முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மோசடி புகார் கொடுத்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரன். இவர், தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு, விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு  மோசடி செய்ததாக, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரும் முன்னாள்  வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி மீது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து விஜயநல்லதம்பியிடம்
போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி, அதிமுக கட்சியை சேர்ந்த மாரியப்பன் ஆகிய  3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 30 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் ஆகிய  3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை நம்பிக்கை மோசடி உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் (120B,406, 420) வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பியிடம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
3  கோடி ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, பால்வளத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறியும், விஜயநல்லதம்பிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டு பெற்றுத் தருவதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது மதுரை சரக ஐ ஜி யிடம், விஜயநல்லதம்பி புகார் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரவீந்திரன் மற்றும் விஜயநல்லதம்பி கொடுத்த இரண்டு புகார்களின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில், விஜயநல்லதம்பியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த விஜயநல்லதம்பியை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

scroll to top