மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கோடிக்கணக்கில் முறைகேடு – இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு

WhatsApp-Image-2023-05-24-at-19.25.58.jpg

​கோவை பாலக்காடு ரோடு மதுக்கரை மார்க்கெட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.  பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க இந்த கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.  இந்த நிலையில் இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தரப்பில் இருந்து ஏராளமான  புகார்கள் குவிந்தன. இது தொடர்பான புகார்கள்  தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் பக்தர்கள் தரப்பில் இருந்து ஏராளமான  அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் முன்னாள்  நிர்வாகிகளில் ஒருவரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் திருக்கோவில்  நிர்வாக அலுவலருமான தொழிலதிபர் சி.கே.கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, “நான் எட்டிமடை எல்லை மாகாளியம்மன் திருக்கோவில் நிர்வாக அறங்காவலராக உள்ளேன். அந்த கோவிலில் நான்  சிறப்பாக செயல் படுவதை பார்த்து என்னை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகியாக நியமித்தனர்.

எனது பணிக்காலத்தில் எனது சொந்த பணத்தில் தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு தண்ணீர் தொட்டி, பக்தர்கள் ஓய்வு எடுக்க  இரண்டு இளைப்பாரும் மண்டபங்கள் கட்டிக் கொடுத்து உள்ளேன்.  சித்ரா பெளர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக பணிகளை செய்து வந்தேன். கோவில் நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் வருமானம் முழுவதையும் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஒருவரை கொண்டு  கணக்கிட்டு முறைப்படி தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று  கூறினேன். ஆனால் இதை தற்போது கோவில் நிர்வாகிகளாக இருக்கும் கிருஷ்ணசாமி, அரசு பஸ் ஓட்டுனர் திருமூர்த்தி, கோவில் பூசாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆடிட்டர் எல்லாம் அவசியம் இல்லை, அரசுக்கும் கணக்கு கொடுக்க தேவையில்லை என்று கூறினர். மேலும் அவர்கள்  தமிழக அரசு கோவில் களுக்காக   வகுத்து வைத்து உள்ள சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பது இல்லை. இதை தவறு என்று சுட்டிக்காட்டி நேர்மையாக செயல் பட்ட என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆட்களை வைத்து மிரட்டலும் விடுத்தனர். அரசு பஸ் ஓட்டுனராக இருக்கும் கோவில் நிர்வாகி திருமூர்த்தி பக்தர்களிடம் அடாவடியாக செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும்  பக்தர்கள் தரும்  காணிக்கைகளை அண்டாவில் அள்ளி சென்று தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அன்னதானத்திற்கு பக்தர்கள் தரும் மளிகை பொருட்கள், காய்கறிகளையும் தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்து செல்கின்றனர்.மேலும் பக்தர்களிடம் வசூல் செய்யும் நன்கொடை தொகைகளுக்கு எந்த வித ரசீதும் தருவது இல்லை. மேலும் கோவில் கட்டுமான பணிகளுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் சிமெண்ட் மூட்டைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள் . கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கில் நடந்து வரும் இந்த முறைகேடுகளை தமிழக அரசு கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி கோவில் பணத்தில் முறை கேடாக சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரான சிவராஜ் உடன் இருந்தார்.

scroll to top