கேயெஸ்வி
கிருஷ்ணகிரியில் சில மாதங்கள் முன்பு தோட்டங்காடுகளில் புகுந்து கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்தது மக்னா வகை யானை ஒன்று. அதை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிவிட்டும், திரும்பத் திரும்ப விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ய, வேறு வழியில்லாத அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வந்து கோவை வால்பாறை அருகே உள்ள டாப்ஸ்லிப் வரகளியாறு காட்டில் விட்டனர்.
ஆயினும் அங்கே அந்த யானை இருக்கப்பிடிக்காமல் டாப்ஸ்லிப், ஆளியாறு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு என பயணித்து கோவை நகருக்குள்ளும் வந்து சேர்ந்தது. இந்த யானை பூர்வீக இடமான கிருஷ்ணகிரிக்கே போக முயற்சிக்கிறது என யானை ஆர்வலர்கள் பொங்க. வனத்துறையினரோ, இதை மீண்டும் மயக்க ஊசி போட்டுப் பிடித்து கோவை மாவட்டம், காரமடை வெள்ளியங்காடு வனப்பகுதியில் விட முயற்சி செய்தனர். ஆனால் அங்கே உள்ள பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்புக் காரணமாக, தம் முயற்சியைக் கைவிட்டு மறுபடியும் மக்னவை டாப்ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியிலேயே விட்டனர். இந்த சம்பவம் இரண்டு வராம் முன்பு கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவச்சுவடு மறையவில்லை. காரமடை வனத்திலிருந்து வெளியேறின இன்னொரு மக்னா வகை யானை ஒன்று கடந்த 14 ம்தேதி முதல் வெள்ளியங்காடு, கோபனாரி, மேட்டுப்பாளையம், தோலம்பாளையம் என பல்வேறு கிராமங்களில் சுற்றித்திரிவதாக தகவல்கள் வர ஆரம்பித்தது. வனத்துறைக்கு தகவல் தெரிந்து அந்த யானையை கண்காணித்ததில் யானையின் உடல் நிலை குன்றிருப்பதும், உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் மட்டும் அருந்தி வருவதும் கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து யானையை ஆய்வு செய்ததில் அதன் நாக்கின் நடுப்பகுதியில் பெரிய வெட்டுக்காயம் இருப்பதும், அதனால் அது உணவு உட்கொள்ள முடியாமல் திண்டாடி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து இதற்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை சின்னத்தம்பியின் உதவியுடன் பிடித்த வனத்துறையினர் கூண்டில் ஏற்றிக் கொண்டு போய் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தர்மபுரி பென்னாகரம் அருகே நீர்க்குந்தி பகுதியில் ஒரு வாரம் முன்பு நான்கு மாத ஆண் யானைக் குட்டி தாயை பிரிந்து சுற்றித் திரிந்தது. இது இங்குள்ள விவசாய கிணறு ஒன்றில் விழுந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்புத் துறை உதவியுடன் இந்த குட்டி யானையை கயிறு கட்டி மீட்டனர். இந்த யானைக் குட்டியின் தாய் யானையை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவியதால் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒட்டர்பட்டி பகுதியில் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. வனத்துறைக்கான கால்நடை மருத்துவர்கள் இந்தக் குட்டிக்கு சிகிச்சை அளித்த பின்னர் வன ஊழியர் மகேந்திரன் யானைக் குட்டியை பராமரித்து வந்தார்.
இதே சமயம் இதே தர்மபுரி மாரண்டஹள்ளி அள்ளி அருகே மின் வேலியில் சிக்கி இரண்டு யானைகள் உயிரிழந்தது. அதில் தாயைப் பிரிந்த குட்டிகள் 2 தவியாய் தவித்தது. அவற்றை யானைக் கூட்டத்துடன் சேர்க்க பல்வேறு முயற்சிகள் எடுத்தனர் வனத்துறையினர். இதற்கு முதுமலையில் சமீபத்தில் ஆஸ்கர் விருது வாங்கின படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் வரவழைக்கப்பட்டிருந்தார். இந்த நேரத்தில் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட யானைக்குட்டியை அங்கேயே வைத்து பராமரிக்க முடியாததால் முதுமலை முகாமுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர் வனத்துறையினர். அதன் நிமித்தம் தர்மபுரியிலிருந்து பொம்மன் பாகன் இந்தக்குட்டியுடன் முதுமலை வந்தார். அவர் வீட்டில் இந்தக் குட்டியை வைத்துப் பராமரிக்க ஏற்பாடு நடந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இப்படி கோவை மண்டலத்தைச் சுற்றிலும் இந்த வாரம் முழுக்க யானைகள் குறித்த செய்திகள்தான் கடைவிரிக்கின்றன. அதிலும் மக்னா வகை யானைக்கும், சின்ன வயதில் தாயைப் பிரியும் குட்டி யானைகளுக்குமான சோகம் சொல்லில் அடங்காது.
பொதுவாக மக்னா வகை யானைகள் (கொம்பில்லாத ஆண் யானை) காடுகளில் தென்படுவதே அபூர்வம். 1998-ல் கேரள, தமிழக, கர்நாடக எல்லையில் முதன் முறையாக இத்தகைய மக்னா மக்களை அச்சுறுத்துவதாக, ஆட்களை அடித்துக் கொல்வதாக பிடித்தனர் முதுமலை வனத்துறையினர். அதை பழக்கி பரமசாதுவாக்கி பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். அதன் பெயர்தான் தற்போது முதுமலை முகாமில் இருக்கும் மூர்த்தி.
இதற்குப் பிறகு மக்னா எங்காவது தென்பட்டாலும் இப்படி வனத்துறையினர் பிடிப்பது அபூர்வம். இந்த முறை கோவை வனச்சரகத்திலேயே இரண்டு மக்னா பிடிக்கப்பட்டு சர்ச்சைகளும் வளர்ந்திருக்கிறது. பொதுவாக மக்னா தனியே சுற்றும். மற்ற யானைக்கூட்டத்துடனும் சேராது. மக்கள் கண்களுக்கும் தட்டுப்படாது. இப்போது அவை வெளியே வருகிறதென்றால் அதற்கு காட்டில் தீவனங்களும், தண்ணீரும் இல்லை என்று பொருள் என்கிறார்கள் வன உயிரின ஆர்வலர்கள்.
அதேபோல் குட்டிகளை விட்டுப் பிரியும் தாய் யானைகள் இளம் வயதிலேயே கன்று ஈன்றிருக்கும். அதைப் பராமரிக்கத் தெரியாது. அதன் கூட்டத்து யானைகளும் அதற்கு ஒத்துழைக்காது இருந்திருக்கும். அதை விட முக்கியமாய் அவை தீவனம் தேடிச் செல்லும் போது பெரும் பசி ஆட்கொள்ள அதிலேயே கவனம் கொள்ள குட்டிகளை கவனப்பிசகாக விட்டிருக்கும். இப்படியான சோகங்கள்தான் குட்டிகள் தம் கூட்டத்தை விட்டுப் பிரிவதற்கான காரணம் என்கிறார்கள். மொத்தத்தில் காடு காடாக இல்லை. விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறுகின்றன. பருவம் மாறி மழை பெய்கின்றன. பருவம் மாறிப் பூக்கின்றன. எனவேதான் உயிரினங்களில் பெரிய உயிரினமான யானைகளும் இந்தப் பாடு படுகின்றன என்கிறார்கள் சூழலியலாளர்கள்.