மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே கட்சிப் பதவியா?:கோவை மாவட்டத் திமுகவில் மீண்டும் சலசலப்பு

Pi7_Image_df.jpg

THE KOVAI HERALD

கோவை மாவட்டத்தில் ஐந்து கட்சி மாவட்டங்களாக இருந்த திமுக, தற்போது மூன்று மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற உள்ளது. அதற்கேற்ப ஆட்களைத் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட பொறுப்புக்கு மனு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் கட்சி மாறி வந்த கட்சிக்காரர்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால் காலங்காலமாய் கட்சிக்கு பணியாற்றி வந்த உடன்பிறப்புகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக கோவையில் இதற்கான எதிர்ப்பு கடுமையாக உள்ளது. அதன் மூலம் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பத்துக்குப் பத்து எம்.எல்.ஏ பதவிகளின் வெற்றி வாய்ப்பை இழந்து நிற்கும் திமுக, மீண்டும் ஒரு சுணக்கத்தை அடையும் என்று பேசப்படுகிறது.

2016-ல் கோவை மாவட்டத்தில் பத்துக்கு ஒரு எம்.எல்.ஏ மட்டும் வென்று பெரும் தோல்வியை சந்தித்தது. இதன் விளைவு கட்சி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் அதிகமாக இருக்கிறது என்ற கவலை திமுக தலைமையை வாட்டியது.

எனவே ஏற்கனவே மாநகரச்செயலாளர், மாவட்டச் செயலாளர் என்றிருந்த முறையை மாற்றி கோவையை நான்காகப் பிரித்து நான்கு மாவட்டச் செயலாளர்களை உருவாக்கியது. அதன் மூலம் நான்கு பேர் மாவட்டச் செயலாளர்கள், மேலும் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் ஆனாலும் கோஷ்டிப்பூசல் ஒழியவில்லை. அடுத்தடுத்து பாராளுமன்றம், சட்டமன்றம் என வந்த தேர்தல்களில் கடும் தோல்வியை சந்தித்தது. அதற்கேற்ப மாவட்டச் செயலாளர்கள், அவைத் தலைவர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தனர். கட்சித் தேர்தல் முறை என்பதுதான் திமுகவில் நடைமுறை. அது இந்தக் காலகட்டத்தில் இல்லாமலே போனது.

இதன் உச்சகட்டமாக 2020 ஆம் ஆண்டு கோவை மிகவும் பலஹீனமாக இருப்பதை உத்தேசித்து கோவை மாவட்ட திமுக 5 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வரதராஜன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்றாக மட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய அமைப்பு முறைகள் அடியோடு நீக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, கோவை தெற்கிற்கு தளபதி முருகேசன், கோவை வடக்கிற்கு தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மாவட்ட அவைத்தலைவர், துணைச்செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கும் மனு தருமாறு கட்சித் தலைமை குறிப்பிட்ட சிலரைப் பணித்துள்ளது.

ஆக, இப்போது விருப்பமனு கொடுப்பவர்கள் எல்லாம் கட்சித்தலைமையால் முடிவு செய்யப்பட்டுள்ளவர்கள், அவர்களே குறிப்பிட்ட பொறுப்புகளுக்கு அறிவிக்கப்படப் போகிறார்கள் என்பதால் மற்றவர்களிடம் புகைச்சல் கிளம்பியுள்ளது. இதுகுறித்து திமுக இளைஞரணி பொறுப்பாளர் ஒருவர் பேசும்போது,

‘‘கோவையில் கரூரை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு என்பதால்தான் இந்த நிலைமை. அது மாறும் என்று போன உள்ளாட்சித் தேர்தலின் போது எதிர்பார்த்தோம். தேர்ந்தெடுக்கப்படும் மேயர் ஸ்டஃப் உள்ளவராக இருப்பார். அவர் கை ஓங்கும் என்றெல்லாம் கனவு கண்டோம். அது நடக்கவில்லை. கோவையில் மேயர் என்று ஒருவர் இருக்கிறாரா? அவர் கட்சிக்காரர்களைக் கண்டுகொள்கிறாரா? என்பது எங்களுக்கே தெரியவில்லை. உள்ளாட்சி அமைப்பில் மேயர் உள்பட மற்ற முக்கிய பதவிகளில் உள்ள பலருக்கும் கரூர் ஆட்களே உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஆவின் பூத் எடுத்தவர்கள், மதுபார் எடுத்தவர்கள் எல்லாம் அதிமுக ஆட்களாகவே இருந்தனர். இப்போது அதே அதிமுகவினர் திமுக கொடி போட்டு, ஸ்டாலின் படத்தைப் வைத்துள்ளனர்.

சரி, இனி மாவட்டச் செயலாளர்களாவது நட்சத்திர அந்தஸ்தில் யாராவது வருவார்கள். கட்சிக் காப்பாற்றப்படும் என்று நினைத்தோம். ஆனால் பெரும்பாலும் இந்தப்தவிகள் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமையத்திலிருந்து வந்த சூலூர் கிருஷ்ணமூர்த்தி  தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஆகியுள்ளார். வடக்கு மாவட்டத்திற்கு துணைச்செயலாளராக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் மகன் வந்துள்ளார். அதிமுகவிலிருந்து வந்த முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவராகிறார். வடவள்ளி முருகன் என்பவரும் மனு கொடுத்துள்ளார். அவரும் தேமுதிகவிலிருந்து வந்தவர்.

கோவை மேயர் கணவர் ஆனந்தன் தலைமை செயற்குழு உறுப்பினராகிறார். இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் ஆட்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர் மகன் பாரிக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அது இல்லை என்றாகி விட்டது. அதேபோல் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஐந்து பேரில் கார்த்தி ஒருவரைத் தவிர மற்றவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் நீதிமையத்திலிருந்து வந்த டாக்டர் மகேந்திரன்தான் கோவைக்கு அடுத்தது எம்.பி. வேட்பாளராம். இப்போதே அறிவாலயத்தில் உத்திரவாதம் தந்து விட்டார்கள். கோவை மாவட்டத்தில் அனுபவப்பூர்வமான விஐபிக்களைப் பொறுப்பில் போட்டு கட்சியை வளர்ப்பார்கள் என்று பார்த்தால் மேலும், மேலும் சறுக்கிக் கொண்டே போகிறது. .உண்மையான கட்சிக்காரர்கள், நீண்டகாலம் கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் எல்லாம் வேதனையில் இருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பை சீக்கிரமே காண்பீர்கள்!’’ என்றார் நம்முடன் பேசியவர்.

இது பற்றி பதவி பெற்ற சிலருடன் பேசியபோது, ‘‘10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2021-ல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம் கட்சியினர் கட்டுக்கோப்பாக இருந்து பணியாற்றியதுதான் என்பதுதான் தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கை.  வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘நாற்பதும் நமதே’ என்பதுதான் அவருக்குள் ஒலிக்கும் அடிநாதம். அதே போல், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதிலும் முனைப்புடன் உள்ளார். தற்போது கட்சியில் நடப்பது 15-வது பொதுத் தேர்தல்  மாவட்ட நிர்வாகிகள் தவிர மற்ற அமைப்புகளுக்கான தேர்தல் முடிக்கப்பட்டுள்ளது. இதில், சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும், பெரிய அளவில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை. ஏற்படாது.

வழக்கமாக திமுகவில் மாவட்டச் செயலாளரை கட்சி தலைமையே முடிவு செய்யும். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், மாவட்டச் செயலாளர்கள் தேர்வில் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார்” என்றனர்.

S.KAMALA KANNAN Ph. 9244319559  

scroll to top