ஆண்டு தோறும் வைகையாற்றில், அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் வைகை ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து செல்லக்கூடிய பைப்புகள் மற்றும் மின் வயர்கள் சேதமடைந்து இங்குள்ள கிணற்றில் இருந்து குடிநீர் எடுக்க கூடிய முள்ளிப்பள்ளம் உள்பட இப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு தண்ணீர் தடை ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமானது குடிநீர் பிரச்சனை இந்த குடிநீர் பிரச்சினை ஒவ்வொரு மழை காலங்களில் வைகையாற்றில் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடிநீர் கிணற்றில் இருந்து அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி வரைக்கும் செல்லக்கூடிய குடிநீர் பைப்புகள் சேதமடைந்து இதற்காக செல்லக்கூடிய மின்சார வயர்களும் சேதம் அடைவது வழக்கமாக உள்ளது. இதனால், இந்தக் குடிநீரை நம்பி உள்ள கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது, கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில்
வைகை ஆற்றிலிருந்து கிராமத்திற்கு வரும் குடிநீர் பைப்புகள் மற்றும் மின் வயர்கள் சேதமடைந்து விட்டதால், இரண்டு நாட்களாக முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இது சம்பந்தமாக, பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு உடனடியாக குடிநீர் இணைப்புகள் மற்றும் மின் வயர்களை சரி செய்து குடிநீர் சப்ளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள்ராஜா,செயலாளர் மனோ பாரதி, வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் வைகை ஆற்றுக்கு பணியாளர்களுடன் சென்று வைகை ஆற்றுக்குள் இடுப்புக்கு மேலே உள்ள தண்ணீரில் நீந்திச் சென்று சேதமடைந்த பைப்புகள் மற்றும் மின் வயர்களை சரிசெய்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனைகளை சரி செய்த ஊராட்சி நிர்வாகத்தினை பொது மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.