மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலில் காட்டும் அக்கறையை தூய்மை பணியில் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Pi7_Image_wea.jpg

L.Rajagopal

கோவை  விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியின் கீழ், 100 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், 24 மணி நேரம் குடிநீர் வினியோக திட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தூய்மைப் பணி மேற்கொள்ள உதவும் உபகரணங்கள், தூய்மை பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் நியமிக்காதது கொசு மருந்து மெஷின் போதிய எண்ணிக்கையில் வழங்கப்படாதது என்பது உள்ளிட்ட பல்வேறு அவல நிலை காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் வரி வசூலில் காட்டும் அதே அக்கறையை தூய்மைப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை!  

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: தினமும் வார்டு பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ள செல்லும்போது பல்வேறு பிரச்சினைகளை தூய்மை பணியாளர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. முதலில் போதிய எண்ணிக்கையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே எண்ணிக்கை தான் இன்று வரை தொடர்கிறது. ஆனால் மறுபுறம் வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தூய்மை பணியை மேற்கொள்ள குறிப்பாக சாக்கடை மற்றும் குப்பைகள் அல்ல போதிய உபகரணங்கள் இல்லை. இதன் காரணமாக இருக்கும் உபகரணங்களை வைத்து தூய்மை பணியாளர்கள் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பல வார்டு பகுதிகளில் குப்பை அப்புறப்படுத்த பயன்படும் வண்டி மிகவும் சிதலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றன. அவற்றை வைத்து குப்பைகளை எப்படி தூய்மை பணியாளர்கள் சீரான முறையில் அப்புறப்படுத்த முடியும். இத்தனை பிரச்சனைகள் உள்ள நிலையில் மக்கள் மத்தியில் நேரடியாக களப்பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டிய அவல நிலை உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்வதில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

* கொசு மருந்து மெஷின்களுக்கு கடும் தட்டுப்பாடு!

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் மெஷின்களுக்கு பற்றாக்குறை மிக அதிகம் உள்ளது. உதாரணமாக 23, 6 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்க 7வது வார்டு பகுதியில் உள்ள கொசு மருந்து மெஷினை வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. இதேபோல் கோவை மாநகராட்சி 9வது வார்டு, 22வது வார்டு பகுதிகளில் கொசு மருந்து மெஷின் இல்லை. 5வது வார்டு பகுதியில் உள்ள மெஷினை அவ்வப்போது வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்கள் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் கேட்கும் போதெல்லாம் கொசு மருந்து மெஷின் கிடைப்பதும் இல்லை. அப்படி கிடைத்தாலும் அடிக்கடி அந்த மெஷின் ரிப்பேர் ஆகிவிடுகிறது. ஒரு முறை ரிப்பேர் செய்ய 3,000 முதல் 4,000 ரூபாய் வரை செலவாகிறது. புதிதாக ஒரு கொசு மருந்து அடிக்கும் மெஷின் வாங்க வேண்டுமென்றால் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.  மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்காமல் இருக்க மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் போதிய எண்ணிக்கையில் கொசு மருந்து அடிக்கும் மெஷின்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.  

வரி வசூலில் காட்டும் அக்கறை, மக்கள் நலனிலும் காட்ட வேண்டும் சேரன் மாநகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது: தூய்மை பணி என்பது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வார்டிலும் போதிய எண்ணிக்கையில் குப்பை அள்ளும் வண்டிகள் இல்லை. இது தவிர குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த தேவைப்படும் உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேல் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை அனைத்து வார்டு பகுதியிலும் உள்ளன. இது ஒரு புறம் இருக்க வரி வசூலிப்பதில் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. நான்கு நாட்களில் 4.5 கோடி ரூபாய் வரி வசூல் என்பது உள்ளிட்ட பத்திரிகை செய்தி வெளியிடுவதில் காட்டும் அக்கறை கோவை மாநகராட்சி அனைத்து வார்டிலும் தூய்மை பணியை சிறப்பாக மேற்கொள்வதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதிலும் காட்ட வேண்டும் வேண்டும்.” என்றார்.

scroll to top