வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மாவட்டத்திலும் பின்னலாடை ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ள திருப்பூர் மாவட்டத்திலும் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கபடுவதாகவும், அதனால் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதாகவும், தினசரி, செய்தித்தாள்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது.
பீகார், அஸ்ஸாம், ஒரிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் கோவை மற்றும் திருப்பூரில் சுமார் 7 லட்சம் நபர்கள் பணி புரிகின்றனர்.
இவர்கள் ஜவுளித்துறை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமான தொழில், ஹோட்டல் தொழில்கள், பவுண்டரி மற்றும் இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாலும், தமிழக தொழிலாளர்களுக்கும், மேலும், தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் வட மாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கி அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கோவை, திருப்பூர் மாவட்ட உற்பத்தி நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் உறுதுணையாக இருப்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை இம்மாவட்டங்கள் வழங்கி வருகின்றது.
தமிழகத்தில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வந்தாரை வாழவைக்கும் பூமியாக விளங்கி வருகிறது. இந்த மாவட்டங்களை நம்பி வேலைவாய்ப்பு தேடி வருபவர்களை வாழவைக்கும் வகையில் நம்பி வரும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சமீபகாலமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக பரவியதில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்பி திரும்பிச் செல்கின்றனர் என பரபரப்பு செய்திகள் நாள்தோறும் வெளியாவது, தொழில் துறையினருக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
மேலும், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள் தங்களது மாநிலத்தை சார்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அனுப்பி ஆய்வு செய்கிறது. இது வட மாநில அரசுகள், வட மாநில மக்களிடைய தமிழகத்தையும், தமிழக மக்கள் குறித்தும், குறுகிய மனப்பான்மை உடையவர்களாக சித்தரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளால் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக செய்திகள் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் கடந்த காலங்களில் மாண்புமிகு அம்மா மற்றும் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆட்சி காலத்தில் வடமாநில தொழிலாளர்களின் அச்ச உணர்வின்றி சுதந்திரமாக அவர்களாகவே விரும்பிவந்து தங்கி பணிபுரியும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது சட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் நிலை நிலவுகிறது.
இத்தகைய நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகங்கள் தனது உறுதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, வதந்திகளை கட்டுப்படுத்தி தொழில் முனைவோர்களின் உற்பத்தி திறன் பாதிக்காத வண்ணமும், வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பாதுகாப்போடும், சுதந்திரமாகவும் உள்ளனர் என்பதை உறுதிபடுத்தவும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கோவை, திருப்பூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.