ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக ரூ.10 முதல் ரூ. 50 ரூபாய் வரை வசூலிக்க முடிவு செய்யப் பட்டிருப்பதால் ரயில் பயணக் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 50 க்கும் அதிகமான முக்கிய ரயில் நிலையங்களை தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் ரயில் பயணிகளிடம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போரிடம் டிக்கெட் கட்டணத்துடன் தலா ரூ. 10-ம், குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவுப் பெட்டிகளில் 2 ஆம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி பயணிகளிடமும் முதல் வகுப்பு பயணிகளிடமும் கட்டணத்துடன் ரூ. 25-ம், கூடுதலாக பெற ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும். அத்தகைய ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் என்றால் மேம்பாட்டு நிதியாக பாதி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பயணி புறப்படும் இடமும் இறங்கும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் என்றால் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.