மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவிலில் உள்ள, ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
இதனையொட்டி இந்த ஆண்டிற்கான தைலகாப்பு உற்சவ விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ கள்ளழகர் என அழைக்க கூடிய சுந்தரராஜ பெருமாள் நூபுரகங்கையில் எழுந்தருளி தீர்த்தமாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதனையொட்டி முன்னதாக, மலை அடிவாரத்திலுள்ள ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் இருந்து, பல்லக்கில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளப்பட்டு மலைமீது உள்ள ராக்காயிஅம்மன் திருக்கோயிலில் மண்டக்கப்படிக்கு பக்தர்களால் சுமந்து வரப்பட்டு, அங்கு பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டகப்படியில், ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு, திருக்கோயில் பட்டர்களால் தைலக்காப்பு நடத்தி, தலைமுடி சீவி அலங்கரிக்கப்பட்டு திருமுகத்தினை கண்ணாடியில் காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தீர்த்தமாடல் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
கொரானா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக, இந்த தைலகாப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என ஏற்கனவே கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற தைலகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது….