சபா கமலக்கண்ணன்:
இந்த நவீன யுகம் கம்யூட்டர் மயமானதன் விளைவு, தகவல் தொழில்நுட்பத்தில் உலகம் எங்கேயோ சென்று விட்டது. செல்ஃபோன், டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு செல்ஃபோன், விண்டோஸ் ஃபோன் என படுவேகமெடுத்த அந்த உலகம் ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ் அப் இப்படி அது ஒவ்வொன்றாய் பரிமாணம் எடுத்து சமூக வலைத்தளங்கள் மூலம் உள்ளங்கைக்குள் உலகத்தையே கொண்டு வந்து விட்டது.
அது நாட்டுக்கு நாடு சுதந்திரமாக கட்டவிழ்த்து விட்டதன் பலன் ஆக்க சக்திக்கு அது எவ்வளவு தூரம் பயன்படுகிறதோ இல்லையோ, கொலை, கொள்ளை, விபச்சாரம், சூதாட்டம், கடத்தல், போதைப் பொருட்கள் விநியோகம், தீவிரவாத, பயங்கரவாத செயல்களுக்கும், இவை மூலகாரணியாகவே மாறி விட்டன. முக்கியமாக ஒரு காலத்தில் இளைஞர்கள், இளநிகள் நினைத்தே காணக்கிடைக்காத பாலியல் விவகாரங்கள் எல்லாம் சொடுக்கிற நேரத்தில் உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் கிடைத்து விடுகிறது. அதை பாலியல் பாகுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல், குழந்தைகள் கூட பார்த்து கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதிலும் இந்தியா போன்ற ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் பின்னணி கொண்ட நாட்டில் குடும்ப அமைப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளது. அப்படி வந்த லேட்டஸ்ட் வருகைதான், Couple sharing Group எனப்படும் ஜோடிகளை மாற்றும் குழு. இந்தக்குழுக்கள் வாட்ஸ் அப், முகநூல் என வரும் சமூக வலைத்தள வடிவங்களில் இயங்குகின்றன.
இதில் உறுப்பினர் ஆகுபவர்கள், அல்லது ஆக்கப்படுபவர்கள் தங்கள் மனைவிகளை, கணவன்களை தங்களுக்குள் மாற்றிக் கொண்டு பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ளலாம்!’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் அதிர்ச்சி தகவல். இதன் பின்னணியில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஆயிரம் பேரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளனர். கேரளத்தை மையமாக கொண்டு இயங்கிய இந்த நெட் ஒர்க் தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கும் பரவியிருக்கிறது என்பதுதான் இதில் கிடைக்கும் இன்னொரு அதிர்ச்சி.
கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்துள்ள ஊர் கருங்கச்சல். இங்குள்ள காவல் நிலையத்தில் சமீபத்தில் திருமணமான பெண்மணி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் தன் கணவர் தன்னை வேறொரு ஆணுடன் பாலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், அவரும் தன்னிடம் இயற்கைக்கு மாறாக வக்கிரத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், அதனால் தான் அன்றாடம் துன்பப்பட்டு வருவதாகவும், தன் கணவனிடமிருநு்து மட்டுமல்ல, இவர் பின்னே வந்து மிரட்டி பாலியல் இச்சைக்கு பணிய வைக்கும் ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தன்னைக் காப்பாற்றுமாறும் கூறியிருந்தார். இது குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.
அந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியிடம் மட்டுமல்ல, வேறு ஆண்கள் 7 பேருடன் நெருக்கம் பூண்டு, இவர்கள் மனைவிகளை மாறி மாறி பகிர்ந்து பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டதும், இந்த ஏழு ஜோடிகளும், அவர்களுக்கு தொடர்புள்ள வேறு, வேறு ஆண் பெண்களுடனும் இதேபோல் பாலியல் தொடர்பு வைத்திருந்ததும், இதை இணைக்க ஒரு வலைத்தள குழுவே இயங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது. இப்படி இணைபவர்கள் பலரும் அவரவர் வசதிக்கேற்ப பணப்பரிவர்த்தனை இவர்களுக்குள்ளேயே ஏற்படுத்தியதோடு, இந்த வலைப்பின்னலில் பணக்கார யுவதிகள், கோடீஸ்வர ஆண்களை வீழ்த்தி அதை ஒரு மாஃபியா வியாபாரமாகவே நடத்தி வந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தக்குழுவை உருவாக்கியது யார்? எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று விசாரித்தபோது, ஒருவர் மற்றவரைக் கைகாட்ட, அவர் இன்னொருவரைக் கைகாட்ட, அந்த நபரும் பிறிதொரு குழுவைக் கைகாட்ட, அடிமுடி தெரியாத அனகோண்டா மலைப்பாம்பு போல இதன் நெட் ஒர்க் நீண்டு செல்ல போலீஸாரே மலைத்துப் போயிருக்கின்றனர். இப்போதைக்கு நேரடியாக புகார் கொடுத்த பெண்ணின் நிலையை உத்தேசித்து அவள் கணவர், அவரது நண்பர்கள் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் மட்டும் இந்த மனைவிகளை- கணவன்களை மாற்றிக் கொள்ளும் கலாச்சாரத்தில் 1000 பேருக்கு மேற்பட்ட தம்பதிகளின் பட்டியல் கிடைத்துள்ளது. இவர்கள் கேரளத்தில் மட்டுமல்லாது, கர்நாடகாவின் பெங்களூரு, மைசூரு, தமிழ்நாடு சென்னை, கோயமுத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்கள் வரை இந்த குற்றச்செயல் நீண்டிருப்பதாக சொல்லுகிறார்கள்.
இதுகுறித்து கோட்டயம் போலீசாரிடம் பேசினோம்.
‘‘மனைவிகளை மாற்றிக்கொண்டு இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டு வந்த இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவிர 25க்கும் மேற்பட்டோர் விசாரித்து போலீஸ் கண்காணிப்பில் விடப்பட்டுள்ளனர். அதில் வசதி படைத்த பெண்கள் நிறைய பேர் உள்ளனர். கணவன் வெளிநாடு சென்ற நிலையில் தன் மாஜி காதலருடன் புருஷன் பெண்டாட்டியாக இணைந்து இக்குழுவில் உள்ளவர்களும் இதில் உள்ளனர். ஒரு கணவன் பல பெண்களுடனும், ஒரு மனைவி பல ஆண்களுடனும் இருந்த கதைகளும் வெளி வந்துள்ளன. இது அந்த மனைவியின், கணவனின் விருப்பத்திற்கேற்பவும், அவர்கள் அள்ளி வீசிய பணத்திற்கு ஏற்பவும் முறைகேடான பாலியல் உறவுகள் அரங்கேறியுள்ளது. இது சம்பந்தமாக இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவர்!’’ என்று தெரிவித்தனர்.
இது குறித்து கோட்டயம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘இவர்கள் யாரும் எடுத்த எடுப்பில் இந்த வக்கிர பாலியல் இச்சைக்கு தீனி போடும் விவாரத்தில் இறங்குவதில்லை. மெல்ல மெல்ல ஷேர்சாட், டெலிகிராம், மெசேஞ்சர் போன்ற செயலிகள் மூலம் நம் சாதாரண வலைத்தள நட்புகள் போலத்தான் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். அதன் மூலம் அவரவர் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தனியாக இந்த நட்பில் இணைபவர்கள் பின்னர் தன் ஜோடியையும் (கணவனாக இருந்தால் மனைவியை, மனைவியாக இருந்தால் கணவனை) பேச வைக்கிறார்கள். அதன் மூலம் தங்களுக்குள்ளான பாலியல் ரீதியான பிரச்சனை மற்றும் இடையூறுகள், திருப்தியின்மை குறித்து மெல்ல மெல்ல பேச்சுக் கொடுக்கிறார்கள். அதில் திருப்தியின்மை உணரப்பட்ட பின்னர் பாருங்கள். நாங்கள் ‘couple sharing’ செய்து எங்களுக்கான குறையை சரி செய்து கொள்கிறோம்.
இந்த ஃபிரி செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் ஆரோக்கியமாக இருக்கிறது என வலை வீசுகிறார்கள். அதிலும் பணக்கார தம்பதிகள் என்றால் சொல்லவே வேண்டாம். நிறைய பேர் இந்த குழுவில் இருந்து வருகிறார்கள். ஷேர் சாட் செய்கிறார்கள். பின்னர் இது சம்பந்தமான வாட்சப், டெலிகிராம் குழுவில் இணைக்கிறார்கள். இந்த குழுவில் முரண்பாடு வந்தவர்கள் தனித்தனி குழுவையும் உருவாக்குகிறார்கள். முதலில் சாட்டிங்கில் காதல் மொழி பேசி, தங்களுக்குள் பாலியல் இச்சைகளை இயற்கைக்கு மாறான முறையில் செய்தவர்கள், அதிலும் திருப்தியில்லை என்ற நிலையில் நேரில் சந்தித்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஒரு நாளைக்கு அவரவர் மனைவிகளை பரிமாற்றி கொள்கின்றனர். சில நேரங்களில் ஒரு பெண்ணிடம் மூன்று பேர் பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். அந்த சூழலில், மனைவியை அனுப்பி வைப்பவர் பேரம் பேசி பணமும் வசூலித்துள்ளார். தற்போது கைதாகியிருப்பவர்கள் கேரளாவில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ள பலர் இந்த ‘couple sharing’ குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.
மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் ஒரு கும்பல் சிக்கிய நிலையில், அவர்களிடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையிலேயே, தமிழகம், கர்நாடகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் இந்த குழுவில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
இப்போது புகார் செய்துள்ள பெண்ணின் வயது 27. 2013-ம் ஆண்டு -அதாவது இவரின் 18 வது வயதில் அவருக்கும் அவரின் கணவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் வேலைக்காக அவருடைய கணவர் அரபு நாடு ஒன்றுக்கு சென்றிருந்துள்ளார். 2018-ம் ஆண்டு அவரின் கணவர் கேரளா திரும்பியிருக்கிறார். இங்கு வந்ததில் இருந்தே அவர் தனது மனைவியை மிரட்டி இயற்கைக்கு மாறான பாலியல் உறவு துன்புறுத்தல் செய்துள்ளார். அத்தோடு இவருக்கு விருப்பமில்லாமலே வேறு நபர்களுடன் உறவு கொள்ள வைத்ததாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இந்த பாலியல் சித்ரவதை தாங்கமுடியாமலே போலீஸிற்கு வந்துள்ளார்.
கொரோனா காலத்திலும் செயல்பட்டு வந்த இக்கும்பல் சமூக வலைத்தளஙகள் வாயிலாகவும், வீடியோ கால்கள் மூலமாகவும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் ஓட்டல் அறைகளை ஒருபோதும் தேர்ந்தெடுக்காமல் தங்களின் வீடுகளுக்கே மனைவியுடன் வரச் சொல்லி தங்களின் இணைகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் கேரளத்தின் இதர மாநில எல்லைகளிலும் இது பரவியிருப்பதாகவும், குறிப்பாக கேரள எல்லையான தமிழகத்தின் கோவை புறநகர் பகுதியில் இவர்கள் நெட்ஒர்க் விரிந்திருப்பதாகவும், அது சம்பந்தமாய் தமிழக போலீஸிற்கும் தெரிவித்து உஷார் படுத்தியுள்ளதாகவும் சொல்கின்றனர் கேரள போலீஸார்.
இதுகுறித்து தமிழக உளவுப் போலீஸாரிடம் விசாரித்தோம்.
‘‘தமிழகத்தில் குறிப்பாக பாலக்காடு எல்லைப் பகுதிகளான பொள்ளாச்சி, கோவை, ஆனைகட்டி துடியலூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெரும்பாலும் கேரளா, ஆந்திரப் பெண்களை வைத்தே விபச்சாரம் நடந்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டல்களில், ரிசார்ட்டுகளில் நடந்து வந்த விபச்சார முறை மாறி வந்திருக்கிறது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு படிக்க வரும் மாணவிகள் தன் ஆடம்பர வாழ்க்கைக்காக, பாக்கெட் மணிக்காக வலிந்து ஆண்களை மடக்கி விபச்சாரத்தில் ஈடுபட்டது கூட கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் புரோக்கர்களும் இருந்தனர். ஓட்டல்களில், தங்கும் விடுதிகளில் இதை செய்தால் அகப்பட்டுக் கொள்கிறோம், தவிர போலீஸிற்கு மாமூல் அழ வேண்டியுள்ளது என்று புரிந்து கொண்ட இதன் புரோக்கர்கள் ஆங்காங்கே ப்யூட்டி பார்லர், பெண்கள் சலூன் கடைகள், ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயர்களில் தொழிலை மாற்றிக் கொண்டனர். இப்படி பல கும்பல்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு மடக்கிய பின்பு அதையும் காரிலேயே விபச்சார முறையை மாற்றிக் கொண்டனர். அந்த நெட் ஒர்க்கும் அடிக்கடி பிடிபட, இந்தக் கும்பல்கள் இணையதளத்தின் குரூப்களில் இணைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். இவர்களின் ஒரே ஆயுதம் செல்ஃபோன்கள்தான்.
இவர்கள் ஒருவருக்கொருவர் செல்ஃபோன் வழியே மெசேஜ் அனுப்புவார்கள். ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், துடியலூர், வடவள்ளி, கோவைபுதூர் பகுதிகளில் காட்டேஜ்கள் புக் செய்வார்கள். அங்கே குடும்பம் போல் ஏழெட்டுப் பெண்கள், நான்கைந்து ஆண்கள் வந்து தங்குவார்கள். கூடவே ஒன்றிரண்டு கைக் குழந்தைகளையும் கூட்டி வந்து விடுவார்கள். அது அவர்களில் ஓரிருவரது குழந்தைகளாகவும் இருக்கலாம். அல்லது வாடகைக்கு வாங்கி வந்ததாகவும் இருக்கலாம். இதன் மூலம் ஏதோ குடும்ப ஸ்திரிகள் குடும்பம் நடத்துவது போலவோ, குடும்பத்துடன் சுற்றுலா வந்தது போலவோ ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இரவு நேரங்களில் குடி, கூத்து, ஆட்டம் பாட்டமும் நடந்தேறுகிறது. இப்படி சில கும்பல்கள் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் காட்டேஜ்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாட்டியது. அதன் பிறகு இந்த உத்தியும் மாற்றப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் இவர்கள் இப்படி காட்டேஜ்களில் கூட தங்குவதில்லை. புறநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு பிடித்துக் கொள்கிறார்கள். ஆயிரம், ஐயாயிரம் ரூபாய்க்கு கூட வாடகை பெறாத புதுவீடுகள் இவர்களுக்காகவே காத்திருக்கிறது. அதற்கு ஐயாயிரம், பத்தாயிரம், பதினையாயிரம் கூட வாடகை கொடுத்து தங்குகிறார்கள். அதிலேயே குடும்பம் போல தங்கி மாதக்கணக்கில் குடித்தனம் நடத்துகிறார்கள். இரவு நேரங்களில் இந்தக்குடும்பம் இன்னொரு வீட்டிற்குப் போய் விடுகிறது. இன்னொரு குடும்பம் இந்த வீட்டிற்கு வருகிறது. ஒரே நேரத்தில் நான்கைந்து குடும்பங்கள் ஏதோ விருந்துக்கு வந்தது போல் வந்து குழுமி களியாட்டங்களை நடத்துகிறார்கள். இப்படியான நெட் ஒர்க்குகள் பற்றி ஓரிரு ஆண்டுகளாக புகார்கள் வருகின்றன.அதிலும் கொரானா காலத்தில் இந்தப் புகார்கள் மிகுதியாகி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேடிப் போனால் போதிய ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அநேகமாக இப்படி வீடு எடுத்து தங்குபவர்கள் இப்படி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் வந்தவர்களோ என்று சந்தேகப்படுகிறோம். இந்த ரீதியில் இப்போது சோதனை நடத்தி வருகிறோம்!’’ என்று தெரிவித்தனர்.