தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து காங்., எம்.பி., ராகுல், மேற்குவங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல்: மோடி அரசின் ஜீரோ பட்ஜெட். மாத சம்பளதாரர்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, ஏழைகளுக்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு குறு நிறுவனங்களுக்கு என்று எதுவும் இல்லை.
காங்கிரஸ் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே: இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கானது. இதில் ஏழைகளுக்கென எதுவுமில்லை. இது மகாபாரதப்படி உருவான பட்ஜெட் அல்ல. அர்ஜூனா, துரோனாச்சாரியருக்கானது. ஆளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்கள் பயன் பெறுவர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி: சராசரி மக்களுக்கு மத்திய பட்ஜெட் ஜீரோ. வேலையின்மை, பணவீக்கத்தால் நசுக்கப்பட்டு வரும் பொதுமக்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்த ஒரு நன்மையும் இல்லை. பெகாசஸ் விவாதத்தில் இருந்து திசைதிருப்பும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி., சசிதரூர்: இதுவரை கவலைக்குரிய விஷயமாக இருந்த டிஜிட்டல் கரன்சியில் மத்திய அரசு கவனம் செலுத்த துவங்கி உள்ளது தெளிவாகி உள்ளது. ஆனால், பட்ஜெட்டில் சாமானிய மக்கள் குறித்து கவலைப்படாதது குறித்து வருந்துகிறோம்.
பா.ஜ., எம்.பி., ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்: சாமானிய மக்களுக்கு சிறப்பான பட்ஜெட். உள்கட்டமைப்பில் 36 சதவீத நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும். நமது பணத்தை நாட்டிலேயே வைத்திருப்பதற்கான பூஸ்டர் நடவடிக்கையாக உள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ: இது சிறந்த பட்ஜெட். ஏழைகள், கிராமப்புறம், எல்லைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகள் வசிக்கும் மக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
காங்., செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜூவாலா: நிதியமைச்சரும், பிரதமரும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர். சம்பளத்தாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.
மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி: இது ஒரு முற்போக்கான பட்ஜெட். உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், எதிர்கால மேம்பாடு ஆகியவற்றில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது. வடகிழக்கு, அதன் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்: இது சாமானியர்களுக்கான பட்ஜெட்; நிதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பட்ஜெட்டை பாராட்டியுள்ளார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்: அனைத்து பிரிவினருக்கும் குறிப்பாக விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் பயன்பெறுகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு 60 லட்சம் வேலை வாய்ப்புகள், மிஷன் சக்தி போன்ற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் போன்ற முக்கிய அறிவிப்புகள் நமது பொருளாதாரத்தை உயர்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிகேஎஸ் இளங்கோவன் , திமுக எம்.பி.,; பட்ஜெட் மாநில உரிமையை பாதிக்கும் விதமாக உள்ளது. ஒரே நாடு, ஒரே பத்திரம் என்பது மாநில அரசின் வருவாயை பாதிக்கும். இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கென எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.