போன மாசத்தோட அவங்க ஒப்பந்தம் முடிஞ்சிடுச்சு. ஆனா அதை இப்ப இரண்டு மாசம் எக்ஸ்டன்சன் பண்ணிக் கொடுத்திருக்காங்க. அதைக் கொடுத்தாலும் பில் பணம் தரணும்ல. அப்புறம் எப்படி அவன் வேலை செய்வான். உடைஞ்ச பைப்களை ரிப்பேர் செய்வான். அதுதான் அந்தப் பணிகளும் ஸ்தம்பிச்சுக் கிடக்கு. இது ஒழுங்காகனும்ன்னா உடனடியா வார்டுக்கு ஒரு டிப்பர் லாரியும், ஒரு ஆட்டோவும் முந்தியிருந்த மாதிரியே கொடுக்கணும். தண்ணீர் விடறவங்களுக்கு பில் தொகையை உடனே கொடுக்கணும். பில்லூர், சிறுவாணியில் நீர் வரத்து எப்படியிருக்கு, சப்ளை எப்படின்னு தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்கணும்!’’ என்றார்.
KAMALA KANNAN.S Ph.no.9244317182