மதுரை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

WhatsApp-Image-2023-04-30-at-6.18.13-PM.jpeg

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், கடந்த பத்து நாட்களாககுடிநீர் வழங்காததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில், வாடிப்பட்டி சாலையில் உள்ள பசும்பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடந்த பத்து நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில், உள்ள பசும்பொன் நகர், சோலை நகர் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என்றும், இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோழவந்தான் வாடிப்பட்டி மெயின் சாலையில் மறியல் நடைபெற்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து, இந்த பகுதி பொதுமக்கள் கூறும் போது: தற்காலிக நிவாரணமாக இந்த பகுதியில் உள்ள சின்டெக்ஸ் உள்ளிட்டவைகளை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த , சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் கேபிள் மணி ஜெயபிரகாஷ் கவுன்சிலர் சண்முக பாண்டியராஜா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், தற்காலிகமாக மறியலை கைவிட்டு சென்றனர்.

மறியல் நடந்த போது, பேரூராட்சி அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். பின்னர் , திமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஆகியோர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும், நாளைக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தனர்.

scroll to top