THE KOVAI HERALD:
கோவை கேரள எல்லைப்பகுதியான மதுக்கரை வாளையாறு ரயில்வே பாதையில் ரயிலில் காட்டுயானைகள் அடிபட்டு இறப்பது அன்றாட நிகழ்வாக மாறி வருகிறது. இதுவரை இந்த வழித்தடத்தில் சுமார் 25 கிமீ தொலைவுக்குள் மட்டும் 35 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. இதற்காக எத்தனையோ கோரிக்கைகள், போராட்டங்கள் நடத்தியும் ரயில்வேத்துறை கண்டுகொள்வதாக இல்லை.
15 நாட்களுக்கு முன்பு ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் வாளையாறு அருகே ரயிலில் சிக்க, பெரிய யானை அதே இடத்தில் இறந்தது. காயம் பட்ட குட்டியானை காடுகளுக்குள் அலைந்து திரிந்தது அது இப்போது உயிருடன் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. இந்த சம்பவம் தமிழகம், கேரள பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கோபத்திற்குள்ளாக்கியது.
‘ரயில்பாதையில் குறிப்பிட்ட யானை வழித்தடங்களில் ரயிலை 30 கிலோமீட்டருக்கு குறைத்துள்ளோம் என்று போர்டு வைத்ததோடு ரயில்வே நிர்வாகம் இருப்பது சரியான போக்கு அல்ல. இதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்!’ என்று சொல்லி பாலக்காடு ரயில்வே கோட்டம் முன்பு கடந்த வெள்ளியன்று வனவிலங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஊர்வலம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தற்போதுள்ள ரயில்பாதை யானை வழித்தடமாக இருப்பதால் இதை அப்படியே விட்டு விட்டு காடுகளுக்கு வெளியே புதிய பாதையை உருவாக்குங்கள் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் சங்கம் இதில் கோரிக்கை வைத்தது.
வன உயிரினப் பாதுகாவலர் எஸ்.குருவாயூரப்பன் தலைமையில் வயநாடு இயற்கைப் பாதுகாப்புக் குழு யர்மன் என்.பாதுஷா தர்ணாவை துவக்கி வைத்தார். பாலக்காடு – கோயம்புத்தூர் ரயில் பாதையை வனப்பகுதிக்கு வெளியே மாற்றவும் அல்லது ஆபத்து மண்டலத்தைக் கண்டறிந்து, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும், பொள்ளாச்சி வழியாக நீண்ட தூர ரயில்களை இயக்க வேண்டும். சென்சார்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வேகத்தைக் குறைக்கவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குரல்கள் வந்தன.
தவிர பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் சீரற்ற நிலையில் உள்ளது. தமிழக-கேரள வனத்துறையினர் மார்ச் மாதம் பொதுமக்களின் போராட்டம் மற்றும் குற்றவியல் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் செய்தனர் வன உயிரின ஆர்வலர்கள்.
இந்த போராட்டத்தில் ஆரண்ய வனம் மற்றும் சரணாலயம், பாண்டிச்சேரி, யானைகள் பராமரிப்பு குழு முதன்மை நிர்வாகி டி.சரவணன் சிறப்புரையாற்றினார். கே.எம்.சுலைமான், தீயில்லா வனம், எஸ். ஜெயச்சந்திரன், தமிழ்நாடு பசுமை இயக்கம் கே. மோகன் ராஜ், செவ் கோயம்புத்தூர், என்.சசீந்திர பாபு, காந்தி பீஸ் அறக்கட்டளையின் வி.எஸ்.கிரிஷன், சுஜோபி ஜோஸ், புனர்ஜனியின் தீபம் சுரேஷ், பி.சுதாகரன், சஜேவன் பூவ்வகோட், போபன் மாட்டுமந்தா, ஓசை காளிதாஸ், டி. சக்தி வேல் சத்தியமங்கலம், தாமஸ் அம்பலவயல் ஆகியோர் பேசினர்.
யானைகள் மனித மோதலில் ஆங்காங்கே போராட்டங்கள், அறிக்கை போர்கள் இதுவரை நடந்து வந்துள்ளன. இந்த நிலையில் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த வனஉயிரின ஆர்வலர்கள் நேரடியாக பாலக்காடு ரயில்வே டிவிஷன் முன்பே முற்றுகைப் போராட்டம் நடத்தியது சூழலியல் ஆர்வலர்களிடம் புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளது.
KAMALAKANNAN.S Ph.92443 17182