‘‘மக்கள் படும் துன்பம் தெரியாமல் வரி உயர்வு செய்வதா?’’ : கருணாநிதியை மேற்கோள்காட்டிப் பேசிய அதிமுக கவுன்சிலர்

vlcsnap-2022-04-11-17h51m33s190-copy.jpg

THE KOVAI HERALD

முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னொரு காலத்தில் சொன்ன திருக்குறளையே மேற்கோள் காட்டி மாநகராட்சியில் அமல்படுத்த இருக்கும் 100 சதவீத, 150 சதவீத வரி உயர்வை கண்டித்து பேசியிருக்கிறார் அதிமுக கவுன்சிலர் ஒருவர். அதனால் மாமன்ற கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டு இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் அக்கவுன்சிலர்.
கோவை மாநகராட்சி முதல் மாமன்ற சாதாரண கூட்டம் விக்டோரியா கூட்ட அரங்கில் கடந்த 11-ந்தேதி நடந்தது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் ராஜ-கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் கல்பனா தலைமை தாங்கி திருக்குறளை வாசித்து அதன் விளக்கத்தையும் கூறினார்.
பின்னர் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர். கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில்,
கோவை மாநகராட்சியில் தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சி-னைகளுக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் ஒரு எம்.எல்.ஏ. கூட இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை என்றார்.
அவரின் இந்த பேச்சுக்கு 47&வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி கூறினர். இதனால் அவர் இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில் குப்பைகளை அள்ள சிறு,சிறு வாகனங்கள் வருகின்றது. இதனால் குப்பை தேக்கம் அடைகிறது. சிறு, சிறு வாகனங்களுக்கு பதிலாக ஒரு டிப்பர் லாரி கொண்டு வந்தால் 4 வாகன-ங்களில் அள்ளக்கூடிய குப்பையானது ஒரே வாகனத்தில் அள்ளி செல்லப்படும்.
மேலும் கவுன்சிலர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. சென்னையில் வார்டு கவுன்சிலர் களுக்கு ரூ. 30 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதேபோல் கோவையிலும் ஒதுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், ‘தமிழக அரசின் அரசாணையின்படி கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். உங்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்!’ என்றார்.
கூட்டத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்த 47 -வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் பேசிய போது கடந்த 10 மாதங்களாக மாநகராட்சியில் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்-படவில்லை என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, அ.தி.மு.க ஆட்சியில் தான் எந்த பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கடந்த 10 மாதங்களாக தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. திமுக ஆட்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். தவறான தகவலை தர வேண்டாம் என்றார்.
இதனால் அ.தி.மு.க கவுன்சிலர் பிரகாரனுக்கும், தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கவுன்சிலர்களை சமாதானம் செய்தனர்.
தொடந்து கவுன்சிலர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். குப்பைகள் தேங்காமல் அகற்றப்பட வேண்டும். குப்பைகளை கொண்டு செல்ல புதிய வாகனங்களை வாங்க வேண்டும். சாக்கடைகளில் அடைப்பு இல்லாமல் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு போதுமான உபகரணங்களை கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் கல்பனா, கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், என்றார்.
இக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 15 வது ஒன்றிய நிதி ஆணையம் 2022&2023&ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் பெறுவதற்கு மொத்த ஆண்டு மதிப்பில் சொத்து வரி விகிதம் எவ்வளவு என அறிக்கை வெளியிட வேண்டும். மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி வசூலில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் 2.0, அம்ரூட் திட்டம் 2.0 ஆகிய திட்டங்களுக்கு நிதி பெறுவதற்கு சொத்துவரி செய்வது அவசியமாகிறது. எனவே மாநகராட்சி சொத்துவரி சீராய்வு செய்வதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி ஏற்றப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் இட, அங்கே கடும் அமளி ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் இருந்த இடம் நோக்கிப் பாய்ந்து சென்றனர். இதன் உச்சகட்டமாக தீர்மான நகலை கவுன்சிலர் பிரபாகரன் கிழித்து எறிந்தார். தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் மூவரும் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மீடியாக்களுக்கு ஆவேசம் ததும்ப பேட்டியளித்தார் பிரபாகரன்.
‘‘கோவை மாநகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நூறு சதவீதம் வரி உயர்வு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள். அதை தட்டிக் கேட்கப் போன அதிமுக உறுப்பினர்கள் எங்களை தகாத வார்த்தைகள் பேசி சபை நாகரீகமில்லாமல் நடந்து கொள்கிறார்கள் திமுக மாமன்ற உறுப்பினர்கள். @வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு’ என்ற குறளை மேற்கோள் காட்டி ஒரு முறை தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலினின் தந்தையார் கருணாநிதி விளக்கம் கொடுத்திருக்கிறார். எப்படீன்னா, ‘ஆட்சியில் உள்ளவர்கள் மக்களை சரியாக புரிந்து கொள்ளாமல், அவர்கள் வருமானத்தை அறிந்து கொள்ளாமல், அதிகாரத்தை பயன்படுத்தி கூடுதல் வரி அல்லது வேறு பொருள் கேட்டு நிற்பது, வழிப்பறி கொள்ளைக்காரன், வேல் போன்ற ஆயுதங்களை கொண்டு மக்களிடம் பணம் பறிப்பதற்கு சமமாகும்!’ என்று சொல்லியிருக்கிறார்.
திமுகவின் இனமானம் இதுதானான்னு தெரியலை. 600 சதுர அடிக்கு அதிகமான அளவுள்ள வீடுகளுக்கு 75 சதவீதம் மற்றும் 100 சதவீதம் வரி உயர்வை சொல்லியிருக்கிறார்கள். கோவை மாநகராட்சியில் 600 சதுர அடிக்கு குறைவாக வீடு வைத்துள்ளவர்கள் மிகக்குறைவே. அது போக வணிகப்பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150 சதவீத வரி உயர்வை செய்கிறார்கள். மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான திமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரும் இந்த வரி உயர்வை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள்.
இதுதான் இவர்கள் ஓட்டுப் போட்ட மக்களுக்கு செய்யும் நன்றிக் கடனா? இப்போதுதான் மக்கள் கொரானாவின் பாதிப்பிலிருந்து மெல்ல, மெல்ல மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த கொரானா எப்போ, எப்படி வரும்ன்னும் தெரியலை. அந்த பயம் வேற இருக்கு. தப்புச்சோம், பிழைச்சோம்ன்னு ஜனங்க மூச்சு விடறதுக்குள்ளே 100 மடங்கு, 150 மடங்கு வரி உயர்வு அறிவிக்கிறாங்களே. இவர்கள்தான் மக்கள் மனநிலையை புரிந்தவர்களா?
ஏன் வரி உயர்வுன்னு கேட்டா மாநகராட்சிக்கு பட்ஜெட்டில் 444 கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்குன்னு சொல்றாங்க. ஆனா இந்த வருஷம் சுமார் 350 கோடி ரூபாய் இதே மாநகராட்சி வீட்டு வரிவசூலை மட்டும் செஞ்சிருக்கு. ஒரு அரசு ஊழியர்கள் போல் நடக்காமல், தனியார் பைனான்ஸ்காரங்க மாதிரி வீடு, வீடா, கடை, கடையாய் போய் குடிநீர் குழாயை கட் பண்ணுவேன்னு மிரட்டியே வரி வசூல் செஞ்சிருக்காங்க. அந்த பணத்தை வச்சுட்டு புதுசா இப்ப 440 ரூபாய் தேவைன்னு வரி உயர்வு போடறாங்களே, இந்த பணத்தை என்ன செய்யப் போறாங்க?
இது வரி உயர்வு அல்ல; வரித் திணிப்புதான். மக்கள் எல்லா வகையிலும் இவங்ககிட்ட துன்பப்படணும். அதை தட்டிக் கேட்டா ரகளை செய்வதா? முதலமைச்சர் என்ன எழுதிக் கொடுத்தாரோ, அதை அப்படியே இவங்க படிக்கிறாங்க. பெட்ரோல் முதற்கொண்டு எல்லா விலைவாசியும் ஏறி நிற்கிற இந்தக் காலத்துல வரியை ஏத்தறது எந்த வகையில் நியாயம்.
வரியை ஏற்ற வேண்டியதுதான் அதுவும் கொஞ்சமா மக்களோட நிலைமையை கருதி, சிறிது காலம் கழித்து, கொஞ்ச கொஞ்சமா செய்யலாம்ல? அதை காதுல போட்டுக்காம வரி உயர்வை செஞ்சுதா தீருவேன்னா என்ன அர்த்தம்? இந்த வரி உயர்வு செய்யும் திமுக அரசுக்கு வருங்காலத்தில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்!’’

KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top