நான்கு மாத இடைவெளிக்கு பின்னர், முல்லைப் பெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதைதொடர்ந்து, இடுக்கி மாவட்டம் குமுளியில் நடந்த முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும், அணைப் பகுதிக்குள் தளவாட பொருட்களை கொண்டு செல்ல தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையும் கேரள நீர்ப்பாசனத்துறையும் தடுப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தமிழக அதிகாரிகள் அறிவித்தனர்.