முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கும் சதி: கேரள ஆளுநர்

Arif-Mohammad-Khan-kerala-governor-Hijab.jpg

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாபுக்கு தடை விதித்ததால் மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்தனர். இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “ஹிஜாப் சர்ச்சையல்ல அது முஸ்லிம் பெண்களை பின்னுக்கு இழுக்கும் சதி வலை. மதத்திற்கும் கல்விக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. இஸ்லாம் மதத்தின் நோக்கமே மனிதனுக்கு அறிவை நல்குவதுதான். இஸ்லாம் மதத்தின் புனித நூலான குரானில் ஐந்து கடமைகள் உள்ளன. அவற்றில் ஹிஜாப் இல்லை. நம்பிக்கை, ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் நோன்பு, ஈகை, ஹஜ் யாத்திரை ஆகியன தான் ஐந்து கடமைகளாகக் கூறப்பட்டுள்ளன. அதில் ஹிஜாப் இடம்பெறவில்லை. ஆகையால் இஸ்லாம் மத நம்பிக்கையின் அடிப்படை அம்சம் அல்ல அதனால் அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 அளிக்கும் உரிமையின் கீழ் வராது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் விவகாரம் உருவாகியுள்ளது அறியாமையின் விளைவு. குரானின் முதல் வார்த்தை வாசிப்பு. இறைவனின் நாமத்தை மட்டும் வாசிக்குமாறு குரான் சொல்லவில்லை. விலங்குகள், நட்சத்திரங்கள், விண்வெளி ஆகியனவற்றைப் பற்றி சிந்திக்கச் சொல்கிறது குரான். குரானில், 700க்கும் மேற்பட்ட வார்த்தைகள் ஞானத்தைத் தொடர்புடையதாக உள்ளன ஞானத்தைத் தேடி சீனாவுக்குக் கூட செல்லலாம் எனக் கூறுகிறது குரான். ஒரு மாதமாக கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை நடப்பது முஸ்லிம் பெண்களையும், சிறுமிகளையும் பின்னுக்கு இழுக்கும் சதி வலை. முத்தலாக் தடை செய்யப்பட்ட பின்னர், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள். அவருக்கு விடுதலை உணர்வு கிட்டியுள்ளது. அவர்கள் பெரிய வேலைகளில் அமர்கிறார்கள்” என்று கூறியுள்ளார். கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது முன்னதாக உத்தரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top