மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து சுற்றுப்புறத் தூய்மை பணிகள்: மாவட்ட ஆட்சியர்

WhatsApp-Image-2022-04-23-at-2.15.21-PM-e1650725842750.jpeg

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (23.04.022) சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்திடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ‘மாஸ் கிளீனிங்’ பணிகள் மற்றும் மரக்கன்று நடவு செய்யும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர் பங்கேற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: மதுரை மாவட்டத்தில், சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு மெகா மாஸ் கிளீங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை இது போன்ற மெகா சுற்றுப்புறத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் தங்களது அலுவலகங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் குப்பை மற்றும் கழிவுகளை, குப்பைத் தொட்டிகளில் போட்டு அலுவலக வளாகத்தை தூய்மையாக பராமரித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மதுரை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். முககவசம் அணிதல் தொடர்பாக திங்கள்கிழமை முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும். மதுரை மாநகராட்சி, உள்ளாட்சித் துறை காவல்துறை வருவாய்த்துறை என 3 துறை சார்ந்த அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும். முககவசம் அணிந்து வருவதை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சக்திவேல் உடனிருந்தார்.

scroll to top