மழையால், மதுரை மாவட்டத்தில் குறைந்தளவு சேதாரம்: அமைச்சர் மூர்த்தி

WhatsApp-Image-2021-11-12-at-5.15.53-PM.jpeg

மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குறைந்த அளவே சேதாரம் ஏற்பட்டுள்ளது, மேலும் மழையினால் விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடாக செயல்பட்டு வருகிறது – என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பெய்த தொடர்கனமழை காரணமாக நீர்நிலைகள் பெருகி அருகிலுள்ள விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, வடகிழக்கு பருவமழை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், ஆகியோர் மேலூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட, புலிப்பட்டி, சூரக்குண்டு மற்றும் பூதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி….

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பணிகளை கண்காணித்து வருகின்றார். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தளவு குறைந்த அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதால், விவசாய பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதால். விவசாயிகளிடம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 58 கால்வாய் திட்டம் முதல்வரின் உத்தரவுபடி நாளை காலை திறக்கப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து இன்று மாலைக்குள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்

இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன். துணை இயக்குனர் சுப்புராஜ் மேலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் செல்வி, மேலூர் வட்டாட்சியர் இளமுருகன், மேலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலர்கள் ராமமூர்த்தி, மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்..

scroll to top