தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் யானைகள் சென்று வர ரயில்ப்பாதையின் அடியே சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. தென்னக ரயில்வேயில் யானைகளுக்காக அமைக்கப்படும் முதல் சுரங்கப் பாதை இதுதான். இதன் மூலம் ரயிலில் யானைகள் அடிபட்டு இறப்பது தவிர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் ரயில்வே துறையினர். ஆனால் இதனால் எந்தப் பயனும் இல்லை என்று கருத்துத் தெரிவிக்கின்றனர் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள்.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க இந்த சுரங்கப் பாதைக்கான பரிந்துரை கடந்த 2010-ம் ஆண்டே வழங்கப்பட்டுவிட்டது. 12 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு நீதிமன்றம் தலையிட்டதன் பின்னணியில் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு – கேரளா எல்லையில் எட்டிமடை – கஞ்சிக்கோடு ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏ மற்றும் பி என இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன. இவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்கின்றன. ரயில் தடங்களின் இரு புறமும் அடர்ந்த வனப்பகுதிகளிலும் யானைகளின் வழித்தடமும் அமைந்துள்ளன. 2002 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 21 ஆண்டுகளில் இந்த நிலப்பரப்பில் மட்டும் 28 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன.
இதில் பெரும்பாலான விபத்துகள் பி வழித்தடத்தில் நடந்துள்ளன. இதனால் யானைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. இது தொடர்பாக ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில் முதன்மையானது யானைகள் கடந்து செல்ல பி வழித்தடத்தில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்பது தான். இதற்கான பரிந்துரை கடந்த 2010 ஆம் ஆண்டே வழங்கப்பட்டிருந்தாலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சுரங்கப் பாதை அமையவிருக்கும் இடத்திற்கு சென்றோம். பி லைன் என சொல்லப்படும் ரயில்வே பாதை மாவூத்தம்பதி தாண்டி மொடமாத்தி என்ற கிராமத்தில் கிழக்கு மேற்காக செல்கிறது. ரயில்பாதை பத்தடி ஏரிபோன்ற பகுதியில் அமைந்திருக்க, இதன் மீது பட்டப்பகலிலேயே யானைகள் ஏறி கடக்கின்றன இதன் இரண்டு பகுதிகளிலும் வனப்பகுதிக்கு சொந்தமான காடுகளும், விவசாய பட்டா நிலங்களும் உள்ளன. நாம் சென்ற போது மதியம் 2 மணிக்கே ஒரு யானை இந்த ஏரியில் ஏறி அப்புறமாக கடந்து செல்வதைக் காண முடிந்தது. அந்த ஏரியிலேயே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஒற்றை அடிப்பாதையில் பயணித்தால் அங்கே சுரங்க வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. இது முதல் சுரங்கம். இன்னும் இரண்டொரு மாதத்தில் நடந்து விடும். பணிகள் நடந்து கொண்டிருப்பதால் இங்கே வரும் ரயில்கள் மிகவும் மெதுவாக செல்வதைக் காண முடிந்தது.
18.3 மீட்டர் அகலம், 6.06 மீட்டர் உயரத்தில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி பி வழித்தடத்தில் ஒன்பது மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுரங்கப் பாதை தோண்டப்பட்டு இரண்டு தற்காலிக தூண்கள் எழுப்பட்டுள்ளன. கான்க்ரீட் தளம் அமைப்பதற்கான குழி தோண்டப்பட்டுள்ளது. முதல் சுரங்கப் பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது சுரங்கப் பாதைக்கான பணிகளும் விரைந்து தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை, தென்னை, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களிடம் பேசியபோது, ‘யானை அந்த இடத்தில் மட்டும்தான் சுரங்க வழியே செல்லும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு எங்கே வேண்டுமானாலும் ஏறி ரயில்பாதையை கடக்க முடியும். எனவே இந்த நான்கு கிலோமீட்டர் தூரமும் ரயில் பாதையின் இருமருங்கும் தண்டவாளகளை உயரமாகவும், குறுக்காகவும் வைத்து தடுப்பு நிறுவ வேண்டும். அது யானைகள் பிடுங்கி எறியாத அளவுக்கு பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். இப்போது இங்கே நான்கு இடங்களில் கண்காணிப்புக் கோபுரம், தானியங்கிக் கேமரா வசதி செய்ய இருப்பதாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக வனத்துறையினர் சொல்கிறார்கள். அதில் அமர்ந்து யானை வரும்போது சியர்ச் லைட் அடித்தோ, சத்தமிட்டோ விரட்டினால் அவை நேராக இந்தப் பக்கம் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள்தான் புகும். அதனால் முன்பை விட எங்களுக்குப் பயிர்ச்சேதங்களும், உயிர்ப்பயமும்தான் ஏற்படும். அதற்குப் பதிலாக இங்கே தோட்டங்கள் உள்ள இடங்களில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்கள் நிறுவி பவர்ஃபுல் லைட்டுகள் போட வேண்டும். அப்போதுதான் யானைகள் அங்கே காடுகளுக்குள்ளேயே நிற்கும். வனத்துறை அதிகாரிகள் பலரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறோம். செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் பார்ப்போம்!’’ என்றனர்.