ரூட் கிளியர் செய்த திமுக; குழப்பம் செய்யும் பாஜக -ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சடுகுடு

election.webp

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது  மறைவையடுத்து  காலியாக  உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதற்கேற்ப இத்தொகுதியில் அதிமுக வேட்பாளரே களம் இறக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி அணியிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதே நேரத்தில் திமுக அணியில் கே.வி.ராமலிங்கமா? வி.சி.சந்திரகுமாரா வேட்பாளர் என்று ஹேஸ்யங்கள் அடிபட்ட நிலையில் கூட்டணி தர்மப்படி காங்கிரஸே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி செய்து, ‘வேட்பாளரை டெல்லி தலைமை அறிவிக்கும்!’ என தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் ரூட் கிளியர்.  

ஆனால் அதிமுக தரப்பில்தான் ஏகப்பட்ட சர்ச்சைகள்.

முதலாவது அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 90 சதவீதம் தொண்டர் மற்றும் நிர்வாகிகள் படையை வைத்திருக்கும் இபிஎஸ் அணி தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தி, அவருக்கே பரிந்துரைக் கடிதம் கொடுக்கும் எனத் தெரிகிறது.

அந்த பரிந்துரைக் கடிதத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பம் மட்டுமே இருக்கும். அதையே நீதிமன்றம் தற்காலிகமாக அனுமதித்துள்ளது. அந்தத் தற்காலிகப் பதவிக்கு வேல்யூவை தேர்தல் ஆணையம் கொடுக்குமா? அதன் மூலம் எடப்பாடி அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு முன்பு வரை தேர்தலுக்குத் தேர்தல் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரின் கையொப்பத்தை வைத்தே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து வந்துள்ளது. இந்த முறை அப்படி இருவரின் கையெழுத்து சாத்தியமில்லை என்றான நிலையில் முடிவு என்னவாக இருக்கும் என்பது அதிமுக தரப்பில் மட்டுமல்ல, எதிர்த்துப் போட்டியிடும் திமுக கூட்டணியிலும் அழுத்தமான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியும். மத்திய ஆளுங்கட்சியும், அதிமுகவின் இரண்டு அணிகளை ஆட்டுவிக்கும் சக்தியுமான பாஜக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலுக்கென 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளதுதான் ஹைலைட்.

இதற்கான அறிவிப்பை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், எம்.எல்.ஏ சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, சிவசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் செந்தில், சிவகாமி மகேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக ஒரு பக்கம் பேச்சு. அதேசமயம் இது அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் அணியை இணைக்க, பேச்சுவார்த்தை நடத்த பாஜக நடத்தும் திரைமறைவு அரசியல் என்றும் சொல்லப்படுகிறது.

‘இரண்டு அணிகளும் இணைந்து இந்தத் தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்பு. இல்லாவிட்டால் அதிமுக கடுமையான தோல்வியை சந்திக்கும். ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதற்கு. 2009 ஆம் ஆண்டில் நடந்த தொண்டாமுத்தூர் இடைத் தேர்தலே ஓர் உதாரணம். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவே தேர்தல் புறக்கணிப்பை செய்திருந்தார். அதே நிலைதான் இப்போதும் உள்ளது. எனவே அதிமுக இரண்டு அணிகளும் பாஜகவை ஆதரிப்பதே நல்லது. அல்லது அதிமுக வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிடட்டும்!’ என்ற கருத்தை அதிமுக எடப்பாடி தரப்புக்கு பாஜக வலியுறுத்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது.

ஆனால் இபிஎஸ் அணி தன் வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரமாக உள்ளது. கிடைத்தால் இரட்டை இலை; இல்லாவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் வென்று காட்டுவோம் என தீவிரமாக உள்ளது. எனவே பாஜகவும் தன் வேட்பாளரை அறிவிக்கும், அதற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வார் என்று பாஜக வட்டாரத்தில் பேச்சாக இருந்து வருகிறது.

scroll to top