யானை தந்தத்தால் குத்திய வாலிபரை​ காப்பாற்றிய கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள்

IMG_4175.jpg

பழனி அருகே ஒரு காட்டில் யானை ஒன்று வாலிபரை  தந்தத்தால் குத்தியது. உடனே அந்த வாலிபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் அந்த வாலிபரை பரிசோதித்தபோது பெருங்குடல் வெளியே வந்த நிலையில் இருந்தது உடனடியாக மேல்சிகிச்சைக்காக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.​​

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு  வந்த அந்த வாலிபரை பரிசோதித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள்  மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் Dr.சதீஷ்குமார் அவரது ரத்த அழுத்தம் மற்றும்  ஆக்சிஜன் அளவும் மிகவும் குறைவாக இருந்தது. மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். உடனடியாக அந்த வாலிபருக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. ரத்த அழுத்தத்தை மேம்படுத்த ரத்தமும், மருந்துகளும் செலுத்தப்பட்டன. சுவாச கருவிகள் பொருத்தி ஆக்சிஜன் அளவு மேம்படுத்தப்பட்டது. சிடி ஸ்கேன் செய்ததில், யானையின் தந்தம், அவரது மார்பு பகுதியும் வயிற்று பகுதியும் பிரிக்கும் தோலின் நடுவே ஆழமாக காயம் ஏற்பட்டிருந்தது. அதோடு, மார்பு எலும்பு மற்றும் பின்பகுதியில் இடதுபுறம் உள்ள எலும்புகளும் உடைந்திருந்தது. மிக முக்கியமாக, பெருங்குடல் பகுதியானது, மார்புக்குள் சென்று இதயத்தையும் நுரையீரலையும் அழுத்தியிருந்ததோடு, வயிற்றுக்கு வெளி பகுதியில் வந்திருந்தது.. அவர் உடனடியாக அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வயிற்று பகுதி திறக்கப்பட்டு, மார்புக்குள் சென்றிருந்த சிறு, பெருங்குடல் மற்றும் கல்லீரல் போன்றவை மீண்டும் வயிற்றுப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. கிழிக்கப்பட்டிருந்த உடலின் உள்பகுதி மற்றும் மேல்பகுதி சதைகள் சரிப்படுத்தப்பட்டு, மீண்டும் மார்பு பகுதிக்கு குடல் செல்லாமல் தடுக்கப்பட்டது. இது நுரையீரலை மீண்டும் விரிவடையச் செய்தது. அவரது மார்பு பகுதியில்  ஏற்பட்ட காயமும் சுத்தம் செய்யப்பட்டு, சிகிச்சை  செய்யப்பட்டது. பல பாகங்கள் காயம் அடைந்திருந்ததால், அவருக்கு சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவர் முற்றிலும் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளார்.

யானை தந்தத்தால் குத்தி உயிர் பிழைப்போர் மிகவும் குறைவே. இத்தகைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சேருவதும் கடினம். இந்த நோயாளி அதிர்ஷ்டவசமாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததோடு, பல்வேறு  பிரிவுகளை சேர்ந்த மருத்துவ குழுவினர் விரைந்து செயல்பட்டு இவரை காப்பாற்ற முடிந்தது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் கூறுகையில், ” உயிருக்கு போராடிய இந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன். மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதால் தான்  இம்மாதிரியான சிக்கலான சவாலான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முடிகிறது,” என்றார்.

scroll to top