THE KOVAI HERALD:
கோவையை புறக்கணிப்பதாக பாஜக கட்சியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு அப்படி எதுவும் இல்லை என்று பதில் தந்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்க, கோவையில் அந்த திட்டம் ஏட்டளவிலேயே உள்ளது என்பதுதான் நயினாரின் கேள்வி.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்தார் முதல்வர். 23 ம்தேதி இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், சு.முத்துசாமி, உயரதிகாரிகள் வரவேற்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 24-ம் தேதி காலை ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து மாலை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், திருப்பூருக்குப் புறப்பட்டுச் சென்ற முதல்வர் அங்கு தங்கினார். அதற்கு அடுத்தநாள் காலை திருப்பூர் நிகழ்ச்சிகளிலம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனையிலும் கலந்து கொண்டார்.
பிறகு கோபி செட்டிபாளையத்தில் நடந்த கட்சி விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஈரோடு புறப்பட்டு சென்றார். அடுத்தநாள் காலை பெருந்துறையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். மீண்டும் கோவைக்கு வந்த முதல்வர் 26-ந்தேதி பீளமேடு பிஎஸ்ஜி கல்லூரியின் பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அடுத்து இரவு விமானம் மூலம் சென்னை சென்றார்.
ஸ்டாலின் கலந்து கொண்ட அத்தனை நிகழ்ச்சிகளிலும் பல கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதையெல்லாம் தாண்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் கோவை கவுண்டம்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, சூலூர் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரனும் இணைந்தனர். அவர்களுடன் அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அபிநயா, பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மைதிலி மற்றும் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்தவர்களுக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கோவை அரசியல் வட்டாரத்தில் இதுதான் பேசுபொருளாகியிருக்கிறது. தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏவான சூலூர் தினகரன் தேமுதிக ஆரம்பித்த காலத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தாலும் அவ்வளவாக அறியப்படாதவராகவே இருந்தார். 2011-இல் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி கண்டவுடன் யார்யாருக்கோ சீட் எதிர்பார்த்திருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தேமுதிகவிற்கென ஒதுக்கப்பட்ட ஒரே ஒரு சீட்டை இவருக்கே அளித்தார் விஜயகாந்த். மற்ற நிர்வாகிகள் கூட கட்சியை விட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் தினகரன் விஜயகாந்த் மீதும் அவர் மனைவி பிரேமலதா மீதும் அளவற்ற பற்றும் விசுவாசமும் கொண்டவர். அவரை யாரும் தேமுதிகவைத் தாண்டி அழைக்க முடியாது என்று பேசப்பட்டவர். சமீபகாலமாக கட்சியிலேய காணாமல் போயிருந்தார். அவர் இப்படி திடீர் என்று திமுகவிற்கு வந்து இணையும்போதே பலருக்கும் தெரியவந்தது.
கவுண்டம்பாளையம் ஆறுக்குட்டியைப் பொறுத்தவரை அதிமுகவில் ரத்தமும் சதையுமாய் ஊறிப் போயிருந்தவர். அங்கே நிலவும் அணி அரசியலில் ஓபிஎஸ் சமாதியில் தியானம் அமர்ந்தபோது ஈபிஎஸ் அணியிலிருந்து விலகி கடுமையாகவே பேட்டியளித்தார். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அளவில் கட்சி ஒன்றுபட்டபோது மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவுர் காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் யுத்தம் வெடித்தபோது எந்தக் கருத்தும் சொல்லாமல் வாளாவிருந்தார். திடீரென்று திமுகவில் வந்து இணைந்திருக்கிறார். இவர் மீது அவர் வாழும் கிராமத்தில் மக்களுக்கு ஏகமரியாதை உண்டு. தவிர கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் அதிமுக ஆட்சி காலத்தில் நூற்றுக்கணக்கான மதுமார் கடைகளை தன்வசம் வைத்து பினாமிகளை வைத்து நடத்தி வந்தார் என்ற பேச்சும் உண்டு. திமுக ஆட்சி வந்தபிறகு அதற்கு எந்த வழியும் இல்லை. அதேசமயம் கோவை மண்டலத்தின் அதிமுக தளபதியான எஸ்.வேலுமணியிடம் விலகியிருந்தார் என்பதை விட பகைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் திரும்ப அவர் மது பார் தொழில் சுடர்விடுமா, இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக அதிமுகவைப் பொறுத்தவரை இவர்கள் வந்து சேர்ந்ததை பெரிதாகக் கருதவேயில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ‘‘இருவருமே அந்தந்த கட்சியினால் ஓரங்கட்டி வைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தொண்டர் பலமும் பெரிதாக எதுவமில்லை. எல்லாம் பாடுபட்டு சக்கையாய் உறிஞ்சப்பட்ட பின்னரே இங்கே வந்திருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கொங்கு மண்டலத்தில் திமுக கட்சி ரொம்பவும் வீக்காக இருக்கிறது. அதை சரிப்படுத்த வேண்டுமென்றால் பழைய திமுககாரர்களை விட்டு எதுவும் செய்ய முடியாது. அதிமுகவில் முக்கியப் புள்ளிகளை கழற்றிக் கொண்டு வர வேண்டும் என்பதே சிறப்பு அசைன்மெண்டாக சிலருக்குப் போடப்பட்டது. குறைந்தபட்சம் சில எம்எல்ஏக்களையாவது பிரித்துக் கொண்டு போய் ஓபிஎஸ் அணின்னு பேர் மாற்றி கோர்ட்டில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடலாம் என்று திட்டம் தீட்டியிருப்பதாக செய்திகள் கசிந்தன. அம்மன் அர்ச்சுனன், செ.ம.வேலுச்சாமி, துரைமுருகன் இப்படி பல பெயர்கள் அதில் அடிபட்டன. மய்யம் கட்சியில் டாக்டர் மகேந்திரன் இப்பகுதியிலிருந்து திமுகவிற்கு வந்தது மட்டும் நடந்தது. மற்றவர்களை யாரும் இழுக்க முடியவில்லை. ஆனால் மாற்றுக்கட்சியிலிருந்து முக்கியமான புள்ளிகளை திமுகவிற்குள் கொண்டு வந்தாலே மரியாதை என்று தலைமை சொன்னதால் அதற்கும் அலைபாடுபட்டு இவர்கள் இருவரையும் பேசி சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளனர். அவர்களால் திமுகவிற்கு கடுகளவும் பிரயோஜனமில்லை. அதிமுகவிற்கும் அவர்களால் யாதொரு பலனும் இல்லை!’ என்று தெரிவித்தனர்.
S.KAMALA KANNAN Ph. 9244319559