மோடியுடன் நெருக்கம் பாராட்டின ஸ்டாலின்:கலங்கி நிற்கும் கூட்டணிக் கட்சிகள்

Pi7_Image_20220730_090856.jpg

THE KOVAI HERALD:

ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பாராட்டிய நெருக்கம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதே சமயம் இருதரப்புக் கூட்டணிக் கட்சிகளையும் கலங்கச் செய்துள்ளது.

நேரு உள் விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடைபெற்ற செஸ் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பிரதமரை தமிழக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே. என் நேரு, மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விளையாட்டு அரங்கின் விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி இணைந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீபத்தை விஸ்வநாத் ஆனந்த் இடம் வழங்கினர். அப்போது இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டினார். இதற்கு முன்பு பிரதமர் சென்னை வருகையின்போது நடந்த விழாவில் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே மாநிலத்திற்கு முதல்வர் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை கேட்டார். பொது மேடையில் இப்படி நேரடியாக பிரதமரைக் கேட்பது சரியல்ல என்ற விமர்சனங்கள் அப்போது எழுந்தது. அதன் மூலம் எதிர்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலக் கட்சிகள் ஸ்டாலினை பாராட்டவும் செய்தது. திமுகவுடன் கூட்டணி கொண்டுள்ள கட்சிகளும் அவரை புகழ்ந்து தள்ளின. ஆனால் இப்போதைய நிகழ்ச்சியில் பிரதமருடன் மிகவும் இணக்கமாகவே முதல்வர் நடந்து கொண்டார். 

மேடைக்கு வந்தவுடன் ஸ்டாலின் அவரை இன்முகத்துடன் வரவேற்றார். மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பத்தை வழங்கினார், அதை பிரதமர் மோடி முகமலர்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.  ‘நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து உடல்நலம் விசாரித்தார். எனது நிலைமையை புரிந்துகொண்டு நிச்சயம் வருகிறேன் என வாக்குறுதியும் அளித்தார்!’ என்று பிரதமர் குறித்து நெகிழ்ந்து பேசினார்.

இருவரும் அருகருகில் அமர்ந்து இடையிடையே நட்பாக உரையாடிக் கொண்டிருந்தனர். சீனா அதிபர் தமிழகம் வந்தபோது பிரதமர் அவரை மாமல்லபுரத்தில் வைத்துதான் சந்தித்தார். மாமல்லபுரம் என்பது பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பதை அறிந்து கொண்டு முதலமைச்சல் அவருக்கு கடற்கரைக் கோவில் சிற்பத்தை வழங்கியிருக்கிறார் என்பதே கட்சியினர் சிலரிடம் பேச்சாக இருந்தது. இது பாஜக -திமுக தொண்டர்கள் மத்தியில் புதுவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரும் முதல்வரும் கலந்து கொண்டனர், அங்கேயும் அவர்கள் நெருக்கம் நீடித்தது.

அப்போது உரையாற்றிய முதல்வர், ‘பிரதமர் மோடியின் கையால் மாணவர்கள் பட்டம் பெறுவது பெருமைக்குரிய விஷயம்!’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிற்பகல் 12 மணியளவில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிரதமரை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி வழியனுப்பி வைத்தனர்.அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் நினைவாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காய்களுடன் சதுரங்க பலகை வழங்கினார்.

இது எல்லாம் தற்போது தமிழக அரசியலில் இரண்டு விதமாகப் பேசப்படும் சமாச்சாரமாக மாறியிருக்கிறது. ஒன்று நாட்டின் பிரதமர் தன் மாநிலத்திற்கு அரசு விழா நிமித்தம் வரும்போது ஆயிரம் அரசியல் மாச்சர்யங்கள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு இணக்கம் கொண்டு செயல்படுவதுதான் மாநில நலனுக்கு நல்லது. அதைத்தான் ஸ்டாலின் செய்திருக்கிறார். இந்தப் பக்குவத்தைப் பாராட்டியே தீர வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. இவர்கள் பெரும்பாலும் கட்சி சாராதவர்கள். கட்சி சார்புள்ளவர்களோ இதை வேறு விதமாகப் பார்க்கின்றனர். குறிப்பாக கூட்டணிக் கட்சிகளிடம் பெரும் கலக்கமே நிலவுகிறது. இது குறித்து அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிக்காரர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘தற்போது அதிமுகவில் இரு தரப்புக்கான கலகம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அதிமுகவுடன் இணக்கம் காட்டிய பாஜக டெல்லி தலைமை இப்போது அதனுடன் மாறுபட்டு நிற்கிறது. அதே சமயம் இப்போது திமுகவுடன் நெருக்கம் கொள்கிறது. இது வெறுமனே திமுக காட்டிய நெருக்கம் அல்ல. ஏற்கனவே டெல்லி அளவில் பேசி வைத்த நெருக்கம் போலவே உள்ளது. இதன் மூலம் எதிர்வரும் காலத்தில் குறிப்பாக அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் திமுக பாஜகவுடன் இன்னமும் நெருக்கம் பூண்டு விடலாம். கூட்டணி கூட சேரலாம். ஏனென்றால் நிதி உட்பட, பல்வேறு  நலத்திட்டங்கள் வரை மத்திய அரசின் உதவியில்லாமல் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவது கடினம். அதற்காக எதையும் செய்யலாம். பாஜகவுடன் கூட்டணி சேருவது திமுகவிற்கு புதிதல்ல. 1999 -2004-ல் அவர்கள் பாராட்டாத நெருக்கமா? அதே நிலை இப்போது ஏற்படுவதற்கான அச்சாரம்தான் இது. அப்படி மட்டும் நடந்தால் பாஜக எதிர்ப்பு என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கும் அத்தனை கட்சிகளும் நேராக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.அதிமுகவில் பெரிய அணி எடப்பாடி பழனிசாமியினுடையதாகவே உள்ளது. எனவே அவர் அணியில் இந்தக் கட்சிகள் கூட்டணி சேரும்போது பெரும் பலம் ஆகி விடும்!’’ என்றனர் நம்மிடம் பேசியவர்கள்.

அரசியலில் எப்போதும், எதுவும் நடக்கலாம்தானே?

scroll to top