‘மின் கட்டணம் உயர்ந்தால் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படும், எனவே தமிழக அரசு முடிவை கைவிட வேண்டும்’ என, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மின் கட்டண உயர்வு குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் பேசுகையில், ” கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போதும் கட்டணம் உயர்த்துவதற்கான அவசியமும் இல்லை. இருப்பினும், மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரைகளை மின்சார வாரியம் அளித்துள்ளது. இதில், தாழ்நிலை, உயர்நிலை மின்னழுத்தத்திற்கான ஒவ்வொரு யுனிட் மி்ன்சாரத்துக்கான உயர்வு ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் உள்ளது. ஆனால், மறைமுகமாக நிலைக் கட்டணம் (பிக்சட் சார்ஜ்), வீலிங் சார்ஜ், டிரான்ஸ்மிஷன் சார்ஜ் போன்றவைகளை பலமடங்கு உயர்த்தியிருப்பது கவலை அளிக்கிறது,” என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில்,” தற்போது தான் மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு இன்னல்கைள சந்தித்தது. அடுத்த பிரச்னையாக அபரிதமான மின் கட்டண உயர்வு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. அதிகபட்ச மின் பயன்பாடு (பீக் அவர்) கட்டணத்தை 15 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது,” என்றார்.
டேக்ட் சங்க தலைவர் ஜேம்ஸ் பேசுகையில், ” ஏற்கனவே நெருக்கடியான நிலையில் உள்ள சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், மின் கட்டண உயர்வால் மூடப்படும் அபாயம் ஏற்படும். மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட்டு, தொழில்துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.
லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாநில தலைவர் விஜயராகவன் பேசுகையில்,” தமிழ்நாடு முழுவதுமே தொழில் நிறுவனங்கள் கடுமையான கட்டண உயர்வால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி அனைத்துமே பாதிக்கப்படும். அனைத்து தொழில்களிலும் இது பிரதிபலிக்கும்.” என்றார்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் பேசுகையில், ” மோட்டார் பம்ப் மீதான ஜிஎஸ்டி சமீபத்தில் தான் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பம்ப் தொழில் கோவையில் நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. குஜராத் மோட்டார் பம்ப்புகளின் விலை குறைவாக இருப்பதால், அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. மின் கட்டண உயர்வால் மோட்டார் பம்ப் செட் விலை உயர்த்தினால், விற்பனை பாதிக்கும். மறைமுகமான மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்,” என்றார்.
ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் (ஓஸ்மா) தலைவர் அருள் மொழி பேசுகையில், ” பருத்தி விலை ஏற்றத்தாழ்வால் மில்களை சீராக இயக்க முடியவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலைக் கட்டண உயர்வு, காற்றாலை, சோலார் மின் உற்பத்தி செய்தாலும் அதற்கான மாற்று கட்டணம் போன்றவை மில்களை பாதிக்கும்,” என்றார்.
இந்த கூட்டத்தில், டான்சியா துணைத்தலைவர் சுருளிவேல், டேப்மா தலைவர் கல்யாணசுந்தரம், கொசிமா துணைத்தலைவர் நடராஜன், எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் சங்கத்தின் செயலர் சுரேந்திரன், கிச்சன் எக்யுப்மென்ட் தயாரிப்பாளர் சங்க தலைவர் தங்கவேல், லகு உத்யோக் பாரதி துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.