கிழக்கு மண்டல ஆய்வு கூட்டத்தில் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தில் நடக்கும் குளறுபடிகளை கவுன்சிலர் கோவை பாபு சுட்டிக்காட்டி பேசினார். பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் மாரிச்செல்வி முன்னிலை வகித்தார். 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபுபேசுகையில்,”கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர், குமுதம் நகர், சூர்யா நகர், சக்தி கணேஷ் நகர், சேரன் மாநகர் மற்றும் சில குடியிருப்பு பகுதிகளில், குடிநீர் விநியோகம் மிக குறைவான அழுத்தத்தில் செல்கிறது. இதற்கு காரணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் நேரடியாக By-pass வழியாக தண்ணீர் விநியோகம் செய்வதுதான் என்பதை சுட்டி காட்டினார். குமுதம் நகரில் 6 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் 1 இலட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், கிணற்றில் நீர் எடுப்பது போல் தொட்டிக்குள் கயிறு கட்டி தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ” என்றார். பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாநகராட்சி உதவி பொறியாளர் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
மண்டல ஆய்வு கூட்டத்தில் சேரன்மாநகர் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்: நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
