வடமாநில தொழிலாளர்கள் வீடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சியுடன் தொடர்பு உள்ளது – டிஜிபி சைலேந்திரபாபு

shailendrababu.jpg

​கடந்த ஒரு வார காலமாக வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பீகார் அரசு நியமித்த குழுவினர் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டு அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் மேற்கொண்டனர்.  

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உட்பட கோவை மாவட்ட தொழிற்சங்க அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் தொழில் அமைப்பினர், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தான  கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த,  சைலேந்திரபாபு, “கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் தொழிலதிபர்கள் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் செய்திகள் அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தையும் நல்முறையில் கையாண்டு தற்பொழுது அனைத்தும் இயல்பு நிலைக்கு வருவதற்கு உதவி புரிந்த தொழில்துறையினருக்கு காவல்துறை சார்பில் தங்களது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அறிக்கையின் பின்பு இந்த பதட்டம் அனைத்தும் நன்கு தணிந்து உள்ளது. எனவே முதலமைச்சருக்கும் காவல்துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டி உள்ளது. இன்னும் ஒரு சிலர் தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். நமது காவல் துறையினர் டெல்லி, பெங்களூர், பாட்னா உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டுள்ளனர். இச்சம்பவங்களில் ஈடுபட்ட சிலர் தலைமுறைவாகியுள்ளனர் சிலர் நீதிமன்றங்களை நாடி உள்ளனர். காவல்துறையினர் மற்றும் தொழில் அமைப்பினர்கள் இணைந்து ஒரு whatsapp குழு ஒன்றை உருவாக்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு ரோந்து வாகனங்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கின்ற பகுதிகளுக்கு சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், சிசிடிவி கேமராக்களை அங்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாநில தொழிலாளர்களின் ஊர்களில் உள்ள உறவினர்கள் தான் பெரும்பாலும் பயந்துள்ளனர். அவர்களிடமும் இது குறித்து எடுத்துரைக்க அம்மாநில காவல்துறையிடம் பேசியுள்ளோம். கோவையில் உள்ள முக்கியமான தொழிற்சாலையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்க உள்ளோம். இந்த விவகாரம் குறித்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலன் விசாரணை மேற்கொள்ளும் போது இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரிய வரும். இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தேவையில்லாமல் தமிழ்நாட்டில் நடைபெறாத வீடியோக்களை எல்லாம் பரப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் அதிகமாக தாக்கப்பட்டதாக இரண்டு பேர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அது வட இந்தியா முழுவதும் பரவியுள்ளது இதனை நேற்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.  இதனையடுத்து தாங்கள் அவர்களை ரகசியமாக அழைத்து தங்களுக்கும் இது போன்ற ஒரு வீடியோ செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட போது அவர்கள் நாங்கள் நன்கு செய்து தருகிறோம் என கூறுகிறார்கள், அவர்களிடம் இதற்கு முந்தைய வீடியோவிற்கு பணப்பெற்று கொண்டீர்களா என கேட்டபோது இன்னும் பெறவில்லை என கூறுகிறார்கள், பின்பு இதுபோன்று ஒரு டிராமா வீடியோவை தயார் செய்து உள்ளார்கள் அந்த வீடியோவை பெற்று அதனை வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பு செய்துள்ளோம். மேலும் தாம்பரத்தில் தொழிலாளர்கள் தங்கியிருக்கின்ற இடத்தில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த போது அதனை வீடியோ எடுத்த ஒரு நபர்,  தமிழ்நாட்டில் இவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவரை வெளியில் அழைத்து செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என ஒரு பதட்டமான வீடியோவை உருவாக்கி பதிவு செய்கிறார். அதனை விசாரித்த போது அது போன்ற ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. தற்போது அந்த வீடியோ பதிவு செய்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.  

மேலும் தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு அரசியல் கட்சியுடன் தொடர்பும் உள்ளது. இது போன்ற பயங்கரமான வீடியோக்களை பதிவு செய்யும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளது பீகார் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது துவங்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் கமிட்டி என்பது இங்கே ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் வட மாநிலத்தில் நிகழும் சம்பவங்களில் சந்தேகம் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ள நோடல் ஆபீசர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கிருப்பவர்களும் இங்கு தொடர்பு கொள்ளலாம். ரவுடிகளை பொறுத்த வரை கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறை அதிகாரிகளையும் கொன்றுள்ளனர். அந்நிலையில் அவர்களை கைது செய்வது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் அதற்கேற்ற முடிவுகள் எடுக்கப்படும். அதுபோன்ற நேரத்தில் துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது என நாம் அறிவுறுத்த முடியாது ஏனென்றால் அவர்களுடைய உயிரும் உடைமைகளும் முக்கியம். சமூக வலைத்தளங்களை குற்றம் செய்ய பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், கைது நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கும்.

scroll to top