THE KOVAI HERALD
பேத்தியின் திருமணத்திற்கு முதல்வர் உள்ளிட்ட அத்தனை விவிஐபிக்களையும் அழைத்து திமுகவில் தனக்கான இமேஜை மீண்டும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி. இதன் மூலம் திமுகவில் பொங்கலூர் பழனிசாமியைத் தாண்டி ஒரு விவிஐபி உருவாகவேயில்லை என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் கோவை அரசியல் நோக்கர்கள்.
எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த போதே அக்கட்சிக்குப் போகாது இருந்தவர்தான் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி. அப்போது அவர் திரைத்துறையில் பிலிம் டிஸ்ட்ரிப்யூட்டராக இருந்தார். எம்ஜிஆரே விரும்பி தன் கட்சிக்கு அழைத்தார். ஆனால் எனக்கு ஒரே கட்சி திமுக. ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதி என்று ஓப்பனாக சொல்லி விட்டார். இதை பல இடங்களில் பொங்கலூர் பழனிசாமியே சொல்லியும் உள்ளார்.
அப்போது அவர் திமுகவில் நான்காம், ஐந்தாம் கட்ட நிர்வாகியாகத்தான் இருந்தார். வை.கோ. மதிமுகவை ஆரம்பித்து திமுகவிலிருந்து பிரிந்தபோது கொங்குமண்டல திமுக புள்ளிகள் மு.கண்ணப்பன் உட்பட அங்கே சென்று விட்டனர். இங்கே திமுக ஒட்டுமொத்தமாகவே விஐபிக்கள் இல்லாத கட்சியாக காணப்பட்ட நிலையில் தனது கலைஞர் பாசத்தை காட்ட வேண்டிய சூழல் பொங்கலூர் பழனிசாமிக்கு வாய்த்தது. அதற்கேற்ப அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்க, சிங்காநல்லூர் எம்எல்ஏவும் ஆகி அமைச்சரும் ஆனார்.
அதன் வெளிப்பாடு திமுக கட்சி கோவையில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொண்டது. பொங்கலூரார் காலத்தில் சி.டி.தண்டபாணி, கோவை ராமநாதன், க.ரா. சுப்பையன் என பல்வேறு கோஷ்டிகள் இயங்கி வந்தாலும் அதில் எல்லாம் தானே தலையாய கோஷ்டியாகத் தலையெடுத்தார். மற்ற கோஷ்டிகள் எல்லாம் இவரிடமே சரணடைந்தன.
அந்த அளவுக்கு கோவை திமுகவில் இவரின் செல்வாக்கு உச்சம் பெற்றது. தொடர்ந்து இவர் ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். இவர் மனைவி விஜயலட்சுமி மாவட்ட செயலாளராக ஆனார்.
தமிழகத்திலேயே திமுகவில் முதன்முறையாக ஒரு பெண் மாவட்டச் செயலாளர் என்றும் அவர் பேரெடுத்தார். இப்படி கட்சிக்காக கடுமையாக உழைத்து பொங்கலூரார் குடும்பமே கலைஞர் கருணாநிதியின் குட்புக்கில் இடம்பெற்றது.
இப்படியான சூழலில் அவர் மகனும் கோவை மாநகராட்சி கவுன்சிலராக மண்டலத்தலைவராக ஆனார். அவர் மருமகன் கோகுல் மருத்துவர் அணி செயலாளராக வலம் வந்தார். இதன் மூலம் கோவை மண்டலத்தில் பொங்கலூரார் குடும்பமே திமுகவின் முடிசூடா மன்னர்களாக திகழ்வதாக பத்திரிகைகள் கட்டம் கட்டி எழுத ஆரம்பித்தன.
இதன் விளைவு அடுத்தடுத்த தேர்தல்களில் எம்.எல்.ஏ, எம்பிக்கான சீட்டுகள் பொங்கலூராருக்கு கொடுக்கப்பட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவின் ஒட்டுமொத்த தோல்விக்குக் காரணம் இவரின் குடும்ப அரசியலே என்ற குற்றச்சாட்டுகள் தலைமைக்குப் பறந்தன. அதன் தொடர்ச்சியாக இவர் கோவை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினராக உருவாக்கப்பட்டார்.
தவிர கோவை திமுக ஐந்து கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கெல்லாம் பொறுப்புகள் போடப்பட்டன. அதில் எல்லாம் திமுகவின் கடைகோடி தொண்டர்களும் நிர்வாகிகள் ஆக்கப்பட்டனர். மேலும் கோவை மேயராகவும் சாதாரண உழைப்பாளி குடும்பத்திலிருந்து கல்பனா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்படியும் கூட கோவை மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து உள்ள திமுக விவிஐபிக்கள் உருவாகவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக இருந்து கொண்டு புதிய விவிஐபியை கோவைக்கு உருவாக்க என்னன்னவோ செய்து பார்க்கிறார். யாரும் லைம் லைட்டுக்கு வரவில்லை. இந்த சூழ்நிலையில்தான் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தி திருமணம் கடந்த வியாழனன்று நடைபெற்றது.
பொங்கலூராரின் மகன் வழிப் பேத்திக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகனுக்கும் கோவையில் திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரே திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.. கடந்த வாரம் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பொங்கலூர் பழனிசாமி இல்ல மண விழாவில் பங்கேற்பதற்காக மட்டும் இன்று பிரத்யேகமாக சென்னையிலிருந்து கோவை வந்திருந்தார்.
திமுகவிலிருந்து வைகோ பிரிந்து மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது அவருடன் சென்ற 9 திமுக மாவட்டச் செயலாளர்களில் கோவை மாவட்ட திமுகச் செயலாளராக இருந்த கண்ணப்பனும் ஒருவர். அவர் தற்போது திமுகவில்தான் உள்ளார்.
ஆனால் அரசியலிலிருந்து ஒதுங்கியே உள்ளார். அவரும் இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார். அவர் முன்னிலையிலேயே பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘கட்சியின் சோதனைக்காலங்களில் எல்லாம் தன்னை கடும் உழைப்பில் ஈடுபடுத்தி கட்சிக்காக பாடுபட்டவர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி!’ என்று புகழாரம் சூட்டினார்.
இந்தத் திருமணத்திற்கு தமிழகம் முழுக்க இருந்து திமுக விவிஐபிக்கள், அமைச்சர்கள் அத்தனை பேரும் வந்திருந்தது திருமணத்திற்கு மட்டுமல்ல, அரசியலுக்கே ஹைலைட். இதன் மூலம் தன் இல்லத் திருமணத்தை அரசியலுக்கும், அரசியலை இவர் வீட்டுத் திருமணத்திற்கும் பொங்கலூராரும், கட்சியும் மாறி மாறிப் பயன்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் திரும்பவும் பொங்கலூராரைச் சுற்றி கட்சியினர் கூட்டம் ஆளாய் பறப்பதைக் காண முடிந்தது. இந்த மாற்றம் நிரந்தரமா, தற்காலிகமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
S.KAMALA KANNAN Ph. 9244319559