நூல் விலை வரலாறு காணாத அளவில் 480 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கரூர் உள்பட சில மாவட்டங்களில் நூல் மற்றும் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சகணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் கடந்த 16, 17 (மே மாதம்) ஆகிய இரு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந்தேதி (மே) முதல் ஜூன் 5-ந்தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம், சோமனூர், அவினாசி, மங்கலம், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.