இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பு வகித்த விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது பதவிக்கு ராணுவத் தளபதியாக இருக்கும் எம்.எம். நரவனேவை மத்திய அரசு நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம். நரவனேவின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எம்.எம். நரவனே ஓய்வுபெற்ற பிறகு மனோஜ் பாண்டே முறைப்படி ராணுவத் தளபதியாக பதவியேற்பார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பு வகித்து வந்தார். அதற்கு முன்பாக, இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் – நிகோபார் கமாண்டராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.